தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதழியல்துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

6.5 இதழியல் துறை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்

    மனித சமுதாயத்தின் வாழ்வில் நெருங்கிய தொடர்பு
கொண்டு விளங்குகின்ற தகவல் தொடர்புச் சாதனங்களில்
இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணைய தளங்கள்
எனப் பலவற்றைச் சொல்லலாம். அவற்றின் வாயிலாக
மக்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற முடியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள அமைந்துள்ள
வாய்ப்புகளாக இவற்றைச் சொல்லலாம். இதில் மக்கள்
விரும்பும் மொழியில் சொல்லப்படும் தகவல்கள் பெரிதும்
விரும்பி ஏற்கப்படுவனவாக உள்ளன. இந்தத் தேவையை
நிறைவு செய்வதற்கு மொழிபெயர்ப்பு பெரிதும் உதவுகின்றது.

    செய்திகளைப் பரிமாறிக் கொள்வதும், கருத்துகளைப்
புலப்படுத்துவதும் ஒரு மொழியின் அடிப்படைப் பணிகளாகும்.
அந்நிலையில் ஒரு மொழியில் கிடைக்கும் செய்திகளை அதே
மொழி அறிந்த மக்களுக்கு, சுருக்கமாகவோ, விளக்கமாகவோ
கூறுவது முதல் நிலை.

    ஒரு மொழி பேசும் மக்களிடையே மற்றொரு மொழி
பேசும் மக்களின் கருத்துகளை, அறியச் செய்கின்ற
மொழிபெயர்ப்புப் பணி இரண்டாவது நிலை.

    மொழி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்கு
அடிப்படையாக இருக்கின்ற சொல்லாக்கப் பணி மூன்றாவது
நிலை.

    புதியனவற்றிற்குப் புதிய சொற்கள் பெயர்ப்பு மொழியில்
படைக்க முடியாத நிலையில் அதனை நிறைவடையச் செய்யும்
வகையில் அமைகின்ற ஒலிபெயர்ப்புகள் நான்காம் நிலை.

    தற்காலச் செய்தித்தாள்களில் சிலவற்றில் மட்டும்
மொழிபெயர்க்கப் பட்ட அரசியல், பொருளாதாரம், சமூகம்
குறித்த சிறப்புக் கட்டுரைகளைக் காண முடிகிறது. அத்துடன்
மருத்துவம், உடல்நலம் போன்ற சிறப்புக் கட்டுரைகளையும்
காணமுடிகிறது.

    செய்தித்தாள்களில் இடம்பெறும் மொழிபெயர்ப்பைப்
பொறுத்த அளவில், விற்பனையைப் பெருக்க வேண்டும் என்ற
நோக்கத்திற்காகவும், அந்தந்த மொழி பேசும் மக்களைக்
கவரும் வண்ணமாகவும் அமைந்துள்ன என்பதை அறியலாம்.

6.5.1 செய்தித்தாள்களில் மொழிபெயர்ப்பு

    செய்தியின் கருத்துச் சுருக்கம், பொருள் மாறுபடாமல்
அமைய வேண்டும் என்பது நோக்கமாக இருப்பதனால்
ஆங்கிலச்     சொற்களை     அவ்வாறே     ஒலிபெயர்த்து
வெளியிடுகின்றனர். ஒரு வேளை இவற்றுக்கான தனித்தமிழ்ச்
சொற்களை     அடைப்புக்     குறிக்குள்     இணைத்துப்
பதிப்பித்திருக்கலாம். முழுவதும் தனித்தமிழ் நடையைப்
பயன்படுத்தினாலும் இதழி்ன் விற்பனை குறையும் என்றும்
கருதும் முதலாளிகளால் செய்தியாளர்கள் அத்தகைய
நடையைப் பின்பற்றினர் எனலாம்.

    பத்திரிகை மொழிபெயர்ப்பாளர்கள், பத்திரிகை சென்று
சேரவேண்டிய சமூகத்தின் கொள்திறன், மொழியாளுமை,
மொழியைச் செறிவாகப் பயன்படுத்தும் திறன் முதலிய
பண்புகள் கைவரப் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
மேலும் மொழிபெயர்ப்பு சரியானதாக, தகவலை முழுமையாக
வெளியிடும் திறன் கொண்ட மொழிபெயர்ப்பாக அமைதல்
வேண்டும். இதில் கவனம் செலுத்தத் தவறினால் பொருள்
மாறாட்டம் ஏற்பட்டுத் தவறான தகவலைத் தெரிவிக்கின்ற
குற்றம் ஏற்படும். அதனால் மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள்
செய்தி மொழிபெயர்ப்பில்     சிக்கல் ஏற்படாமல் கவனமாக
மொழிபெயர்க்க வேண்டும்.

6.5.2 செய்தி மொழிபெயர்ப்பாளர்கள்

    பாமரர் முதல் படித்த மேதைகள் வரை அவரவர்கள்
நிலைக்கு ஏற்ப அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டியது
இன்றைய காலச் சூழலில் இன்றியமையாததாகும். எதனையும்
அறிவியல் அணுகுமுறையை மேற்கொண்டு செய்யும்
ஆற்றலையும் வளர்த்து வருகின்றனர். இத்தகைய மாற்றத்தை
ஏற்படுத்தக் கூடிய பணியை இதழ்கள் முன்னின்று செய்கின்றன;
செய்தன. உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கும்
நிகழ்ச்சிகளை, அறிவியல் முன்னேற்றங்களை, மனித
சாதனைகளை ஒரு மொழியில் மட்டும் தெரிவிப்பது
என்றில்லாமல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து,
அந்தந்த மொழி பேசும் மக்களைச் சென்றடையும் வகையில்
பணிபுரியும்     மொழிபெயர்ப்பாளரின்     கடமையும்
பொறுப்புணர்வும் அளவிட முடியாததாகும்.

    மொழிபெயர்க்கும் போது, தங்களுக்குரிய பாணியில்
பத்திரிகைகள்(இதழ்கள்) அமைத்துக் கொள்வது தவிர்க்க
முடியாததாகி விடுகிறது. செய்தியைப் பரபரப்பாக வெளியிட
வேண்டும் என்ற ஒரே கோணத்தில் கூட, பல சொற்களைக்
கையாளுகின்றனர்.

    அதிர்ச்சித் தோல்வி, ஓலம், கூக்குரல், பயங்கரம்,
தவிடுபொடி, கெடுபிடி, உயிர்ச்சேதம், கல்தா, குபீர், திடீர்,
டமார்,     மர்மம்,     அலங்கோலம் போன்ற சொற்கள்
பயன்படுவது இயல்பான நடையாகிவிட்டது. மூலமொழியில்
செய்தியைப் புரிந்து கொண்டு தமிழில் உணர்ச்சிகரமான
சொற்களைப் பயன்படுத்தி வெளியிடுகின்றனர். மக்கள்,
செய்தியை மொழிபெயர்ப்பு என்று அறிய முடியாதவகையில்
மொழிபெயர்ப்பது, பத்திரிகை மொழிபெயர்ப்பாளர்களுக்கு
மாபெரும் வெற்றியே ஆகும்.

6.5.3 விளம்பரங்களில் மொழிபெயர்ப்பு

    இதழ்களின் உயிர்நாடியாக விளங்குவன விளம்பரங்கள்
ஆகும். தற்காலத்தில் விளம்பரம் (Advertisement) ஒரு
கலையாக     வளர்க்கப்படுகிறது. அறிவியல் வளர்ச்சிப்
போக்கினால் கண்டுபிடிக்கப்படும் வாழ்வியலுக்குத் தேவையான
பொருட்கள்     விளம்பரங்கள்     மூலம்     மக்களிடையே
அறிவிக்கப்படுகின்றன. பாமர மக்களும் எளிதில் அறிந்து
கொண்டு, அப்பொருட்களை வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும்
வகையில் வாசகங்கள்      அமைகின்றன. இதழ்களில்
விளம்பரங்களைப் பொதுவாக, பொருளாதார விளம்பரங்கள்,
பகுக்கப்பட்ட விளம்பரங்கள், முழுப்பக்க விளம்பரங்கள் என
வகைப்படுத்தியுள்ளனர். இதில் இடம்பெறும் விளம்பரங்களில்
பெரும்பகுதி மொழிபெயர்த்து அமைக்கப்படுபவையாகும்.

    “சிறந்த விளம்பரம் ஒன்றைத் தயாரிப்பது அவ்வளவு
எளிதல்ல. அதற்கென, கலைநுணுக்கமும், கற்பனைத் திறமும்,
சொற்சிக்கனமும்     வேண்டும். விரசத்தைத் தவிர்த்து,
வீண்சொற்களைக்     குறைத்து உண்மையினைக் கூறிப்
படிப்போரின் உள்ளத்தில் பதியும் வண்ணம் அவை
அமையுமாயின் நன்று” என்று விளம்பரத்திற்கெனச் சில
வரைமுறைகள் உள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 21:43:53(இந்திய நேரம்)