தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கலை கலைக்காகவே என்ற வாதம்

5.1 கலை கலைக்காகவே என்ற வாதம்

    கலை, கலைக்காகவே என்ற கேள்வியை மையங்கொண்ட வாதம், பல வடிவங்களில், படைப்பாளர்களின் மனங்களில் உறைந்து கிடக்கிறது. ஏன் எழுதுகிறோம், நாம் எழுதுவது என்ன செய்கிறது என்ற சிந்தனை, எழுதுகிறவனுக்கு இருக்கும்; அவ்வாறிருந்தால் தான், அவனுடைய இலக்கு சரியாகவும் இருக்கும்.

    கலை, கலைக்காகவே என்ற வாதம், நம்முன் சில பிரச்சனைகளை முன் வைக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.

(1)

கலை, இலக்கியம் என்பது அழகாகவும் நேர்த்தியாகவும் செய்யப்படுவதே அல்லாமல், அதற்கு என்று செயல்பாடு கூறுவது சரியாகுமா: இந்தக் கேள்வி, கலையின் இலக்குப் பற்றிப் பேசுகிறது. இலக்கு, கலையோடு முடிந்துவிடுகிறதா அல்லது அதற்கு அப்பாலும் செல்கிறதா.

(2)

கலைகளைக் காண்பவர் அல்லது கேட்பவர் அல்லது வாசிக்கிறவர் அந்தக் குறிப்பிட்ட கலையின் பக்கம் ஏன் செல்லுகிறார்? என்ன எதிர்பார்த்துப் போகிறார்? என்ற கேள்வி, முக்கியமானதாகும். மேலும் அவ்வாறு அவ்வாசகர், எதிர்பார்த்துப் போவது, கிடைக்கிறதா என்ற கேள்வியும் இதன்போது எழக்கூடும்.

(3)

கலையின் நோக்கு அல்லது கலைஞனின் நோக்கு என்று உண்மையில் இருக்கிறதா? அப்படியானால் அது என்ன? கலைஞன் இதனை வெளிப்படையாகச் சொல்லுவதில்லை; கலையின் மூலமாகவே வெளிப்படுத்துகிறான். அப்படியானால் அவ்வாறு வெளிப்படுவது என்ன? இந்தக் கேள்விகளும் உடன் எழுகின்றன. இவற்றிற்குரிய பதில்கள் தனித்தனியாகச் சொல்லப்பட வேண்டியதில்லை; ஆனால் வாதத்தின் பல நிலைகளிலும் இவை ஊடுசரடாக இருக்கின்றன.

5.1.1 கொள்கை விளக்கம்

    கலை, கலைக்காகவே என்ற நிலைப்பாடு அல்லது கொள்கை அடிப்படையில் தனது நிலைப்பாடாக என்ன சொல்லுகிறது.

(1)

கலையில் உருவம் உள்ளடக்கம் என்ற இருபகுதிகள் உண்டல்லவா அவற்றிலே உருவமே பிரதானம் என்று சொல்லுகிறது, இது. உருவகத்தின் அல்லது வடிவத்தின் அழகும் நேர்த்தியுமே, கலையின் பண்பைத் தீர்மானிக்கிறது. கலையென்றால் இத்தகைய கலையியல் பண்பேயாகும். இதுவே கலையின் தகுதியையும் தரத்தையும் தீர்மானிக்கிறது. இவ்வாறு அக்கொள்கை கூறுகின்றது.

(2)

கலையில் அழகையும் அது தரும் ரசனையையும் தவிர, வேறு ஒன்றையும் தேடக் கூடாது. எல்லாம் உள்ளே அகவய நிலையில் இருக்கிறது.

(3)

எனவே, கலை இலக்கியத்தில் அது கூறும் செய்தி பற்றியோ அதனுடைய தன்மை அல்லது தகுதி பற்றியோ பொருட்படுத்தக் கூடாது என்றும் இது கூறுகிறது.

(4)

மேலும், இலக்கியம் குறிப்பிட்டதொரு வாழ்க்கையை, வாழ்க்கை நிலையைச் சித்தரிக்கின்றது என்று சொல்லப்படுகிறது அல்லவா இக்கொள்கை அத்தகைய கருத்தினுக்கு வரக்கூடாது, இடம் தரக் கூடாது என்று சொல்லுகிறது.

(5)

கலை இலக்கியம், குறிப்பிட்ட மனநிலை மாற்றத்திற்கு உதவும் என்ற கருத்தினையும் இது மறுக்கிறது. ஓர் இலட்சியம் வாழ்க்கைத் தேடல் போன்றவற்றை இலக்கியத்தில் பார்க்கக் கூடாது என்றும் இந்தக் கொள்கை கூறுகிறது.

(6)

கலை உயர்வானது; அது புனிதமானது; வேறு எதனையும் வேண்டாதது. அதாவது தன் அளவில் அது முழுமையானது (Complete in itself); கலைஞனும் உயர்வானவன் என்று இந்தக் கொள்கை கூறுகிறது.

    சுருக்கமாகச் சொன்னால் கலை (இலக்கியம்) அழகால் ஆனது; அழகை அனுபவிப்பதற்காகவே கலை இருக்கிறது; அதிலே, வாழ்க்கையையோ அதாவது வாழ்க்கை பற்றிய சித்திரத்தையோ எதிர்பார்க்கக் கூடாது என்பது இதன் அடிப்படையாகும்.

5.1.2 எதிர்நிலைப் பார்வை

    கலை, கலைக்காகவே என்ற கொள்கை, அகவய நிலைப்பட்டது. இதற்கு நேர்மாறான கொள்கை, பயன்பாட்டுக் கொள்கை (utility or Pragmatism) ஆகும். கலை, பிரச்சாரத்துக்காகவே இருக்கிறது. நீதி சொல்லுவதற்காகவே இருக்கிறது என்பது இந்தக் கொள்கை. இது, கலையில் வடிவம் அல்லது உருவம் என்ற பகுதியை அலட்சியப்படுத்துகிறது. அழகு, செய்ந்நேர்த்தி, கலையியல் அனுபவம் முதலியவற்றைப் புறந்தள்ளுகிறது. நேரடியாக நமக்கு எதுவும் அது சொல்லுகிறதா, படிப்பினை தருகிறதா, நம்முடைய நடைமுறைகளுக்குப் பயன்விளைக்கிறதா என்று பார்க்குமாறு அது தூண்டுகிறது. ஆசாரக் கோவை, ஏலாதி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது     முதலிய நீதிநூல்கள் மாதிரி, நீதிவிளக்கங்களை மையமாகக் கொண்டிருப்பதை இக்கொள்கை போற்றுகிறது.     இலக்கியம் பக்தி இலக்கியமாக, சமய உண்மைகளை, சமய சடங்குகளை, அவற்றின் பெருமைகளை வலியுறுத்துவதாக இருக்கவேண்டும் என்று கருதுகிறது. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் நூல்களுக்கும் மாணிக்கவாசகரின்     பாடல்களுக்கும் இது வித்தியாசம் பார்ப்பதில்லை. பக்தி அல்லது சமயம் என்ற அளவைக்குள் சமமாக அவற்றைப் பாவிக்கிறது. எப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதில்லை.

        
        மாணிக்கவாசகர்

    தமிழில் இத்தகைய நூல்கள் (சோதிடம், மருத்துவம்) முதற்கொண்டு, பல உண்டு. உரைநடை செல்வாக்குப் பெறாத காலத்தில் எல்லாவற்றையும் யாப்பு வடிவத்தில் அல்லது செய்யுளில் சொல்வது வழக்கமாக இருந்தது, இவை செய்யுளில் சொல்லப்பட்டன. எனவே செய்யுளில் சொல்லப்பட்டன எல்லாம் இலக்கியம் அல்ல என்ற பார்வை நமக்கு அவசியம். திறனாய்வுக்கு, அத்தகைய பார்வை இல்லையென்றால் செயல்படவே முடியாது.

    இந்த இருவகைப்பட்ட எதிர்நிலைகளையும், பெரும்பாலான திறனாய்வாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. முக்கியமாக, இரண்டாவதாகச் சொன்ன கலை, பிரச்சாரத்துக்காகவே அல்லது நீதி சொல்லுவதற்காகவே என்ற கருத்து, வலுவிழந்து போன ஒரு கருத்து நிலையேயாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 16:59:00(இந்திய நேரம்)