தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

செய்தி நிறுவனங்கள்

3.3 செய்தி நிறுவனங்கள் (News Agencies)

    செய்திகளைத் திரட்டித் தருவதற்காகவே சில அமைப்புகள்
உள்ளன. இவற்றிற்குச் செய்தி நிறுவனங்கள் என்று பெயர்.
இவை தனியார் துறையிலும் அரசுத் துறையிலும் அமைந்துள்ளன.
இவற்றில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணம் செலுத்தி,
செய்தித்தாள்கள் செய்திகளைப் பெறுகின்றன.

    இப்பொழுது நூற்றுக்கு மேற்பட்ட நாடுகளில் செய்தி
நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவை எல்லாம் தொழில் நுட்ப,
அறிவியல்     வளர்ச்சியின் விளைவாகக் கடந்த சில
ஆண்டுகளாகக் குறிப்பிடத் தக்க அளவில் வளர்ந்துள்ளன.

3.3.1 பணி

    பெரிய செய்தித்தாள் நிறுவனங்கள், தம் சொந்த
நிருபர்களை அமர்த்திச் செய்திகளைச்     சேகரித்துக்
கொள்கின்றன. ஆனால், சிறிய செய்தித்தாள் நிறுவனங்கள்
உள்ளிட்ட பல செய்தித்தாள் நிறுவனங்கள் எல்லா
இடங்களிலும் நிருபர்களை நியமனம் செய்து செய்திகளைச்
சேகரிக்க அவர்களின் பொருளாதார நிலைமை இடங்கொடாது.

    எனவே செய்திகளைத் திரட்டிச் செய்தித்தாள்களுக்கு
வழங்கும் பணியைச் செய்தி     நிறுவனங்கள் ஏற்றுக்
கொள்கின்றன.

• கட்டணம்

     செய்தித்தாள்கள், இத்தகைய செய்தி நிறுவனங்களுக்கு
ஆண்டுக்கு இவ்வளவு தொகை என்று கட்டணம் செலுத்தி,
பதிவு     செய்து     கொண்டு     செய்திகளைப் பெற்று
வெளியிடுகின்றன.

• செய்தி வழங்கல

    இச்செய்தி நிறுவனங்கள், செய்தித்தாளைப் போலவே
நிருபர்களை அமர்த்திச் செய்திகளைத் திரட்டி ஒரே சமயத்தில்
செய்தித்தாள்களுக்கு வழங்குகின்றன.

3.3.2 இந்தியாவில் உள்ள செய்தி நிறுவனங்கள்

1)
பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (P.T.I - Press Trust of India)
2)
யுனைடெட் நியூஸ் ஆப் இந்தியா (U.N.I - United News
of India)
3)
ஹிந்துஸ்தான் சமாச்சார் (Hindustan Samachar)
4)
சமாச்சார் பாரதி (Samachar Bharathi)

    ஆகிய நான்கும் இந்தியாவில் இயங்கும் செய்தி
நிறுவனங்களாகும். (1975-76இல் அவசர நிலைக் காலத்தில்
இந்த நான்கு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து சமாச்சார் என்ற
பெயரில் இயங்கின).

3.3.3 அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்கள்

    அயல்நாட்டுச் செய்தி நிறுவனங்களில் சில உலகம்
தழுவிய அளவில் செய்திகளைத் திரட்டி அனைத்து
நாடுகளுக்கும் வழங்குகின்றன. அவை,

1)
ராய்ட்டர் (பிரிட்டிஷ் செய்தி நிறுவனம்)
2)
அஸோஸியேட்டட் பிரஸ் (அமெரிக்கச் செய்தி நிறுவனம்)
3)
டாஸ் (ரஷ்யச் செய்தி நிறுவனம்)

    இந்தச் செய்தி நிறுவனங்களில், ஒவ்வொரு செய்தித்
தாளும்     உறுப்பினராகி,     செய்திகளைச்     சேகரித்து
வெளியிடுகின்றது. இதற்காக, கம்பியில்லாத் தந்தி, தொலை அச்சு (Teleprinter). தொலை நகலி (Telex). செயற்கைக்
கோள்கள் ஆகியவை பயன்படுகின்றன.

    இவற்றின் மூலம்     வெளிநாட்டுச் செய்திகளைப்
பத்திரிகைகள் பெற முடிகிறது.

    இதைத் தவிர, பொருள் வசதி மிக்க செய்தித்தாள்கள்,
தமது     சொந்தக் குழுமத்தைச்     (group)     சேர்ந்த
பத்திரிகைகளுக்காகத் தனிச் செய்தி நிறுவனத்தை அமைத்துக்
கொண்டுள்ளன. சான்றாக இ.என்.எஸ் (E.N.S. - Express News
Service)
என்ற பெயரில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம்,
ஒரு செய்தி நிறுவனத்தை ஏற்படுத்தி, தனது குழுமப்
பத்திரிகைகளுக்குச் செய்திகளை அளிக்கிறது.

    இவ்வாறு செய்திகளை, செய்தித்தாள்கள் அவற்றின்
கொள்கை, சக்திக்கு ஏற்பத் திரட்டிக் கொள்கின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:02:00(இந்திய நேரம்)