Primary tabs
ஒவ்வொரு உரைநடை ஆசிரியருக்கும் தனித்தன்மை
உண்டு. அந்தத் தனித்தன்மையே அந்த உரைநடையின்
வெற்றிக்குக் காரணமாகவும் அமைகின்றது.
அந்த
வகையில் மு.வ.வின் உரைநடையை
அனைவரும்
விரும்பியமைக்கு அவரது உரைநடையின் தனித்தன்மைகளே
காரணங்களாக அமைந்தன. அவற்றைப்
பின்வரும்
ஐந்து
தலைப்புகளில் அமைத்துக் காணலாம்.
அவை:
என்பன.
மு.வ. உரைநடையின் தனித்தன்மைகளில் முதலிடம்
வகிப்பது எளிமை ஆகும். எளிய
சொற்களால் சிறிய
தொடர்களால் அமைந்தது மு.வ.வின் உரைநடை. எட்டாம்
வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்
கல்வி பெற்ற
எவரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில்
மு.வ.வின் உரைநடை எளிமையானது.
புனைகதைகளில் மட்டும்
அன்றி வாழ்க்கை வரலாற்று நூல்கள் மொழியியல் நூல்கள்
முதலிய பிற நூல்கள் அனைத்திலும்
இந்த எளிமை
காணப்பட்டது.
தமிழ் நெஞ்சம் என்னும்
நூலின் முகவுரையில்
அமைந்திருக்கும் அவரது உரைநடையைப் பாருங்கள்.
“இலக்கிய உலகத்தில் சான்றோர் பலர் உள்ளனர்.
அவர்தம் தொடர்பு வாழ்க்கைக்கு இன்றியமையாதது.
பழந்தமிழ் இலக்கியத்தில் அச்சான்றோர் உணர்வெல்லாம்
தெளிவாகக் காண்கிறோம். அவர்தம் உணர்வே
தமிழன்னையின் நெஞ்சம்” இதில் ஒவ்வொரு
சொற்றொடரிலும் அமைந்து
இருக்கும் சொற்கள்
எளிமையானவை. தொடரில் இருக்கும் சொற்களின்
எண்ணிக்கையும் குறைவே.
மு.வ.வின் மொழிநூல் என்னும் நூலில்
காணப்படும் ஒரு
பகுதியை (பக்கம்-312) மு.வ.வின் உரைநடை எளிமைக்கு
மற்றுமொரு எடுத்துக்காட்டாகக் காண்போம்.
“இந்திய நாட்டின்
வரலாற்றை எழுதியவர்கள் பலர்.
அவர்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் பல.
ஆயின்,
அவர்கள் அனைவரும் கருத்து ஒருமித்துக்
குறிப்பிடுவது ஒன்று
உண்டு எனின், அது இதுவாகும்; ஆரியர்
நடு ஆசியாவில்
இருந்து இந்தியாவிற்குள் புகுந்தனர்.”
அடுத்த நிலையில்
மு.வ.வின் உரைநடையில்
அமைந்திருக்கும் தெளிவு குறித்துக் காண்போம்.
உரைநடையின் நோக்கம் ஆசிரியர் எழுதும்
கருத்து,
படிப்பவர்களுக்குப் புரிய வேண்டும் என்பதாகும். அதற்கு
அந்த
உரைநடை தெளிவாக இருத்தல் வேண்டும். தமிழ்
நெஞ்சம்
(ப.96) என்னும் நூலில் இருந்து இதற்கு
எடுத்துக்காட்டைக்
காணலாம்.
“புலமை என்பது உயர்ந்த உணர்வு. ஆழ்ந்த
எண்ணங்களின்
முதிர்வே உணர்வு. எண்ணம் பெருகப்
பெருகச் செயல்
குறையும். எண்ணும் தொழிலுக்கே காலம்
போதாது ஏங்குவர்
புலவர்” இந்தப் பத்தியில் அமைந்துள்ள
சொற்கள் எளிமையாக
இருப்பதுடன் உணர்த்த வரும்
கருத்தைத் தெளிவாக
உணர்த்தும் நிலையைக் காண
முடிகின்றதல்லவா?
மொழியியற் கட்டுரைகள் (முதல்தொகுதி) (பக்கம்-163)
என்னும் நூலில் இருந்து மு.வ.வின் உரைநடைத் தெளிவிற்கு
மற்றோர் எடுத்துக்காட்டைக் காண்போம்.
“வீட்டிலே முழு உரிமை
வேண்டும்; வெளியே ஓரளவு
கட்டுப்பாடு வேண்டும்; இப்படி அமைந்தால்தான் மக்களின்
வாழ்வு சீராக நடைபெற முடிகிறது. எங்கும் உரிமை என்றால்
பொது வாழ்வு கெடுகின்றது; எங்கும் கட்டுப்பாடு என்றாலும்
தனிவாழ்வு கெடுகின்றது” இத்தொடர்கள்
உணர்த்தும்
தெளிவைக் கண்டு வியப்பெழுகின்றது அல்லவா?
தமிழ் மொழியில் எழுதுகின்ற போது தமிழ்ச்
சொற்களை
மட்டுமே பயன்படுத்த வேண்டும். வடமொழி, ஆங்கிலம்
முதலிய பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களோடு கலந்து
பயன்படுத்துவது தமிழ்மொழித் தூய்மைக்குக்
கேடு
விளைவிக்கும். எனவே ஒரு மொழியில் இருக்கும் சொற்கள்
அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனில், அச் சொற்கள்
அகராதிகளில் இருப்பது மட்டும் துணை செய்யாது; அவை
மக்களின் பேச்சிலும் எழுத்திலும் இடம் பெற வேண்டும்.
அவ்வகையில் இயன்ற இடங்களில் எல்லாம் மு.வ. தனித்தமிழ்ச்
சொற்களையே பயன்படுத்தி வந்தார். அவரது உரைநடையில்
வடசொற்களைக் காண்பது அரிது. தவிர்க்க இயலாத
இடங்களில்
மட்டும் ஆங்கிலச் சொற்களை அப்படியே
ஒலிபெயர்த்துப்
பயன்படுத்தியுள்ளார். அவற்றிற்கு
எடுத்துக்காட்டாக, கவர்னர்,
பஸ், ஆபீசு, கம்பெனி, கிளார்க்,
சினிமா முதலிய சொற்களைக்
குறிப்பிடலாம்.
ஒரு மொழியின் வளர்ச்சி என்பது
புதுப்புதுத் துறைகளில்
தோன்றும் கருத்துகளையும் கருவிகளையும் மொழிபெயர்த்துக்
கொள்வதாகும். இலக்கிய மரபு, இலக்கியத் திறன்
என்னும்
இரண்டு இலக்கியத் திறனாய்வு நூல்களிலும் மு.வ. தூய தமிழ்
நடையையே
கையாண்டு
வந்திருப்பதைக் காண முடிகிறது.
மு.வ.வின் உரைநடையில் செம்மை தோன்றக்
காணலாம்.
எளிய சொற்களும், சிறிய தொடர்களும் இந்தச் செம்மைக்குக்
காரணங்களாக அமைந்துள்ளன. எந்த ஒரு கருத்தையும் ஒரு
பத்தியிலேயே அழகுடனும் அழுத்தமாகவும் எடுத்துரைக்கும்
ஆற்றலை மு.வ.வின் தனித்திறன் எனலாம். இந்த ஆற்றலின்
வெளிப்பாடாகவே மு.வ.வின் உரைநடையில் செம்மை நலம்
சிறந்து விளங்குகின்றது.
மு.வ.வின் உரைநடையில் அமைந்திருக்கும்
செம்மைக்கு
எடுத்துக்காட்டாக, மொழிநூல் என்னும் நூலில் (பக்கம்-89)
ஒரு
பத்தியைக் காணலாம்.
“ஆங்கிலம் முதலிய சில
மொழிகளில் குற்றுயிர்க்கும்
நெட்டுயிர்க்கும் தனித்தனி எழுத்துகள் இல்லை.
பிரெஞ்சு
மொழியில் நெட்டெழுத்துகள் என வேறாக இல்லையெனினும்,
உயிரொலிகள் நெடிலாக ஒலிக்கும் இடங்கள்
தெளிவாக
அமைந்துள்ளன.............................. தமிழில் வெவ்வேறு எழுத்துகள்
இருந்ததால், பொருள் வேறுபாட்டுடன் ஒலியளவில்
வேறுபாடும்
தெளிவாக விளங்கக் காண்கிறோம்.”
மு.வ.வின் ‘நண்பர்க்கு’ கடிதங்களில்
(பக்கம்-52) வரும்
பின்வரும் பத்தியையும் செம்மைக்கு எடுத்துக்காட்டலாம்.
“தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங்குறை இருந்து
வருகின்றது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால்
மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள்
இதைத் தெரிந்து கொண்டுதான், உயர்ந்த
சொற்களைத்
திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது”.
மு.வ.வின் உரைநடையில் தமிழ்மொழியின் இனிமையைக்
காணலாம். ‘இனிமைத் தமிழ்மொழி எமது’ என்று
பாடிய
பாவேந்தர் பாரதிதாசனின் கவிதைக்குச் சான்றாக மு.வ.வின்
உரைநடையை எடுத்து உரைக்கலாம். மு.வ.வின் உரைநடை
இனிமைக்கு அவரது நூல்கள் அனைத்தும் சான்றுகள்
என்றாலும்
அந்த இனிமை இலக்கிய ஆய்வு நூல்களில்
இன்னும் மிகுந்து
காணப்படுவதை உணரலாம். நெடுந்தொகை
விருந்து என்னும்
நூலில் ‘அவன் மலை நீர்’ என்னும்
தலைப்பில் அமைந்த
உரைநடைப் பகுதியில் அமைந்திருக்கும்
இனிமையைக்
காண்போம்.
“தலைவன் தலைவியைக் காண நள்ளிரவில் வந்தான்.
அவன்
வருகையைத் தலைவியும் தோழியும்
எதிர்பார்த்திருந்தனர்.
அவன் வந்து நின்றதை முதலில்
அறிந்தவள் தோழியே.
தலைவிக்கு அதைத் தெரிவிக்க
எண்ணினாள். ஆயின், அதற்கு
முன்பு தாய்
விழித்திருக்கின்றாளா அல்லது உறங்கிவிட்டாளா
என்பதை அறிந்து கொள்ள முயன்றாள்.
‘அம்மா’ என்று
கூப்பிட்டாள்; மற்றொரு முறையும்
கூப்பிட்டாள். பதில் குரல் இல்லை; உடனே அமைதியான
செய்தி ஒன்றைச் சொல்லிப் பார்க்கலாம்
என்று ஒன்று
கூறினாள்”.
இந்த உரைநடைப் பகுதியில்
அமைந்த சொற்கள்,
இனிய
கற்கண்டுகளை அருகருகே அடுக்கி வைத்தாற் போன்று
இனிய
சுவையோடு அமைந்திருப்பதைக் காண முடிகிறதல்லவா?