தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அச்சிடுதலில் நவீனப்போக்குகள்

5.6 அச்சிடுதலில் நவீனப் போக்குகள்

    அச்சுப் பொறிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு அச்சு
எழுத்துகளின் மேல் மையைத் தடவிச் சுற்றிலும் மரத்தாலான
சட்டங்கள் வைத்து முடுக்கி, காகிதத்தையோ அல்லது
துணியையோ அதன்மேல் வைத்து அழுத்தி எடுத்து அச்சுப்
பதித்தனர்.

    சில     காலத்திற்குப்பின்     எரல்ஸ்டான்     ஹோப்
(Earl Stan Hope) என்பவர் இரும்புச் சட்டங்களைப்
பயன்படுத்தி ஓர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
இதற்குப்பின்,     1813இல்     சார்ஜ்     கிளைமெக்ஸ்
(George Clymex) என்ற ஆங்கிலேயர் கொலம்பியன்
பிரஸ் (Columbian Press) என்ற இயந்திரத்தைக்
கண்டுபிடித்தார்.     1814இல்     ஹோப்கின்சன் ஹோப்
(Hopkinson Hope) என்பவர்     ஆல்பியன் பிரஸ்
(Albian Press) என்னும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார்.
நாளடைவில் காலால் மிதித்து அச்சடிக்கும் டிரெடில் பிரஸ்
(Treadle Press) என்னும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் பின்பு அறிவியல் முன்னேற்றம் வளர வளர நவீன
அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அச்சுக்கலை
நவீனமயமாகி வருகின்றது.

        
        Columbian Press

        
        Albian Press

        
        Treadle Press

5.6.1 அச்சடிக்கும் இயந்திரங்கள்

    இக்காலத்தில் அச்சடிக்கப் பயன்படும் இயந்திரங்களை
நான்கு பிரிவுகளில் அடக்கலாம். அவை:

1). காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம் (Tredle of
Platers machine)
2). உருளை அச்சு இயந்திரம் (Cylinder machine)
3). சுழல் அச்சுப்பொறி இயந்திரம் (Rotary machine)
4). எதிரீட்டு அச்சிடும் இயந்திரம் (Offset Printing
    machine)

என்பனவாகும்.

    இந்தியாவில்     புதுதில்லி, மும்பை, அமிர்தசரஸ்,
பரிதாபாத், சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் அச்சு
இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன

• காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரம்

    காலால் மிதித்து அச்சடிக்கும் இயந்திரங்கள் தொடக்கக்
காலங்களில்     காலால் மிதிக்கப்பட்டு இயக்கப்பட்டன.
மின்வசதி     இல்லாத இடங்களில் இத்தகைய அச்சு
இயந்திரங்களே     பயன்படுத்தப்படுவதற்கு     ஏற்றனவாக
இருந்தன. மின்வசதி பெற்ற ஊர்களில் பின்னர், காலால்
மிதித்து இயக்குவதற்குப் பதிலாக மின்சாரத்தால் அவை
இயக்கப்பட்டன. இவ்வகை ‘டிரெடில்’ இயந்திரங்கள் மேலும்
இரண்டு பிரிவுகளில் உருவாக்கப்பட்டன. அவை:

    இக்காலத்தில் அச்சடிக்கப் பயன்படும் இயந்திரங்களை
நான்கு பிரிவுகளில் அடக்கலாம். அவை:

1)

சிறிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம்
(Light Platten)

2)

பெரிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம்
(Heavy Platten)

என்பனவாகும்.

• சிறிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம்

    சிறிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரத்தைக்
கொண்டு சாதாரண வேலைகளைச் செய்யலாம். சிறிய
வாணிகம் தொடர்பான வேலைகளையும் செய்யலாம். இந்த
இயந்திரத்தின் மேல்பாகத்தில் மை வைக்கும் தட்டுப் போன்ற
வட்ட அமைப்பு உள்ளது. அது சிறுகச் சிறுகச் சுழன்று
நகர்ந்து மையைப் பரவச் செய்து ஒரே சீராக அச்சடிக்க
உதவும்.

• பெரிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரம்

    பெரிய வேலைகளுக்குப் பயன்படும் இயந்திரத்தைக்
கொண்டு பெரிய வேலைகளை எளிதாகச் செய்ய முடியும்.
இந்த இயந்திரம் பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ்வியந்திரத்தில் தாள் வைக்கும் பாகம் (Bed) அசையாது
இருக்கும். எழுத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும் பாகம் மட்டும்
அசைந்து தாளில்     பதியும்.     இன்றைய அறிவியல்
முன்னேற்றத்தின் காரணமாகத் தற்போது, தானே தாள்
எடுத்துத் தானாகவே அச்சடிக்கும் இயந்திரங்கள் அதிக
அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    காலால் இயங்கும் இந்த இயந்திரம் முழுத்தாள் (Fools
cap), கிரௌன் (Crown Folio), டெம்மி (Demy Folio), ராயல்
(Royal Folio) என்னும் பல அளவுகளில் கிடைக்கின்றன.

• உருளை அச்சு இயந்திரம்

    உருளை அச்சு இயந்திரம் புத்தக வேலைகளைச்
செய்வதற்குப்     பெரிதும் பயன்படுகின்றது. இவ்வகை
இயந்திரங்கள் மூன்று வகைகளில் பகுக்கப்படுகின்றன. அவை:

1)

நின்று சுழலும் அச்சு இயந்திரம் (Stop Cylinder)

2)

ஒற்றைச் சுற்று இயந்திரம் (Single Revolution Cylinder)

3)

இரட்டைச் சுற்று இயந்திரம் (Two Revolution Cylinder)


என்பனவாகும். இவ்வகை இயந்திரங்களின் மூலம் ஒரே
நேரத்தில் குறைந்தது எட்டுப் பக்கங்கள் வரை அச்சிடலாம்.

        
        Cylinder Platten Machine

• எதிரீட்டு (ஆப்செட்) அச்சிடும் இயந்திரம்

    அமெரிக்காவைச் சேர்ந்த     சிக்காகோ     நகரில்
அச்சடிப்பாளன் அச்சடித்துக் கொண்டிருந்தபோது காகிதத்தின்
மீது விழவேண்டிய அச்சுப்பதிவு எதிர்பாராத விதமாக
அங்கிருந்த ரப்பர் போன்ற பொருளின் மீது விழவே அதன்
மூலம் ‘ஆப்செட்’ இயந்திரம் கண்டுபிடிக்க வழிவகுத்தது.

    ஆப்செட் அச்சிடும் இயந்திரம் தற்கால நவீன அமைப்பு
முறைகளில் ஒன்றாகும். இந்த இயந்திரத்தில் அச்சு உலோகப்
படிவத்திலிருந்து (metal Plates) மெதுவாக ரப்பர் தகட்டிலும்
(Rubber blankets) அதிலிருந்து காகிதத்தின் மீதும் படிகள்
எடுக்கப்படுகின்றன. இம்முறைக்கு ஆப்செட் அச்சிடும் முறை
என்று பெயர்.

        
        Offset Printing machine

5.6.2 எழுத்தச்சுப் படமுறை (Lithography)

    இன்றைய அறிவியல் உலகில் பல்வேறு வண்ணங்களில்
அச்சிடுவதற்கு எழுத்தச்சுப்பட முறை அல்லது லித்தோகிராபி
முறை பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. பக்கங்களைப்
படமாக்கி அச்சிடும் (Photo print) முறையும் இப்போது
வழக்கில் உள்ளது.

    இந்த முறை பட உருவத்தைச் சிறிதாக்கவோ
பெரிதாக்கவோ கூடிய கருவிமுறையைக் கொண்டதாகும்.
இதில் கரிமச் சுண்ணாம்புக் கல்லில் கொழுப்பு அல்லது
ஒருவகையான பசை தடவப்படும். பின்னர் இச்சுண்ணாம்புக்கல்
தண்ணீரை இழுத்துக் கொள்ளும்படி செய்யப்படும். அடுத்து
ஒரு கொழுப்புப் பசைக்கும் மற்றொரு கொழுப்புப் பசைக்கும்
தொடர்பு உண்டாக்கப்பட்டு அவை நீக்கு எதிரான
குணத்தைக் கொள்ளும்படி செய்யப்படுகிறது.

    இம்முறை இயந்திரத்தில் இருபுறமும் இயங்கக் கூடிய
படுக்கை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். இப்படுக்கைக்
கல்லின் கனத்திற்கு ஏற்றபடி உயர்த்தக் கூடியதாகவோ
தாழ்த்தக் கூடியதாகவோ அமைக்கப்பட்டு அச்சடிக்க உதவும்
வகையில் இருக்கும். இந்த இயந்திரத்தில் இரண்டு உருளைகள்
உள்ளன. ஓர் உருளை மையைக் கல்லின் மீது தடவும்;
மற்றொரு கனமான உருளை அழுத்தம் உண்டாக்கும்.
ஓர் இரும்புப் பலகை உருளைகளுக்குத் தேவையான
மையைத் தரும். இரண்டாவது உருளை அச்சடித்தத்
தாளை வெளியே எடுத்து வரும். இக்காலத்தில் கல்லிற்குப்
பதில்     அலுமினியம்     அல்லது     துத்தநாகத்தகடு
பயன்படுத்தப்படுகின்றது. இம்முறையே புகைப்பட எழுத்தச்சுப்
படிவம் முறையில் (Photo Offset) பயன்படுகின்றது.

    புகைப்பட எழுத்தச்சுப் படிம முறையானது புகைப்பட
நெகடிவை, கல்லில் மிதித்துத் தட்டையான அச்சுப் பொறியால்
அச்சடிக்கும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

5.6.3 டெலி டைப் செட்டர் (Tele type setter)

    டெலி டைப் செட்டர் முறையை, தானாகவே அச்சுக்
கோக்கும் முறை என்று கூறலாம். இது தனியச்சு முறையில்
அச்சுக் கோப்பது போன்றே செயல்படும். தனியச்சு முறையில்
உள்ள பொத்தான் அமைப்பு     இதிலும் காணப்படும்.
இம்முறையில் சூடான உலோகக் கலவை மூலம் எழுத்துக்கள்
தயாரிக்கப்படும். ஆனால் இதில் முதலில் துளைசெய்யப்பட்ட
சுருள் வெளிவரும். பின்னர் இச்சுருள் அச்செழுத்துகள்
தயாரிக்கப்பயன்படும். இச்சுருளில் உள்ள குறியீடுகள்
ஓரிடத்திலிருந்து மற்றோர் இத்திற்குத் தந்திமுறை போன்று
அனுப்பப்படவும் முடியும். ஓரிடத்தில் அச்சுக் கோக்கப்பட்டு,
அதுவே மற்றோர் இடத்திற்கு அனுப்பப்படும் சாத்தியக் கூறு
இருப்பதால் ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து பத்திரிகை
வெளிவரும்படி செய்ய வாய்ப்புள்ளது. 1934இல் பிரிட்டனில்
இம்முறை கண்டுபிடிக்கப்பட்டது.

5.6.4 கணினி அச்சு அமைப்பு

    மனிதனால் உருவாக்கப்படும் எழுத்துக்கள் கணினியால்
உருவாக்கப்படும் நிலையாக இன்று வளர்ச்சி அடைந்துள்ளது.
அச்சுக் கோக்கப்படுவதற்கு மட்டுமன்றி, அச்சிடுவதற்கும்
கணினி முறை பயன்படுகின்ற நிலை இப்பொழுது
வளர்ந்துள்ளது. மேலை நாட்டுச் செய்தித்தாள்கள் பல
இத்தகைய முறையில் அச்சிடப்பட்டு வெளிவருகின்றன. டி.டி.பி.
(D.T.P. - Desk Top Publishing) எனப்படும் இம்முறை
கணினி வைத்திருப்போர்க்குப் பெரிய கொடையாகும். மிகக்
குறைந்த நேரத்தில் அதிக அளவுள்ள பக்கங்களையுடைய
செய்திகளை இதனால் அச்சுக் கோக்க முடியும். அதிக
அளவிலான படிகள் இம்முறையால் அச்சடிக்கப்படுகின்றன.
பக்கங்களின் அமைப்பு முறையும் (Lay out) அழகும்
படிப்போரை வெகுவாக ஈர்க்கும். கணினியின் வளர்ச்சி
நிலையாக வி.டி.யூ. எனப்படும் ‘விஷீவல் டிஸ்பிளே
யூனிட்’ (V.D.U - Visual Display Unit) என்பது அச்சுக்
கோக்கும் பணியையும் பக்க ஒருங்கிணைப்பையும் ஒருசேர
மேற்கொள்கிறது. ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு
எடுத்துச் செல்லப்படும் வி.டி.யூ. கருவிகளும் இப்பொழுது
நடைமுறையில் உள்ளன.

        
        Desk Top Publishing

5.6.5 டெலிவியூ (Teleview)

    டெலிவியூ முறையில் ஒரு செய்தித்தாளின் அனைத்துப்
பக்கங்களும்     உருவாக்கப்பட்டுச் செயற்கைக்கோளுக்கு
அனுப்பப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து செய்தித்தாளின்
பிற கிளை அலுவலகங்களுக்குப் படஅச்சுப் படிவமாக
(Fascimile) அனுப்பப்படுகின்றன. இத்தகைய முறையில்
ஜப்பானில் உள்ள ‘அஷகி ஷிம்புன்’ (Asahi Shimbun)
என்ற செய்தித்தாளும் ரஷ்யாவில் உள்ள ‘ப்ராவ்தா’வும்
அச்சடிக்கப்படுகின்றன.

    ‘அஷகி ஷிம்புன்’ செய்தித்தாள் புதிய முறையைப்
பின்பற்றியது. செயற்கைக்கோள் மூலம் செய்தித்தாள்
நிறுவனங்களுக்குப் பக்கங்களை அனுப்புவதற்குப் பதிலாக,
வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கே
நேரடியாகச்     செய்திகள்     பத்திரிகை     வடிவில்
அனுப்பப்படுகின்றன. வீடுகளில் உள்ள மக்கள் தங்கள்
தொலைக்காட்சிப் பெட்டிகளிலேயே     செய்தித்தாளின்
பிம்பத்தைப் பார்த்துச் செய்திகளைப் படித்துக்கொள்வர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:15:05(இந்திய நேரம்)