Primary tabs
பௌத்தங்களின்மீது செலுத்திய தாக்கத்தையும் இங்குக்
குறிப்பிட்டாக வேண்டும். இதுவும் பக்தி இயக்கத்தின் விளைவே
எனலாம்.
சமணரும் பௌத்தரும் தருக்க நெறியையும் அறவியலையுமே
அறிவுப்பூர்வமாக வற்புறுத்தினர். ஆதலின் பக்தி
இலக்கியத் தோற்றத்திற்கு அங்கு வாய்ப்பில்லாமற் போய்விட்டது.
எனினும் சைவ வைணவப் பக்தி இலக்கியம் அவர்களிடத்தும்
தாக்கத்தை ஏற்படுத்தியது.
“பல்லவர் காலத்தில் பக்தி வெள்ளம் தமிழ்நாட்டில் எங்கும்
பரந்தோடியது...... பக்திப்பெருவெள்ளம் சமணமதத்தையும்
தன்னுள் ஆழ்த்தியது. யாப்பருங்கலவிருத்தியுள்
எடுத்துக்காட்டப் பெறும் பல சமணப்பாடல்கள்
பக்திப்பாடல்களாக அந்நாளைய சைவ, வைணவப் பாடல்களைப்
போலவே உள்ளத்தை உருக்கக் காணலாம்” என அறிஞர்கள்
எடுத்துக் காட்டுவதாலும் இதனை உணரலாம்.
சைவ, வைணவப் பக்தி இயக்கம் பொதுமக்களைக்
கவர்ந்திழுத்ததைக் கண்ட சமணர் தாமும் பக்தி இலக்கியப்
படைப்பில் கவனம் செலுத்தியமைக்குச் சான்றுகள் உள்ளன.
தோத்திரத் திரட்டு என்னும் பெயரில் சின்னச்சாமி நயினார்
என்பவர் வெளியிட்டுள்ள ஒரு தொகுதியும், திருப்பாமாலை
என்னும் பெயரில் மேல்மின்னல் சக்கரவர்த்திநயினார் என்பவர்
வெளியிட்டுள்ள நூலும் சமண தோத்திரப்பாடல்களைக் கொண்டு
விளங்குகின்றன. தேவராசமுனிவர் இயற்றிய ஜீனேந்திரஞானத்
திருப்புகழ் அருணகிரிநாதரின் திருப்புகழையும்,
தோத்திரத் திரட்டில் உள்ள பதிகம் ஒன்று அப்பர் சுவாமிகளை நினைவூட்டுவதாக உள்ளது. சமண தருமமும் பக்தியும் இணைந்த நூலாக அமைவது அவிரோதியாழ்வாரின்
அருணகிரிநாதர்
திவ்வியப்பிரபந்தத்தில் காணப்படும் அந்தாதிகளைப் பின்பற்றி
அமைக்கப்பட்டிருக்கலாம் என்பர். இவற்றில் காணப்பெறும் பக்தி
வெளிப்பாட்டில் எந்த வேறுபாடும் இல்லை. சமண மதத்தி்ன்
இயல்புகளுக்கேற்பக் கூறப்படும் கருத்துக்களால்தான் வைணவப்
பக்திப்பாடல்களில் இருந்தும் அந்நூல்கள் வேறுபடுகின்றன.
திருநூற்றந்தாதியை மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகப்
பரிசோதித்து வெளியிட்ட ரா. இராகவையங்காரும், “இந்நூல்
தமிழறிந்த ஜைனர் பலரால் நாடோறும் பாராயணஞ்
செய்யப்படுகிறது” என்று குறித்திருப்பதும் அதன் பக்தி
வெளிப்பாட்டுக்கும் தோத்திரத் தன்மைக்கும் சான்றாகின்றது.
திருப்பாமாலை என்னும் நூலில் சித்தபக்தி, சைத்தியபக்தி,
பஞ்சகுருபக்தி, ஆருகதபக்தி, நந்தீசுரபக்தி என்னும் பல்வேறு
தலைப்பில் அமைந்த பாடல்கள் சமணர் பக்தி நெறிக்குத்
திரும்பியதை உணர்த்துவன போன்று உள்ளன.
புத்தமதத்தில் பக்திப் பாடல்கள் குறைவே. வீரசோழிய உரை,
நீலகேசி உரை முதலியவற்றில் புத்தரைப் பற்றிய தோத்திரப்
பாடல்கள் காணப்படுகின்றன. அவை சொல்லழகும் பொருளழகும்
உடையனவாய்க் கற்பார்க்குச் சுவையூட்டுகின்றன.
அப்பாடல்களுள் சிலவற்றை மயிலை சீனி. வேங்கடசாமியும்
(பௌத்தமும் தமிழும்), இ.எ.ஸ். வரதராஜ அய்யரும் (தமிழ்
இலக்கிய வரலாறு - கி.பி. 1 முதல் 1100 வரை) தத்தம் நூல்களில்
தொகுத்துத் தந்துள்ளனர்.
இவ்வாறு தமிழகத்தில் பெருக்கெடுத்தோடிய பக்தி வெள்ளம்
சமண பௌத்த மதங்களையும் தன்னுள் ஆழ்த்தியது
வியப்புக்குரிய செய்தியாகும்.