Primary tabs
அண்ணாவின் படைப்புகள் ஒவ்வொன்றும் உரைநடையில்
அமைந்த இலக்கியங்களுக்கு எடுத்துக்காட்டுகள்
ஆகும்.
அண்ணாவின் உரைநடை புதினம், சிறுகதை, பொழிவு முதலிய
எந்த வடிவத்தில் அமைந்தாலும் அந்த வடிவத்தில் இலக்கியக்
கூறுகள் அமைந்திருக்கக் காணலாம்.
அண்ணாவின்
உரைநடையில் அமைந்த இலக்கியக் கூறுகளைப் பின்வரும்
தலைப்புகளில் வகைப்படுத்திக் காணலாம். அவை,.
1) எதுகை,
2) மோனை, 3) உவமை, 4) உருவகம்,
5) சொல்லடுக்குகள்
என்பன.
கவிதையில் வரும் சீர்களில்
இரண்டாம்
எழுத்து ஒன்றி
வருவது எதுகை எனப்படும். உரைநடையிலும்
அடுக்கி வரும்
தொடர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவதை எதுகை
என்று அழைக்கலாம். அண்ணாவின்
எதுகைக்கு ஒரு சிறு
எடுத்துக்காட்டு,
“ஆண்களின் நெஞ்சமே அப்படித்தான். கொஞ்சுவாளோ
என்று கெஞ்சிக் கிடப்பார்கள் ; ஆனால் தஞ்சமென்று
வருபவர்களிடமோ நஞ்சு போல் நடப்பார்கள்” (பார்வதி பி.ஏ.,
புதினம் : ப.161)
மேற்காணும் பத்தியில் வந்த நெஞ்சம்,
கொஞ்சு, கொஞ்சி,
தஞ்சம், நஞ்சு ஆகிய சொற்களில் ஞ்
என்னும் எழுத்து
இரண்டாவதாக வந்து எதுகை நயத்தைத் தருகின்றதல்லவா?
கவிதையைப் போல் உரைநடையில்
சொற்றொடரில்
அமைந்த சொற்களின் முதல் எழுத்துகள் ஒன்றி வருமாறு
அமைப்பதை மோனை என்று கூறலாம். அண்ணாவின்
உரைநடையில் மோனை நயத்தின் முழுமையைக் காணலாம்.
அருந்தமிழில்
அமையும் அண்ணாவின் மோனைகளுக்குப்
பின்வரும் பத்தியைச் சான்றாகக் காண்போம்.
அழிந்து படுமே அன்னிய ஆட்சி
ஏற்பட்டு விடுமே
(தஞ்சை வீழ்ச்சி, ப. 341)
என அமைந்த மோனையைப் பாருங்கள்.
ஒரு பத்தியுள் அமைந்த மோனையைப் பாருங்கள் :
“என்னையா ஏன் என்ற கேட்கத் துணிகிறீர்கள்
என்னிடமா
கேள்விகளை வீசுகிறீர்கள். என்னை
யார் என்று
தெரியவில்லையா! என்னைப் புகழ்ந்தீர்கள், பாராட்டினீர்கள்.
பூசித்தீர்கள். என்னை வருந்தி வருந்தி
அழைத்தீர்கள்
அரசாள ! (காஞ்சி இதழ், செப்டம்பர் 7, 1966, ப.6)
உவமைகள் உரைநடைக்கும் இலக்கிய நயத்தை
வழங்க
வல்லன. அண்ணாவின் உரைநடையில்
காணப்படும்
உவமைகள் மக்களின் வாழ்க்கையோடு ஒட்டிய வகையில்
அமைந்தவை. இத்தகைய உவமைகளே அண்ணாவின்
உரைநடைக்கு வலிமை சேர்க்கக் காரணமாக அமைந்தவை
ஆகும்.
‘ஓரிடத்திலே சாதுவாக இருப்பவன் மற்றொரு
இடத்திலே
சினந்து எழுவான்’ என்னும் கருத்தை உணர்த்த
வரும்
அண்ணா,
“சேலம் ஒகேனக்கல் அருகே ஆடு தாண்டும்
அளவுள்ள
காவேரி, பிறகு அகன்ற காவேரியாக
ஓடுகின்றது.
அதுபோலத்தான் ஓரிடத்தில் சாதுவாகத் தோன்றுபவன்
பிறிதோரிடத்தில் சினத்தின் வடிவாகவே இயங்குகிறான்”
என்று உவமையைப் பயன்படுத்துகிறார். (அம்பும் ராணியும்,
திராவிட நாடு, ஜூன் 11 1961, ப.6)
அண்ணாவின் தம்பியர்,
அகழ்வாரைத் தாங்கும் நிலம்
போலத் தம்மை இகழ்வாரின் சொற்களைத் தாங்கும் இதயம்
உடையவர்களாகத் திகழ வேண்டும் என்பதை விளக்கிடப்
பின்வரும் உவமையை ஆளுகின்றார்.
“எஃகு தயாரிக்க வேண்டிய
முயற்சி மிகப் பெரியது.
இரும்பைக் காய்ச்சி ஊட்டமும் அழுத்தமும் ஏற்றி எஃகு
தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த எஃகு எதையும் தாங்கும்
ஆற்றலும் வலிமையும் பெறுகின்றது. வளைவதில்லை ;
முறிவதில்லை. அதைப்போலவே நமது தம்பிகள் எதையும்
தாங்கும் இதயமுடைய எஃகுக் கம்பிகளாக உருவாக வேண்டும்.
விளங்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
அண்ணாவின்
உவமை நயத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு
சிறப்பு ஒரு கருத்தை வலியுறுத்த உவமைகளை அடுக்கிச்
செல்லுதல் ஆகும்.
“குற்றாலம் சென்று குழாயடியில் குளிப்பதுபோல,
திருக்குளத்தில் இறங்கி பாசியை எடுத்து வருவதுபோல,
சந்தனத்தைக் கரைத்து மாட்டுத் தொழுவத்தில்
தெளிப்பது போல, கரும்பைக் கொண்டுவந்து
அடுப்பெரிப்பது போல...... ......... கழனியை உழுதுவிட்டுக்
கள்ளிச் செடியை நடுவது போல”
என
உவமைகளை அடுக்கிச் சென்று, உயர்ந்த பதவியில்
இருப்பவர்கள் தமது தகுதிக்கு ஒவ்வாத
செயலைச்
செய்கின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
உவமையின் செறிவே உருவகம்
என்பர். தேர்ந்த
இலக்கியப் புலவர்கள் மட்டுமே உருவகத்தை உரிய வகையில்
அமைக்கும் ஆற்றல் பெற்றுத் திகழ்வார்கள். உவமைகளைக்
கையாளும் திறத்தோடு அண்ணா
உருவகத்தைப்
பயன்படுத்துவதிலும் சிறந்து விளங்கினார்.
இந்திமொழித்
திணிப்பை எதிர்த்து அண்ணாவின்
கழகத்தார் மொழி அறப்போரில் இறங்குவதற்கு முன்னரே
அரசு பணிந்து விட்டது. தம்பிகள் மகிழ்ந்தனர்.
இதனை
விளக்கும் அண்ணாவின் உரைநடையில் அமைந்திருக்கும்
உருவகத்தைக் காணுங்கள் :
“களம்புகத் துடித்து நின்ற உனக்கு,
வெற்றிச்சாறு கிடைத்து விட்டது, உண்டு
மகிழ்ந்தாய்; உன் புன்னகைதான் அதற்குச்
சான்று”
என்னும் பத்தியில் தம்பிகள் பெற்ற வெற்றியை
‘வெற்றிச்சாறு’
என்னும் உருவகத்தின் வழி அண்ணா வெளிப்படுத்தியிருப்பது
சிறப்பாக உள்ளது.
சுவைமிக்க சொற்களைக்
கொண்டு உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவதே ‘உருவகம்’ என்னும் கருத்திற்கு ஏற்ப
அண்ணாவின் உருவகங்கள் அமைந்துள்ளன.
அண்ணாவின் உரைநடையில் முதன்மை
பெறுவன
சொல்லடுக்குகள் ஆகும். இச்
சொல்லடுக்குகளும்
அண்ணாவின் உரைநடைக்கு இலக்கியத் தரத்தை நல்கியவை
எனலாம். இவை அண்ணாவின்
சொல்லாட்சிக்கும்
சொற்பெருக்கிற்கும் சிறந்த எடுத்துக்
காட்டுகளாக
அமைந்துள்ளன.
அண்ணாவின் சொல்லடுக்குகள் எண்ணற்றவை. அவற்றிற்கு
ஓர் எடுத்துக்காட்டினைக் காணலாம்.
“பெற்றோம் வெற்றி
- என்ற முழக்கம் குன்றுகளிலும்
குடில்களிலும், அங்காடிகளிலும், அருவிக் கரைகளிலும்,
மாளிகைகளிலும், மலர்ப் பொழிலிலும்,
ஏரடிப்போர்
இருக்குமிடத்திலும், ஏடு படிப்போர்
இருக்குமிடத்திலும்
எழுந்தது” என்ற பத்தியில் அமைந்த சொல்லடுக்குகளில்
சொட்டும் தமிழ்த் தேனைச் சுவைத்தீர்களா?