தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அச்சுக்கலையின் வரலாறு

5.1 அச்சுக்கலையின் வரலாறு

    முற்காலத்தில் பலகையிலும் கல்லிலும் தமக்கு வேண்டிய
எழுத்துக்களையோ,     முத்திரைகளையோ, குறிகளையோ
செதுக்கினர். அவற்றின் மீது மையைத் தடவி நகல் எடுக்கும்
பழக்கம் ஏற்பட்டது. மேடு பள்ளங்களைக் கொண்ட பரப்பு
ஒன்றின் மேல் மையைத் தடவிக் காகிதத்திலோ அல்லது,
வேறு ஒரு பொருளின் மீதோ அழுத்திப் பதிவெடுக்கும் முறை
அடுத்துக் கையாளப்பட்டது. களிமண் அல்லது மெழுகில்
இவ்வகையான அச்சுப் பதிவுகள் செய்யப்பட்டன.

5.1.1 தொடக்க காலத்தில் அச்சுக்கலை

    சங்க இலக்கியங்களில் கண்ணெழுத்து, வட்டெழுத்து
போன்ற வடிவங்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. இவற்றை
எழுதுவோர் ‘கண்ணெழுத்தாளர்’ என்று அழைக்கப்பட்டனர்.
முத்திரையிடுதலும் இலச்சினையிடுதலும் பாபிலோனியாவிலும்,
சீனாவிலும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட வரலாறாகும்.
செதுக்குத் தகடுகளில் எழுத்துக்கள் பதிக்கப்பட்டன. அடுத்து,
கல்வெட்டுக்களில் மையைத் தடவிப் பதிப்பு எடுக்கும் பழக்கம்
ஏற்பட்டது. இதுவே மரத்தில் எழுத்துக்களை வடிவமைத்துப்
புத்தகங்கள் பதிப்பிக்க முதன்முதலில் அடிப்படையாக
அமைந்தது. கல்வெட்டிலிருந்து உண்மை நகல் எடுப்பதற்கு
அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கல்வெட்டுத் துறைகளிலிருந்து
மர அச்சுப்படி முறையும் அதிலிருந்து நகல் எடுப்பு முறையும்
வளர்ச்சியடைந்தன. உலக நாடுகள் சமயக் கருத்துக்களைப்
பரப்பவே இக்கலையை உருவாக்கின.

• நாரா அச்சுமுறை

    அடுத்த நிலையில் நெசவுத் துணியில் அச்சிடும் முறை
பரவியது. மரத்துண்டுகளில் செதுக்கப்பட்ட விதவிதமான
உருவங்களைக்     கொண்டு     துணியில் அச்சிடுவது
இம்முறையாகும். இம்முறை இந்தியாவிலிருந்துதான் மற்ற
நாடுகளுக்கும் பரவியது. இவ்வாறு அச்சடிக்கப்பட்டவை
சப்பானில் ‘நாரா’ என்றழைக்கப்பட்டன. இவ்வச்சு முறை
பின்னர் காகிதத்தில் அச்சடிக்கும் முறைக்கு வழிவகுத்தது.

• காகித நாணயம்

    சீனாவில் அச்சுக்கலை தோன்ற அடிப்படையாக
அமைந்தது காகித நாணயமாகும். அதன்பின் சீனாவில்
கி-சென் என்னும் இடத்தில் முதன்முதலில் காகித நாணயம்
அச்சிடப்பட்டு வெளிடப்பட்டுள்ளது.

• வழிபாட்டுப் படங்கள்,

    இத்தாலி நாட்டில் 15ஆம் நூற்றாண்டின் இறுதிப்
பகுதியில் அரபுமொழியில் அச்சு வேலைகள் சில
நடைபெற்றன. குரானும் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
முற்காலத்தில் அச்சிடப்பட்ட     அச்சுப்     படங்களில்
பெரும்பாலானவை வழிபாட்டுப் படங்களாகும். ஒருசில
ஆண்டுகளுக்குப்பின்     இப்படங்களின் கீழ், சொற்கள்
அச்சடிக்கும் முறை வளர்ந்தது. இவற்றை நூல்களாக
அச்சடிக்கும் முறை வளர்ந்தது; சீனாவின் இம்முறை
ஐரோப்பாவிலும் பரவி வளர்ச்சி பெற்றது.

5.1.2 படி எடுக்கும் முறை

    அச்சுக்கலையில் புதிய முறையைப் புகுத்தச் சீனநாட்டினர்
விரும்பினர். 11ஆம் நூற்றாண்டில் சீனாவை ஆட்சிபுரிந்த
‘சிங்கிலி’ மன்னன் காலத்தில் ‘பி.செங்’ என்பவர் தனி அச்சை
முதன்முதலில் கண்டுபிடித்தார். நீண்ட களிமண் துண்டை
எடுத்துக்கொண்டு நாணயத்தின் விளிம்புபோல்     அதில்
எழுத்துக்களைப் பதிக்க வேண்டும். பதித்த எழுத்துக்களைத்
தனித்தனியாக மண்பாண்டம் சுடுவது போல் தீயில் போட்டுச்
சுடவேண்டும். உறுதியான இந்த எழுத்துக்களை ஓர் இரும்புத்
தகட்டில் காகிதச் சாம்பல், பைன் மரப் பிசின், மெழுகு
ஆகியவற்றின் கலவையைப் பூச வேண்டும். பின்பு அதன்மேல்
இரும்புச் சட்டத்தைப் பொருத்தி, சுட்டக் களிமண் அச்சுக்கள்
அடுக்கப்படும். நெருப்பில்     தகட்டின்     அடிப்பாகம்
சூடேற்றப்படும். இச்சூட்டினால் தகட்டில் உள்ள பிசின் இளகத்
தொடங்கும். இப்பொழுது வழுவழுப்பான மரப் பலகையைக்
கொண்டு தேய்க்க வேண்டும். இதனால் அச்சுக்கள் சமமாகப்
படிந்து இரும்புத் தட்டு முழுவதும் எழுத்துக்கள் அழுத்தி
ஓர் உறுதியான அச்செழுத்துப் படி உண்டாகும். பின்பு இதை
வைத்துப் பல படிகள் எடுக்கலாம். இதுவே ‘பி.செங்’ முறை
எனப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கில் படிகள்
எடுக்கலாம்.

5.1.3 எழுத்துக்கள்

    இதற்கு அடுத்து, ‘வாங் செங்’     மரத்தாலான
அச்சுப்படிகள் பற்றிக் குறிப்பிடுகிறார். இதன்படி அச்சுக்
கோப்பவரின் படிவம் மரத்தால் செய்யப்பட்டதாகும். மூங்கில்
பத்தைகள் கோடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு
எழுத்தின் வடிவமும் தனித்தனித் துண்டுகளாக அறுக்கப்பட்டு
ஒரே வடிவமாக்கப்பட்டுத் தொகுக்கப்படும். இடையில் ஏற்படும்
வெற்றிடத்தை     மூங்கில்     துண்டுகளைக் கொண்டு
இடைவெளியின்றி அடைத்தனர். அச்சுக்கள்     சரியாக
வடிவமைக்கப்பட்டவுடன் அதன்மேல் மைதடவிப் படிகள்
அச்சிடப்பட்டன. ‘பி.செங்’ என்பவரே எழுத்துக்களை
முதலில் களிமண்ணால் செய்தும் பிறகு தகரத்தால் செய்தும்
உருவாக்கினார். தனித்தனி எழுத்துக்களுக்காக மரத்தினால்
செய்த எழுத்துகளைப் பயன்படுத்தினார். மங்கோலியர்
காலத்திலேயே இந்த அச்சுமுறை வழக்கத்திற்கு வந்தது. இது
மற்ற நாடுகளுக்கும் பரவியது.

• உலோக அச்சு எழுத்துக்கள்

    அடுத்த நிலையில் உலோகத்தால் அச்சு எழுத்துக்கள்
உருவாக்கப்பட்டன. கொரியா, சீனா ஆகிய நாடுகளில் 18ஆம்
நூற்றாண்டு வரை இம்முறை வழக்கில் இருந்தது. அரசர்கள்
இந்நாடுகளில் இலக்கியம், கல்வி, சமயம் ஆகியவற்றை
வளர்க்கப் பயன்படுத்தினர்.

5.1.4 அச்சுக்கலையின் தந்தை

    ஐரோப்பாவில் கையெழுத்துப் படிகள் அதிக வழக்கில்
இருந்தன. இக்காலத்தில் அப்படிகளில் உள்ள எழுத்துக்களைப்
போலவே உலோக அச்சில் வடிவமைத்தனர். அந்த
எழுத்துக்களை வார்த்து அச்சடிக்கும் முறை வழக்கிற்குக்
கொண்டுவரப்பட்டது. 15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில்
கையால் எழுதப்பட்ட எழுத்துகளையே மாதிரியாகக் கொண்டு
அச்சு உருவாக்கி நூல்களை வெளியிட்டனர். இம்முறையால்
கையெழுத்திற்கும் அச்சிற்கும் வேறுபாடு காணப்படவில்லை
ஜான் கூட்டன்பர்க் எனும் ஜெர்மானியர் முதன்முதலில்
ஐரோப்பாவில் தனித்தனி உலோக எழுத்துகளை 1437இல்
உருவாக்கி, அச்சுப்பொறியையும் கண்டுபிடித்தார். இதனால்
இவர் ‘அச்சுக்கலையின் தந்தை’ என்று போற்றப்படுகின்றார்.

        
        (Gutenburg) கூட்டன்பர்க்

தனித்தனி எழுத்துக்களைக் கொண்டு ‘விவிலிய நூல்’
முதன்முதலில் தோலாலான தாளில் அச்சிடப்பட்டது. இந்நூலில்
ஒரு பக்கத்திற்கு 35 வரிகள் இருந்தன. இவரது அச்சு
இயந்திரம், வேலையை எளிதாக்கி அதிகப் படிகள் எடுக்க
உதவியது. கூட்டன்பர்க்கின் மாணவரான ‘நியூ மெரிஸ்டர்’ பல
நாடுகளில் அச்சுத் தொழில் முன்னேறக் காரணமாக இருந்தார்.
அச்சுப் பெருக்கத்தால் பல்துறை நூல்கள் அச்சடிக்கப்பட்டு
வெளியிடப்பட்டன. நூல்நிலையங்கள் தோன்றின. இது
உலகளாவிய தொழிலாக மாறியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:14:42(இந்திய நேரம்)