தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20224l3-4.3 பிறநெறிகள்

4.3 பிறநெறிகள்
பிரபத்தி நெறியைப் போல வேறு சில நெறிகளும் உள்ளன.
அவற்றுள் ஆசிரியப்பற்று, சித்தோபாயம் ஆகிய இரண்டும்
குறிப்பிடத்தக்கவை.
மேற்கூறிய நான்கு வழிகளில் ஒன்றையும் கடைப்பிடிக்க
இயலாதவனாய் இருப்பவனுக்கு ஆசார்யன் (ஆசிரியன்)
திருவடிகளே தஞ்சமாகும். வைணவசமயம் காட்டுகின்ற பிறிதொரு
நெறி இது.

“பக்தியில் அசக்தனுக்குப்     பிரபத்தி; பிரபத்தியில்
அசக்தனுக்கு இது” என்று ஸ்ரீவசனபூஷணம் (சூத்திரம்: 465)
குறிப்பிடுகின்றது. பக்தியில் நிற்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு
உரிய நெறி சரணாகதி என்பதும், அந்தச் சரணாகதியிலும்
நிலைத்து நிற்கும் ஆற்றல் இல்லாதவனுக்கு ஆசார்யாபிமானம்
என்பதும் இதன் பொருளாகும்.

ஆசிரியன் இறைவனைப்     பெறுவதற்குத் துணையாய்
நிற்கிறான். அவன் முதலில் அறியாதனவற்றை அறிவிக்கிறான்.
பின்னர் இறைவன் குணங்களிலே ஈடுபட்டு அவற்றைக்
துய்க்கும்போது உசாத்துணையாகின்றான். (உசாத்துணை =
உற்றதுணை) மேலும் இறைவனைக் கிட்டுகைக்கு (அடைவதற்கு)ச்
சேர்த்து வைப்போனாகவும்     (புருஷகாரபூதனாகவும்)
பேற்றுநிலையில்     தொண்டினை     வளர்ப்பவனாகவும்
அமைகின்றான். இவ்வகையால்     எல்லாம் ஆசிரியன்
கொள்ளத்தக்கவன்     ஆகிறான்.     இதனாலேயே,
ஆச்சார்யாபிமானமே உத்தாரகம்
(உய்யும் வழி) என்று
ஆசிரியப்பற்றினைப்     போற்றுகின்றது ஸ்ரீவசனபூஷணம்
(சூத்திரம்-250)

நாம் இதுவரை பார்த்த கர்மயோகம் முதலான ஐந்து
நெறிகளும் சாத்தியோபாயங்கள் (பின்பற்றக்கூடிய வழிகள்)
எனப்படும். இவ்-உபாயங்களாகிய நெறிகள் யாவும் இறைவனை
அடைவதற்கு உரியவையே. எனினும் வைணவம் இறைவனை
எளிதில் அடைதற்குரிய ஒருவழியாகச் சித்தோபாயத்தைக்
குறிப்பிடுகின்றது. தன்னிடமிருந்து நீங்கிச்சென்ற ஆன்மாக்களை
ஏற்றுக்கொள்ள இறைவன் என்றும் சித்தமாய் இருப்பது
சித்தோபாயம். மற்றைய உபாயங்களில் சேதனன் (அடியவன்)
ஈடுபட்டாலும் இறைவனுடைய சித்தம் இன்றேல் செல்லும் நெறி
தடைப்படும். எனவே சித்தமாக அருள் வழங்கக் காத்திருக்கும்
இறைவனே சித்தோபாயன் ஆவான் - என்பதே இந்நெறியால்
அறியலாகும் கருத்தாகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:10:52(இந்திய நேரம்)