தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பகுதி 6.7

6.7 அறிவியல்

உலகில் இருப்பவற்றை, இயற்கை முறைமைகளைக் கவனித்தும்
சோதித்தும் நிரூபித்தும் பெறும் அறிவு அல்லது அறிவை
வரிசைப்படுத்திய துறையை அறிவியல் என்று அழைப்பர்.

இயற்கை முறைமைகளைக் கவனித்தும் சோதித்தும் நிரூபிப்பதன்
குறிக்கோள்     அல்லது     அடிப்படை     என்ன என்று
எண்ணுவோமானால் அது உண்மையைக் கண்டுபிடித்தலே ஆகும்.
எனவே அறிவியல் என்றால் என்ன என்ற வினாவிற்கு உரிய
விடையாக ‘உண்மையைத் தேடுதல்’ (Persuit of truth) என்று
விளக்கம் கொடுப்பார்கள். இந்த அறிவியல் அடிப்படையை
வள்ளுவர் அறிந்திருக்கிறார்.


6.7.1 அறிவியல் அணுகு முறை

அறிவியல் ஆய்வு நெறி முறையை நான்கு நிலையாகக்
குறிப்பர். அவை முறையே கூர்ந்து கவனித்தல் (Observation)
கருதுகோள் (Hypothesis), சோதனை (Test). முடிவு (Result)
என்பவையேயாகும்.

ஓர் அறிவியலறிஞன், இயற்கையில் இருக்கும் ஒருபொருளைக்
கூர்ந்து கவனிப்பான். கூர்ந்து கவனிக்கும் போது சில ஐயங்கள்
ஏற்படும். அதன் வாயிலாக ஒரு கருதுகோள் உருவாகும். அதைச்
சோதனை செய்யும் போது ஒரு முடிவு தெரியும். இந்த முடிவு
உண்மையாக இருக்கும். யார் இந்த ஆய்வை மேற்கொண்டாலும்
முடிவு ஒன்றாகத்தான் இருக்கும். இதையே அறிவியல்
கண்டுபிடிப்பு என்கின்றனர். இந்த அறிவியல் உண்மையை
அறிந்திருக்கிறார் வள்ளுவர். எனவே, உலகப் பொருள்களின்
மெய்ம்மையை அதாவது உண்மையை அறிதல் பற்றிக் குறிப்பிட
எண்ணிய வள்ளுவர்,


எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு


(குறள்: 355)


(எத்தன்மைத்து = எந்த இயல்பினதாக இருந்தாலும்)

என்று குறிப்பிடுகிறார்.

எந்தப் பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும், அந்தப்
பொருளின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்டும்.
அது தான் உண்மையான அறிவு என்பது இக்குறளின் பொருள்.
இந்தக் குறளில் வள்ளுவர் எந்தக் கருத்தை வெளிப்படுத்துகிறார்?.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்தப் பொருளின் உண்மைத்
தன்மையை அறிந்து கொள்ளுவதற்குள்ள எல்லா வித
முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும். அதைக் கூர்ந்து கவனித்து,
அதனால் தாம் கொண்ட ஐயத்தைப் போக்கும் வகையில் நன்கு
சோதித்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். வள்ளுவர்
சொல்லிய இக்கருத்து, அறிவியல் அணுகு முறையைச் சார்ந்தது.

• நியூட்டன்
தன் தலைக்கு மேல் தொங்கிய ஆப்பிள் பழம், நிலத்தில்
விழுந்ததைக் கூர்ந்து கவனித்த     நியூட்டன் என்னும்
அறிவியலறிஞனுக்குப் பழம் மேல் நோக்கிச் செல்லாமல், ஏன்
கீழே நிலத்தில் விழ வேண்டும் என்ற ஐயம் ஏற்பட்டது. தன்
ஐயத்தைப் போக்க விரும்பி அவன் ஆய்வு மேற்கொண்டான்.
அந்த ஆய்வின் வாயிலாக, ஆப்பிள் கீழே நிலத்தில் விழுவதற்குக்
காரணம் புவிஈர்ப்பு ஆற்றல் (Centre of gravity) என்ற
உண்மையைக் கண்டுபிடித்தான்.

ஆப்பிள் கீழே விழுவதைப் பற்றிப் பலரும், பலகாலமாகப் பல
கதைகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் கூற்றை
நியூட்டன் நம்பாமல், தன் முயற்சியினால் செய்த ஆய்வின்
வாயிலாக உண்மையை அறிந்தான். வள்ளுவரும் யார் எதைச்
சொன்னாலும் அதை நம்ப வேண்டியதில்லை. நீ உன் முயற்சியினால்
உண்மையைக் கண்டுபிடி என்று இன்னொரு குறளிலும் கூறுகிறார்.

இவற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால்,
வள்ளுவர் அறிவியல் அணுகு முறையை அறிந்துள்ளார்
என்பதேயாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)