தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

சங்க கால ஆட்சி முறை

1.3 சங்க கால ஆட்சிமுறை


    மன்னர்கள் நாட்டை ஆள்வதற்கு உறுதுணையாக இருந்த
சில குழுக்களைப் பற்றி அறிந்து கொள்வோம். அதைப்போல,
ஊர் நிர்வாகம், மன்னர்கள் மக்களுக்கு ஆற்றிய கடமைகள்,
போர்முறை ஆகியவற்றையும் தெரிந்து கொள்வோம்.

1.3.1 குழுக்கள்


    அரசர்களின் அரசுப் பணிகளைச் சிறப்புடன் செயல்படுத்த
பல குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் சிறப்புடையவை,
ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்றவையாகும்.

  • ஐம்பெருங்குழு

  •     சங்க கால மூவேந்தர்க்கும் (சேர, சோழ, பாண்டியர்)
    அரசியல் பணிகளை மேற் கொள்ள அமைச்சர், சேனைத்
    தலைவர், புரோகிதர், (சமயப் பணி செய்பவர்), தூதுவர், சாரணர்
    என்ற ஐம்பெருங்குழுவினர் இருந்தனர்.

  • எண்பேராயம்

  •     கரணத்தியலவர் (ஆட்சிப்பணி செய்பவர்), புரோகிதர்,
    நகரமாந்தர், படைத் தலைவர், யானை வீரர், குதிரை வீரர்,
    கனகச் சுற்றம் (காசுத் தொடர்புடைய பணியாளர்), கடைக்
    காப்பாளர் (காவல் அதிகாரிகள்) என்ற எட்டுப் பிரிவினரும்
    எண்பேராயம் என்ற பெயரால் அரசுப்     பணிகளை
    மேற்கொண்டனர்.

    1.3.2 ஊர் நிர்வாகம்

        ஒரு நாடு முழுவதும் அரசனது கட்டுப்பாட்டிற்குள் திகழ்ந்த
    போதும், அந்நாட்டிலுள்ள ஊர்கள் அனைத்தும் மக்களால்
    குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஊரவையினரால்
    நிருவகிக்கப்பெற்றன.     ஊர் நிருவாகத்திற்குத்     தகுதி
    உடையவர்களின் பெயர்களை, தனித்தனியே ஓலை நறுக்கில்
    (துண்டில்) எழுதி, ஒரு குடத்தில் இட்டு, உலக அனுபவம்
    பெற்றிராத ஒரு சிறு குழந்தை மூலம் ஒலையை எடுக்கச் செய்து,
    அதில் குறிப்பிட்டிருப்பவரையே நிருவாகியாகத் தேர்ந்தெடுத்தலே
    குடவோலை முறைத் தேர்வாகும். இவ்வாறு தேர்வு செய்யப்
    பெற்ற ஊர் அவையினரே ஊர் வழக்குகளை விசாரித்துத் தீர்வு
    அளித்தல், வரிவசூல் செய்தல், பஞ்சம் ஏற்படும் போது
    ஊர்மக்களைக் காத்தல், நீர்ப்பாசன வசதி செய்தல், மக்கள் நலம்
    பேணுதல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.

    1.3.3 மன்னர் கடமை

        மன்னர்கள் பொற்கைப் பாண்டியனைப் போன்று இரவு
    நேரங்களில் மாறுவேடத்தில் நகர்ச்சோதனை செய்து மக்களின்
    குறைகளை உணர்ந்து அவற்றை நீக்கி நல்லாட்சி தந்தனர்.
    ‘நெல்லும் நீரும் மக்களுக்கு உயிர்’ என்பதை உணர்ந்து
    ஆறுகளின் கரைகளை உயர்த்துதல், ஏரி குளங்கள் வெட்டுதல்,
    வாய்க்கால் வழி பாசனம் ஏற்படுத்துதல் போன்ற பணிகளை
    மேற்கொண்டனர். உள்நாட்டு வணிகமும், கடல் வணிகமும்,
    பிறநாட்டு வணிகமும் சிறக்க உதவினர். ஒற்றர் படைகளை
    அமைத்து நாட்டின் பாதுகாப்பில் மிக்க கவனம் செலுத்தினர்.
    நியாயமான, நல்லாட்சி நடத்தினர்.

    1.3.4 படையினர்


        தன் நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளவும், எதிரி நாடுகளை
    வெற்றி கொள்ளவும், காலாட்படை, தேர்ப்படை, யானைப்படை,
    குதிரைப்படை எனும் நான்கு விதமான படைகளை, சங்காலத்
    தமிழ்     மன்னர்கள் கொண்டிருந்தனர். காலாட்படையில்
    முன்னணிப்படை, பின்னணிப்படை என இரு பிரிவுகள் இருந்தன.


  • போர் நெறிகள்

  •     பழந்தமிழர், போரை ஒரு கலையாகவே போற்றினர். ஆநிரை
    கவர்தல் (பசுக்கூட்டங்களைக் கைப்பற்றுதல்), அவ்வாறு கவர்ந்த
    நாட்டின் மீது போர்தொடுத்தல், பகையரசனின் மதிலை
    வளைத்தல், போரிடுதல், வெற்றி பெறுதல் என்பவற்றை வெட்சி,
    கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை
    எனப் பல திணைகளாகப் பிரித்துப் போற்றினர். ஒவ்வொரு
    திணையும் ஒரு பூவின் பெயர் பெற்றது. வெட்சி வீரர் வெட்சிப்
    பூவைச் சூடுவர். கரந்தை வீரர் கரந்தை மலரைச் சூடுவர்.
    இவ்வாறு தம்முள் வேறுபாடு அறியப் பூக்களால் ஆகிய
    மாலையைச் சூடிக்கொண்டு போரிடுதல் அக்கால வழக்கமாகும்.
    போரில் வெற்றி பெற்ற வேந்தன் தன் வீரர்களுக்கு
    விருந்தளிப்பான். சிறந்த வீரர்களுக்குப் பட்டமும் பரிசில்களும்
    அளிப்பது அக்கால நடை முறையாகும். மன்னர்களின்
    வெற்றியைப் புகழ்ந்து பாடும் புலவர், பாணர், கூத்தர், விறலி
    போன்றவர்களுக்குப் பரிசில்கள் அளிப்பதும் சங்க காலத் தமிழ்
    மரபாகும்.

    1.3.5 நாணயங்கள்

        சங்க காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய
    உலோகங்களில் வடிக்கப் பெற்ற காசுகளையே பயன்படுத்தினர்.
    உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு இருந்ததால் உரோமர்
    நாட்டு நாணயங்கள் தமிழகத்தில் பெருமளவில் கிடைத்துள்ளன.
    சேர, சோழ, பாண்டிய அரசர்கள் வெளியிட்ட பல வகையான
    காசுகள் அண்மைக் காலத்தில் தொல்லியல் ஆய்வாளர்களுக்குக்
    கிடைத்துள்ளன.     அவற்றை வகைப்படுத்தி     நூல்களும்
    வெளியிட்டுள்ளனர். சங்ககாலப் பாண்டியன் பல்யாக சாலை
    முதுகுடுமிப் பெருவழுதி வெளியிட்ட நாணயத்தில் ‘பெருவழுதி’
    என்ற தன் பெயரைத் தமிழ் எழுத்தில் (தமிழ் பிராமி எழுத்தி்ல்)
    பொறித்துள்ளான். எல்லா வகையான சங்க காலப் பாண்டியர்
    காசுகளிலும் மீன் சின்னம் காணப்பெறுகின்றது. எழுத்துப்
    பொறிப்புகள் உள்ள     சோழர்     காசுகள்     கிடைக்கப்
    பெறவில்லையாயினும், எல்லாக் காசுகளிலும் நின்ற நிலையில் ஒரு
    காலைத் தூக்கிய நிலையில் இருக்கும் புலி உருவம்
    காணப்பெறுகின்றது. சங்க காலச் சேரர் காசுகளில் வில் அம்பு
    ஆகிய சின்னங்கள் காணப்பெறுகின்றன. ‘கொல்லிப்புறை’,
    ‘கொல்லிரும்பொறை’ என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புள்ள சேரர்
    காசுகள் ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. ‘மாக்கோதை’ என்ற
    பெயர் பொறித்த சேரர் காசில் அரசனது தலை உருவம்
    காணப்பெறுகின்றது. இவை பெரும்பாலும் செப்புக் காசுகளாகவே
    உள்ளன.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)