Primary tabs
3.1 தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதியார் பெறுமிடம்
இருபதாம்
நூற்றாண்டு எல்லாத் துறைகளிலும் மாற்றங்களைப்
பெற்று விளங்குகிறது. தமிழிலக்கிய உலகிலும் எழுச்சியும், ஏற்றமும்,
மாற்றமும் வளர்ச்சியும் தோன்றலாயின. பிறநாட்டு
மொழிகளின்
பெரும் வளர்ச்சியை அறிந்த தமிழறிஞர்கள் தமிழின் வளத்திற்கும்
நலத்திற்கும் பல வகைகளில்
பாடுபட்டுள்ளனர். இந்நூற்றாண்டைத்
தமிழின்
பொற்காலமாக ஆக்கினர். பல்லுடைக்கும் கடுநடை
மறந்து
கவிதைகளில் எளிய நடையினைக்
கையாண்டனர். உரைநடையிலும்
எளிமையும்,
சுருக்கமும் இனிமையும் இடம்பெற்றன. கவிதை
உலகில்
புரட்சியையும் புதுமையையும் கையாண்டு
பாரதியுகம் என ஒரு
காலகட்டத்தை
வகுத்தளித்தவர் பாரதியார். முப்பத்தொன்பது வயதே
வாழ்ந்த
பாரதியார் தொடாத துறையேயில்லை எனலாம்.
முக்கூடற்பள்ளும், குற்றாலக்
குறவஞ்சியும் முறையே உழவர், குறவர்
வாழ்க்கையைச் சித்திரிக்கும் மக்கள் இலக்கியங்களாகத் தோன்றின.
பாமர மக்களும் விரும்பிப் பாடும் வண்ணம் இனிய, எளிய
சொற்களால் நெகிழ்ச்சி வாய்ந்த
நடையில் இவை அமைந்தன.
அண்ணாமலை ரெட்டியார் எழுதிய
சிந்துப் பாடல்கள் பாமர
மக்களின்
கவிதைகளாய் விளங்கின. இவை மூன்றும் பாரதியாருக்கு
முன்னோடி இலக்கியங்கள் எனலாம்.
காங்கிரஸ்
வலுப்பெற்ற காரணத்தினால் நாட்டில் சுதந்திர உணர்ச்சி
பெருகிற்று. மக்கள் விடுதலை வேட்கை உற்றனர். அரசியல்
போராட்டங்கள் தோன்றின. நாட்டு உணர்வும்
சமுதாய
விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டமையால் அரசியல் மக்களுக்குப்
புதிய
மதமாகியது. மக்கள் நிலை பற்றிப் பலர் பேசவும் எழுதவும்
தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில் உருவான பாரதியார் புதிய
கவிமரபைக் கையாண்டார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும்
வகையில் எளிமையாக இனிமையாக எழுதினார். பாரதியார் வகுத்த
பாதையில் தேசிக விநாயகம் பிள்ளை சென்றார். பாரதி தந்த புதிய
மரபைப் பாரதிதாசன் வளர்த்து வளமாக்கினார்.
“அழகு,
சுவை, ரம்மியம் என்பனவற்றுக்கு
இடமாகிய
மனிதர்கள் புளகமுறும்படி செய்யும்
தொழில்களை எல்லாம்
ஆங்கிலேயர்கள் மதுர கலைகள் (Fine Arts) என்று
கூறுகிறார்கள். இக்கலைகள் ஒவ்வொன்றும்
வெவ்வேறு
விதமான பழக்கத்தின் மேலும் பயிற்சியின் மேலும்
ஏற்படக்
கூடிய தென்றாலும் பொதுவாக இவை ஆழ்ந்த
மனக்
கிளர்ச்சி யுடையோரும் வரப்
பிரசாதிகளென்று
கருதப்படுவோருமாகிய பெரியோர்களுக்கே இனிது சாத்தியம்”
என்று
பாரதியார் இந்தியா (8-12-1906) பத்திரிகையில்
குறிப்பிட்டுள்ளார்.
கலை
வடிவம் குறித்த அவரது கருத்தாகவும் இது அமைந்துள்ளது.
ஒரு கலைவடிவத்திற்கு அழகு, சுவை, ரம்மியம் ஆகியவை இருக்க
வேண்டும் என்று பாரதியார் குறிப்பிடுகின்றார். மேலும் அத்தகைய
கலையை உருவாக்குந்திறன் ஒருவனுக்குப் பழக்கத்தினாலும்,
பயிற்சியினாலும் உருவாகக் கூடியது, ஆழ்ந்த மனக்
கிளர்ச்சியுடையோர்க்கும் வரப்பிரசாதிகட்கும்
இத்திறன் அதிகமாக
இருக்கும். எனவே கலைத்திறன் என்பது மனிதச் செயல்பாடு ஆகும்.
விவேகபாநு,
சுதேசமித்திரன், சக்கரவர்த்தி, இந்தியா முதலிய
இதழ்களில் பாரதியார் ஆசிரியராகப்
பணிபுரிந்தார். பத்திரிகை
ஆசிரியராய் இருந்த பாரதி, தொடாத துறையே இல்லை என்று
சொல்லுமளவிற்குப் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வழங்கினார்.
பாரதியார் பாடல்களைத் தேசியப் பாடல்கள், தெய்வப் பாடல்கள்,
சமுதாயப் பாடல்கள், முப்பெரும் பாடல்கள் என நான்கு வகையாகப்
பிரிக்கலாம். மக்களைக் கவரும் எளிய மெட்டுக்களில் உணர்ச்சி
வெள்ளம் பெருக்கெடுத்து ஓட அவர் பாடிய தேசியப் பாடல்கள்
பாரதியை நாட்டிற்கு அறிமுகப்படுத்தின எனலாம்.
பாரதியார்
உலகக் கவிஞர். உலகமக்கள் யாவரும்
ஒன்றுபட்டு
வாழத் தகுந்த உயரிய எண்ணங்களையும், கருத்துகளையும் அவர்
பாடல்களில் காணலாம். அச்சில் படிப்பதைவிட உணர்ச்சியோடு
பாரதியாரின் பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு
என்று காமராசர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமையான
நடையினைக் கையாண்டு ஒரு தனி
மரபினைத்
தனக்கென வகுத்துக் கொண்டார். பாரதியின் எழுத்து நடை சிந்திக்க
வைக்கும் நடை; உணர்ச்சி ஊட்டக்கூடிய நடை. அதனைக் குடிமக்கள்
நடை எனச் சிலர் குறிப்பிடுவர்.