Primary tabs
3.1 இதழியல் மொழிநடை
இதழியல் மொழிநடை பிற மொழிநடை வகையிலிருந்து
மாறுபட்டது. குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில்
படித்துப் புரிந்துகொள்ளும் மொழிநடையில் இதழ்களின்
மொழிநடை அமைய வேண்டும். அகராதிகளின் துணை
கொண்டு படிக்கும்படியான இதழ்களை வாசகர்கள்
புறக்கணிப்பர். மொழிநடை பற்றி சி.பா.ஆதித்தனார், “ பேச்சு
வழக்கில் இருக்கும் தமிழே உயிருள்ள தமிழ். அதைக்
கொச்சை நீக்கி எழுத வேண்டும். புரிகிற தமிழில் எழுதினால்
மட்டும் போதாது. பேசுகிற தமிழில் எழுத வேண்டும்”
என்கிறார்.
3.1.1 முற்காலத் தமிழ் இதழ்களின் மொழிநடை
முற்காலங்களில் இதழ்களைத் தொடங்கியவர்கள்
அரசியல் விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும்
எண்ணத்துடன்தான் தொடங்கினர். அவர்கள் மொழிப்புலமை
பெற்றிருக்கவில்லை. ஆங்கிலமும் வடமொழியும் கலந்த
நடையே தமிழ் இதழியல் மொழிநடையாக இருந்தது.
பிழைகளும் அதிகமாக இருந்தன. தமிழ் இதழ்களில்
காணப்பெறும் பிழைகளைக் கண்டு மனம்நொந்த
திரு.வி.கலியாணசுந்தரனார்,
தமிழரைப்போல் மொழிக் கொலையில்
தலைசிறந்தோர் எவருளரோ
என்று பாடியுள்ளார். இவ்வாறு பாடியதுடன் மட்டுமன்றி
உணர்ச்சி, விறுவிறுப்பு, வேகம் மிக்க ஒரு புதிய
தமிழ்நடையை இதழியலில் உருவாக்கி மக்களிடம்
எழுச்சியூட்டினார். கருத்துகளைத் தொகுத்து, மக்களை
ஈர்க்கும் தலைப்புகளை இட்டு எழுதினார். செய்திகளை வகை
செய்து, உட்பிரிவுகள் தந்து அவற்றை விளக்கி, சிறுசிறு
தொடர்களில் எழுதினார். நவசக்தி, தேசபக்தன் ஆகிய
அவரது பத்திரிகைகள் மூலம் மக்களுக்கு எழுச்சியூட்டும்
கருத்துகளை வழங்கினார். பாரதியார், கல்கி, சங்கு
கணேசன், டி.எஸ்.சொக்கலிங்கம் போன்றோர் தொடர்ந்து
முயன்று பத்திரிகைத் தமிழில் மாற்றம் கொண்டு வந்து வளம்
சேர்த்தனர். தனித் தமிழ் இதழ்கள், திராவிட இயக்க இதழ்கள்
ஆகியவை தமிழ் மொழியையும் தமிழ் உணர்வையும்
வளர்த்தன. அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி போன்றோரின்
எழுத்துக்கள் தமிழ்ப் பத்திரிகைகளின் மொழி வளத்தை
வளர்த்தன.