தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல்விக் கூடங்கள்

2.4 கல்விக் கூடங்கள்


    பல்லவர் ஆட்சிக் காலத்தில் பல்துறை அறிவை வளர்க்கும்
கடிகைகளும் கல்லூரிகளும் காஞ்சிபுரம், சோளிங்கர் எனப்படும்
சோழ சிங்கபுரம் (கடிகாசலம்), பாகூர், பாடலிபுரம் (திருப்பாதிரிப்
புலியூர் - கடலூர்) எனும் இடங்களில் திகழ்ந்தன என்பதைப்
பல்வேறு சாசனங்களும் இலக்கியங்களும் எடுத்துரைக்கின்றன.
கதம்ப அரசர் மரபைத் தோற்றுவித்த மயூரசன்மன் காஞ்சிக்
கடிகையிலிருந்து பல்லவ அரசனால் விரட்டப்பட்டான் என்ற
குறிப்பு காணப்பெறுவதால் கடிகைகள் பல்லவ அரசர்களின்
கட்டுப்பாட்டிற்குள் இருந்தன     என்பது தெளிவாகின்றது.
சமஸ்கிருதமும், தமிழும் பல்லவர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற
மொழிகளாகத் திகழ்ந்தன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர் ஆகிய தேவார மூவர்களாலும் திருமங்கையாழ்வார்
போன்ற ஆழ்வார்களாலும், தமிழ்மொழி ஏற்றம் பெற்றது.

2.4.1 இலக்கியம்

    
    பல்லவ அரசர்களின் ஆக்கத்தாலும், சமயங்களின்
எழுச்சியாலும் வடமொழியிலும், தமிழிலும் பல நூல்கள்
மலர்ந்தன. லோக விபாகம், கிராதார்ஜு னீயம், அவந்தி
சுந்தரிகதா, மத்தவிலாசப் பிரகசனம், பகவத்அச்சுதம்,
காவ்யாதர்சம்    
போன்ற     சமஸ்கிருத     நூல்கள்
குறிப்பிடத்தக்கவையாகும்.     தேவாரம், நாலாயிரத்திவ்வியப்
பிரபந்தம், யாப்பு நூல்கள், நந்திக்கலம்பகம், பாரதவெண்பா,
திருவாரூர் மும்மணிக்கோவை, ஞானவுலா போன்ற தமிழ்
நூல்களும், பல்லவர்தம் சிற்றரசனாக விளங்கிய சுவரன்மாறன்
எனும் பெரும்பிடுகு முத்தரையனைப் புகழும் நியமத்துக்
கல்வெட்டுப் பாடல்களும் இலக்கிய வளர்ச்சியின் திறத்தை
எடுத்துக்காட்டுபவையாகத் திகழ்கின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)