தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l3-6.3 மூன்று மந்திரங்கள்

6.3 மூன்று மந்திரங்கள்
வைணவத் தத்துவத்தில் இங்குக் குறித்த தத்துவத்திரயம்,
அர்த்த பஞ்சகம் ஆகியவற்றுடன் மந்திரங்கள் பற்றியும்
கூறப்பட்டுள்ளது. அவையாவன: திருமந்திரம், துவயம்,
சரமசுலோகம் என்பனவாம். இவற்றை ரஹஸ்யதிரயம் என்பர்.

ஓம் நமோ நாராயணாய என்பது திருமந்திரம். இதில் உள்ள
ஓம் நமோ நாராயணாய என்று மூன்று சொற்களும் முறையே
பிறிதொன்றற்கன்றி நாராயணனுக்கே அடிமைப்பட்டிருக்கும்
தன்மையையும், பிறிதொன்றன்றி அவனையே தஞ்சமாகக்
கொண்டிருக்கும் தன்மையையும், பிறிதொன்றன்றி அவனே
இன்பமாய் இருக்கும்     தன்மையையும் தெரிவிக்கின்றன.
இத்திருமந்திரம் எல்லா மறைகளின் சாரமாக இருப்பது என்று
வைணவப் பெரியோர் குறிப்பிடுவர்.
துவயம், என்பது இருதொடர்களால் ஆகிய மந்திரம்.
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:

என்பது அது.

‘பெரியபிராட்டியாரை முன்னிட்டுப் பெருமானுடைய இரண்டு
திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்’ என்பது முதல்
தொடரின் தெளிந்த பொருளாகும்.

‘பெரிய பிராட்டியும் பெருமானுமாகிற சேர்க்கையில் என்றும்
கைங்கர்யத்தைப் புரிவேனாக’ என்பது பின்னைய தொடரின்
தெளிந்த பொருளாகும். (கைங்கரியம் = திருத்தொண்டு)

இறுதியாகவுள்ள மந்திரம் சரமசுலோகம். இது, கண்ணபிரான்
அர்ச்சுனனின் மனத்துயரை மாற்றக் கூறியதாகும்.
ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம்வ்ரஜ
அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷ யிஷ்யாமி மாசுச:

என்பது சரம சுலோகம்.

‘உன் காரியத்தைச் செய்ய நானிருக்கிறேன்; நீ ஒன்றுக்கும்
கவலைப்படாதே. உன்னுடைய எல்லாச்சுமையையும் என்
தலையிலே வைத்துக்     கவலையற்றவனாயிரு’ என்பது
இச்சுலோகத்தின் பொருளாகும். கடைசி உபாயமான சரணாகதி
(பிரபத்தி) பற்றிப் பேசுவதால் இது சரமசுலோகம் எனப்பெயர்
பெற்றது. இம்மூன்று மந்திரங்களையும் மூன்று இரகசியங்கள்
என்று குறிப்பிடுவர். இவை ஆழ்வார் பாசுரங்களில் இடம்பெற்ற
வகையி்னை உரிய இடங்களில் வைணவ உரையாசிரியர்கள்
விளக்கிச் சென்றுள்ளனர். அவ்விளக்கத்தையெல்லாம் வைணவத்
தத்துவம் பற்றி விரிவாகப் பேசும் நூல்களில் கண்டு தெளியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:12:24(இந்திய நேரம்)