Primary tabs
பழந்தமிழ் நூல்களில் திருமாலுக்குரிய திருப்பதிகள்
பற்றியும்,
திருமாலது கோலம் பற்றியும், திருமாலின் பெயர்கள் பற்றியும் பல
செய்திகள் இடம் பெற்றுள்ளன.
தமிழ் நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
காஞ்சி நகரைச் சார்ந்த திருவெஃகா, மதுரையை
அடுத்த
மாலிருங்குன்றம் ஆகிய இடங்களேயன்றி மதுரை, திருவரங்கம்,
திருவேங்கடம், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களிலும்
திருமாலுக்குக் கோயில்கள் இருந்தன. பரிபாடல் கூறும்
இருந்தையூர் என்னும் திருமால் தலம் மதுரையைச்
சார்ந்ததாகும். அத்தலத்துப் பெருமானை, ‘நீடுநீர்வையை
நெடுமால்’ (18:4) என்று சிலப்பதிகாரம் ஏத்துகின்றது. இந்நாளில்
அத்திருக்கோயில் ‘கூடலழகர் கோயில்’ என வழங்குகிறது.
காவிரிப் பூம்பட்டினத்தில் பலதேவனுக்குக் கோயில் இருந்ததைக்
குறிக்கும் சிலப்பதிகாரம் (9:10) திருவனந்தபுரத்துத் திருமால்
கோயில் பற்றியும் (26:62) பேசுகின்றது. மேலும் அக்காப்பியத்தில்
திருவரங்கத்துத் திருமாலின் கிடந்த கோலமும் திருவேங்கடத்தில்
அவனது நின்ற கோலமும் வருணிக்கப்படுகின்றன (11:35-51).
கூடலாகிய மதுரையில் - கருடக்கொடியையுடைய திருமாலுக்கும்
மேழிப்படையையுடைய அவன் முன்னோனாகிய பலதேவனுக்கும்
கோயில் இருந்ததையும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. (14:8-9).
முகில், பூவைப்பூ ஆகியன அவன் நிறத்திற்கு
உவமைகள் ஆகும் (பரிபாடல் 3:3). அவன்
மார்பில் அணியும் கௌத்துவமணியும், துழாய்
மாலையும், கையில் கொண்டுள்ள ஆழியும்
சங்கும், மார்பில் உறையும் திருமகளும்
அவனுடைய சிறப்பு அடையாளங்களாகும்
(பரிபாடல் 1:3-10; புறநானூறு 56:5-6; 58:15;
முல்லைப்பாட்டு 1-3). ஆலிலையில் அவன்
மேவிய செயலைப் புறநானூறு (198:9)
நற்றிணை (32:1) குறிப்பிடும். அவன் அணிந்த துளவ மாலை
பற்றிப் பதிற்றுப்பத்தும் (31:8-9) பகர்கின்றது. சங்க நூல்கள்
காட்டும் இத்திருக்கோலமே ஆழ்வார் பாசுரங்களில் விரிவும்
பொலிவும் பெறுகின்றது.
என்னும் தமிழ்ப் பெயர்களாலேயே குறிக்கப்படுகிறான். இவற்றுள்
மால் என்பதற்குப் ‘பெரியோன்’ என்றும் மாயோன் என்பதற்குக்
‘கரியவன்’ என்றும் பொருள் கொள்ளலாம். இதனை அரண்
செய்வது போல, “பெரியவனை மாயவனை” என்று தொடங்கி,
“கரியவனைக் காணாத கண்என்ன கண்ணே” என்று சிலம்பில்
ஆய்ச்சியர் குரவைப்பாடற்பகுதி ஒன்று அமைந்திருத்தல்
காணலாம். இத்தகைய தமிழ்ப் பெயர்களாலே திருமால்
பேசப்பட்டிருப்பினும் வைணவ நூல்களில் அவனுக்குரிய
சிறப்புப்பெயர்களாகப் பன்னிரு திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன.
அவை கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விட்டுணு,
மதுசூதனன், திரிவிக்கிரமன். வாமனன், சிரீதரன், இருடீகேசன்,
பற்பநாமன், தாமோதரன் என்பனவாம். இவற்றுள் எப்பெயரும்
அப்படியே சங்கப்பாடல்களில் இடம்பெறவில்லை. கேசவன்
என்பதன் மொழிபெயர்ப்பாகக் ‘கூந்தல்’ என்பது பரிபாடலில்
(3:31-32) காணப்படுகிறது. “இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேதமுதல்வன்” என்பது நற்றிணை கடவுள் வாழ்த்துப்பகுதி.
இதற்கு எல்லாப் பொருள்களினுள்ளும் உறைந்து, அவற்றைத்
தன்னுள்ளே அடக்கியுள்ள வேதத்தில் உணர்த்தப்படும்
முதற்பொருள் என்பது கருத்து. இதுவே ‘நாராயணன்’ என்னும்
பெயரின் பொருளுமாகும். “மாதாங்கு தடக்கை” என
முல்லைப்பாட்டிலும் (3), “திருஞெமிர்ந்து அமர்ந்த மார்பன்”
எனப் பரிபாடலிலும் (1:8) வருவன சிரீதரன் என்னும் பெயரின்
பொருளைத் தருவன. “திருவின் கணவ” (பரி.3:90) என்பது
மாதவனைக் குறிக்கும். “நீர்செல நிமிர்ந்த மாஅல்” (முல்லைப்.3)
என்பது திரிவிக்கிரமன், வாமனன் ஆகிய திருப்பெயர்கள்
இறைவனுக்கு அமைந்த வகையைச் சுட்டுகின்றது. “நீலநிற
உருவின் நெடியோன்கொப்பூழ், நான்முகன் ஒருவற் பயந்தபல்
இதழ்த் தாமரைப் பொகுட்டின்” என்று
பெரும்பாணாற்றுப்படையில் வருவது (402-405) பற்பநாபன்
என்னும் பெயர்க்காரணத்தைத் தெரிவிக்கின்றது.
“எவ்வயினோயும் நீயே” என்பது (பரிபாடல் 4:70)
விட்டுணுவின் எங்கும் பரந்த தன்மையைக் குறிக்கிறது.
“கோவலன்” என்பது (பரிபாடல் 3:83) கோவிந்தன் என்னும்
பெயரைச் சுட்டுவதாகக் கொள்ளலாம். பன்னிருதிருநாமங்களுள்
மற்றைப்பெயர்களான மதுசூதனன், இருடீகேசன், தாமோதரன்
ஆகியவற்றின் பொருளைக் காட்டும் தொடர்கள்
சங்கப்பாடல்களிற் காணப்படவில்லை.