Primary tabs
4.3 பாணனுக்கு வழிகாட்டுதல்
வள்ளல்
நல்லியக்கோடனின் தலைநகரம் ஓய்மா நாட்டில் இருந்த
கிடங்கில் என்னும் ஊர். வறுமையுற்ற பாணனை அவ்வூருக்கு
ஆற்றுப்படுத்துகிறான் (வழி கூறுகிறான்) பரிசு பெற்ற பாணன்.
தலைநகரான கிடங்கில் என்னும் ஊருக்குச் செல்லும் வழியில்
எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய நகரங்கள் உள்ளன.
இந்நகரங்களும் இம்மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளே
ஆகும்.
இந்நகரங்களில் வாழ்ந்து வரும் மக்கள், அவர்தம் பழக்க
வழக்கங்கள், நில அமைப்பு, மக்கள் அன்போடு அளிக்கும் விருந்து
(உணவு) முதலானவை மிகத் தெளிவாகவும் சுவையாகவும்
கூறப்பட்டுள்ளன. இந்நகரங்களைப் பற்றிய இச்செய்திகள் மிக
விரிவாக
143 முதல் 195 வரையிலான அடிகளில் எடுத்துக்
கூறப்பட்டுள்ளன.
எயில்
= மதில், பட்டினம் =
கடற்கரை நகரம். மதில் நகரம்
அல்லது
கோட்டை நகரம். அதாவது கோட்டைகள் சூழ்ந்த கடற்கரைப்
பட்டினம் என்பது பொருள். இவ்வூரின்கண், நீலவானத்தை ஒத்த
அழகிய கடல் உள்ளது. இதன் கடற்கரையில் தாழை மலரானது
அன்னம் போன்று மலர்ந்தது; செருந்தி பொன்போல் பூத்தது;
புன்னை மரம் முத்துக்கள் போல் அரும்பெடுத்தது; கரையிடத்து
உள்ள வெள்ளிய மணல் பரப்பில் கடல் பரந்து ஏறுகின்றது.
இத்தகைய நெய்தல் நிலத்தின் வழிநெடுக
உப்பங்கழிகள் சூழ்ந்த
ஊர்கள் உள்ளன. இக்காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தவாறே சென்றால்
மதில்களால் சூழப்பட்டதும் பொய்கைகள் நிறைந்ததுமான
எயிற்பட்டினத்தை
அடையலாம் என்று பரிசு பெற்ற பாணன் வறிய
பாணனிடம் கூறினான்.
விருந்து
எயிற்பட்டினத்தில் கடல் அலைகள் கொண்டு வந்து ஒதுக்கிய
அகில் மரக் கட்டைகள் உறங்குகின்ற ஒட்டகங்கள் போன்று கிடந்தன.
அத்தகைய அகில் மர விறகினால் தீ மூட்டிக் காய்ச்சி அரித்த
(வடிகட்டிய) தேறலை (கள்) மீனவப் பெண்கள் மீனவர்களுக்கு
உணவாகக்
கொடுப்பர். விறலியரோடு செல்லும் நீங்கள் கிடங்கில்
கோமானைப் (நல்லியக்கோடனை) பாடியும் குழல் ஓசைக்கு ஏற்ப
ஆடியும் செல்லும் பொழுது அப்பரதவரின் வீடுகள் தோறும்
அவர்கள் மகிழ்ந்து கொடுக்கும்
குழல் மீன் சூட்டைப் (ஒரு வகை
சுட்ட மீன்) பெற்று உண்டு மகிழலாம்.
இச்செய்திகள்
146 முதல் 163 வரையில் உள்ள அடிகளில்
சுவைபடக் கூறப்பட்டுள்ளன.
பாணனே, நெய்தல் பட்டினமாகிய (கடற்கரை நகரம்)
எயிற்பட்டினத்தைக் கடந்து சென்றால், முல்லை நிலப் பகுதி (காடுகள்
நிறைந்தது) வழியிடை வரும். அப்பகுதியில் அமைந்துள்ள வேலூரை
அடையலாம்.
வேலூரின் வளம்
வேலூர்
வளம் நிறைந்த ஊர். அவரைக்கொடி பவழம் போல்
பூத்து விளங்கும். கருமையான நிறம்
கொண்ட காயாம் பூக்கள்
மயிலின் கழுத்துப் போன்று மலர்ந்திருக்கும்.
முசுண்டைச்
செடியில், பனை ஓலையால் பின்னப்பட்ட கொட்டம்
(சிறு பெட்டி) போன்று பூக்கள் மலர்ந்திருக்கும். செங்காந்தள்
மலர்கள் கைவிரல்கள் போன்று பூத்திருக்கும். செல்லும் வழிகள்
எல்லாம் இந்திர கோபம் எனும் பூச்சிகள் ஊர்ந்து செல்லும்.
முல்லைக் கொடிகள் படர்ந்து கிடக்கும் அழகிய காட்டிடத்தே
மலைகளில் இருந்து அருவிகள் வீழ்ந்தோடும் வளம் மிக்க ஊர்
வேலூர்.
விருந்து
பாணனே!
இத்தகைய முல்லை நிலப்பகுதி வழியாக,
பகல்
பொழுதில் சென்று கொண்டே இருந்தால் மாலைப் பொழுதில்
வேலூரைச்
சென்று அடையலாம். அங்கு, உள்ளேயிருப்போரை
வருத்தும் வெப்பம் மிகுந்த குடிலில் (குடில் - வீடு) முல்லை நில
மக்களாகிய எயினர்கள் இருப்பர். அக்குலப் பெண்கள் (எயிற்றியர்)
தாங்கள் சமைத்த மான் இறைச்சி கலந்த புளியஞ்சோற்றை உனக்கு
வழங்குவார்கள். அவ்விருந்தையும் நீ உண்டு மகிழலாம்.
இச்
செய்திகள் 164 முதல் 177 வரையிலான அடிகளில் சிறப்பாக
விவரிக்கப்பட்டுள்ளன.
சிறுபாணனது வழிகாட்டுதலில்
முதலில் நெய்தல் நிலத்து
எயில்பட்டினமும், அதனை அடுத்த முல்லை நிலத்து வேலூரும்
கூறப்பட்டன. அதனை அடுத்து வயல்கள் நிறைந்த மருத நிலப்
பகுதியில் அமைந்துள்ள ஆமூர் வழியிடைத் தோன்றும் என்பது
விவரிக்கப்படுகிறது.
ஆமூரின் வளம்
நீர்
வளமும், நில
வளமும், நெல் வளமும் நிரம்பப் பெற்ற ஊர்
ஆமூர் ஆகும்.
அவ்வூரின்கண் பூமாலைகள் கட்டித் தொங்க
விடப்பட்டதைப்
போன்று பூங்கொத்துகள் தொங்கும் காஞ்சி மரங்கள்
வளர்ந்தோங்கி
நிற்கும். அம்மரத்தின் கிளைகளில் தங்களுக்கு
உணவாகும் மீன்களை எதிர்பார்த்து, சிச்சிலிப் பறவைகள் அமர்ந்து
இருக்கும்.
அப்பறவைகளால்
கிழிக்கப்பட்ட
இலைகளையும், நீண்ட
தண்டினையும் கொண்ட தாமரையினின்றும் மொட்டுகள்
அவிழ்கின்றன. மலர்ந்த தாமரை மலரின் தேனை உண்ண வண்டுகள்
வந்து குவிந்துள்ளன.
தேனை உண்ண வந்த வண்டுகளின் வரிசை
தாமரை மலரை மொய்த்துள்ளமை நிலவை விழுங்க வந்த கரும்பாம்பு
போல் உள்ளது என்று நத்தத்தனார் உவமை நயம்படக் கூறுகிறார்.
பாணனே! இக்காட்சியை எல்லாம் பார்த்துக்
கொண்டே சென்றால்
ஆமூர் வந்து சேரும்.
விருந்து
ஆமூர்
குளிர்ந்த வயல்களை உடையது;
சான்றோர்களை
உடையது; மிக்க காவலைக் கொண்டது; பெரிய
வீடுகளை உடையது;
ஆழமான அகழிகளைக் கொண்டது. இத்தகைய வளம் மிக்க ஊரில்
மருதநில மக்களாகிய உழவர்களும் உழத்திகளும் வாழ்ந்து
வருகின்றனர்.
உழவர்கள்
வலிமையான எருதுகளை உடையவர்கள். உழத்தியர்,
பெண் யானைகளின் துதிக்கையைப் போன்ற பின்னல்
கிடக்கும் முதுகினையும், வளையல் அணிந்த கையினையும் உடையவர்;
இவர்கள் தங்கள் இல்லத்தின் உள்ளே
இருந்துகொண்டு தங்கள்
மக்களால் உன்னையும் உன் சுற்றத்தையும் அன்புடன் வரவேற்பர்.
மருத நில வாழ் மக்கள் விருந்து உபசரிப்பதில் தலைசிறந்தவர்கள்.
ஆதலால், உழத்தியர் வெண்மையான அரிசிச் சோற்றை நண்டின்
கறியுடன் சேர்த்து உங்களுக்கு விருந்து அளிப்பர். இச் சோற்றை
உண்டு மகிழலாம்.
இச்செய்திகள்
178 முதல் 195 வரையிலான அடிகளில் அழகு
நயம்படக் கூறப்பட்டுள்ளன.