தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிறகூறுகள்

3.5 பிற கூறுகள்

    செய்திகளைப்     படிக்கும் வாசகர்களை மனத்திற்
கொண்டு, அவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில்
நிறுத்தம் (Text Breakers) இடம் பெறச் செய்ய வேண்டும்.
செய்தியின் முக்கியத்துவத்தையும், செய்தியின் தன்மையையும்
அடிப்படையாகக் கொண்டு இலக்கண மரபு மீறல்
ஏற்பட்டாலும் அதை மேற்கொள்ளலாம்.

3.5.1 செய்தி நிறுத்தம்

    செய்தித்தாள்களில்     செய்திகள்     மிகச்     சிறிய
எழுத்துக்களில் வெளியிடப்படுகின்றன. இவற்றை வாசகர்கள்
படிக்க வேண்டுமாயின் செய்தி நிறுத்தம் (Text Breakers)
பயன்படுத்த வேண்டும்.

    ஒரு பக்கத்தைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும்
போது பெரிய எழுத்துக்கள், இடைவெளிகள் ஆகியவை
குறுக்கிட்டால் கண்கள் அந்த இடத்தில் தங்கிச் சிறிது
ஓய்வெடுக்கின்றன. இவ்வாறு படிக்கும்போது நிறுத்தம்
ஏற்படுத்தும் அமைப்புகளைச் செய்தி நிறுத்தம் என்பர். அந்த
வகையில் செய்தித்தாளில் ‘காலம்’ (Column) பிரித்தல், பத்தி
(Paragraph) பிரித்தல், துணைத் தலைப்பு இடுதல் (Sub
headings)     ஆகியவை     செய்தி     நிறுத்தங்களாகப்
பயன்படுத்தப்படுகின்றன.

    பொதுவாகக் கட்டுரை மற்றும் பிற வகையான
உரைநடையில் பத்திகளும் காலமும் துணைத் தலைப்புகளும்
கருத்து     அடிப்படையிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
ஆனால், செய்தித்தாளில் படிக்கும் தன்மை (Readability)
அடிப்படையிலேயே அவை கையாளப்படுகின்றன.

    துணைத் தலைப்புக்களை 10 அல்லது 12 செ.மீ. க்கு
ஒருமுறை பயன்படுத்தலாம். மூன்று பத்திகளுக்கு ஒருமுறை
துணைத் தலைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். துணைத்
தலைப்பால்     மற்றொரு     பயனும்     உண்டு.
எழுதிக்கொண்டிருக்கிற செய்திக் கூறு     மாறும்போது
துணைத் தலைப்பிட்டு அந்த மாற்றத்தைக் காட்ட முடியும்.
பத்திகள் 2 அல்லது 3 செ.மீ. நீளம் இருந்தால் போதும்.

3.5.2 இதழ்களும் இலக்கணமும்

    தகவல் தொடர்புக் கருவிகளின் சாதனையால் உலகமே
ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்டது. உலகளாவிய கருத்துப்
பரிமாற்றம் (Global Communication) என்பது இன்று
சாத்தியமாகிவிட்டது. உலகில் பல்வேறு மூலைகளில் நடக்கும்
நிகழ்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் சிந்தனைகளையும்
ஒரு நாட்டிலுள்ள குறிப்பிட்ட ஒரு மொழியில் எடுத்துக்கூற
முற்படுகின்றனர். அப்போது அந்த மொழியின் ஒரு சில
இலக்கண வரம்புகளை மீறுவது தவிர்க்க முடியாததாகிறது.

    வெளி மாநில, வெளி நாட்டு இடப்பெயர்களையும்
இயற்பெயர்களையும் எழுதும் பொழுது இலக்கண விதிகளை
மீற வேண்டியதாய் இருக்கும். வாஷிங்டன், அலாஸ்கா, ரீகன்,
ராஜிவ், டார்ஜிலிங் போன்ற சொற்களில் உள்ள ஒலிகளும்
ஒலிக்கூட்டங்களும் தமிழில்     பயன்படுத்தப்படுவதில்லை.
ரீ, ரா, டா ஆகிய எழுத்துக்கள் தமிழ் மொழியில் முதல்
எழுத்தாக வருவதில்லை. இவற்றைத் தமிழில் இலக்கண
விதிகளுக்கு இணங்க எழுத வேண்டுமாயின் வாசிங்குடன்,
அலாசுகா, இரீகன், இராசீவு, தார்சிலிங்கு என்று எழுத
வேண்டியிருக்கும். இவ்வாறு பத்திரிகைச் செய்திகளில்
இடம்பெற்றால் அவை கேலிக்குரியனவாய் ஆகிவிடும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:13:13(இந்திய நேரம்)