தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆட்சி முறை

3.4 ஆட்சி முறை


     சோழஅரசர்கள்     நிர்வாகம் சிறப்பாகவும், திறனாகவும்
நடைபெறுவதற்காக, நாட்டைப் பல பிரிவுகளாகப் பிரித்தனர்.
ஆட்சியைத் தொடர்ந்து செயல்படுத்த சில வரன்முறைகளைப்
பின்பற்றினர், அமைச்சர்களையும் உயர் அலுவலர்களையும்
பயன்படுத்தி ஆட்சியைச் சீர்மைப் படுத்தினர், நிலங்களை அளந்து
தரம்பிரித்து      வரிவசூலித்தனர் மக்களுக்கு நியாயங்கள்
கிடைக்கும் வகையில்     நீதி மன்றங்களை ஏற்படுத்தினர்.
கல்விப்பணி கோயிற்பணி, இலக்கியப்பணி ஆகியவற்றையும்
செய்தனர். இவ்வாறு பிற்கால ஆட்சியாளருக்கு எடுத்துக்காட்டாக
ஒரு நல்ல ஆட்சி முறையை நிறுவினர்.

3.4.1 சோழமண்டலம்

     சிதம்பரத்திற்கு அருகேயுள்ள வடவெள்ளாறு வட
எல்லையாகவும், குளித்தலைக்கு மேற்கே மாயனூர் அருகே
மதிற்கரை, முசிறிக்கு     மேற்கே காவிரியோடு கலக்கும்
கரைப்போத்தனாறு      ஆகியவை     மேற்கெல்லையாகவும்,
புதுக்கோட்டை மாவட்டத்து வெள்ளாறு தென் எல்லையாகவும்,
வங்கக்கடல் கிழக்கு எல்லையாகவும் திகழும் நிலப்பகுதியே
சோழ மண்டலமாகும். தற்போதைய கரூர் மாவட்டத்தின் ஒரு
பகுதி,திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர்
மாவட்டங்கள்,     பெரம்பலூர்,     கடலூர்,     புதுக்கோட்டை
மாவட்டங்களின் ஒரு பகுதி ஆகியவை சோழமண்டலத்திற்குள்
அடங்கும். சோழப்பேரரசர்கள் இப்பகுதியைத் தாயகமாகக்
கொண்டு, தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய
இடங்களைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததோடு, பிற
மண்டலங்களையும் தங்கள் ஆதிக்கத்தின்கீழ்க் கொணர்ந்து
சோழ ராஜ்யத்தின் பரப்பை விரிவுபடுத்தினர்.

  • நாடுகள்
     சோழப்பேரரசுக்கு உட்பட்ட நாடுகள் கீழ்க்குறிப்பிடுமாறு
மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தன.

(1) இராசராசப்பாண்டி மண்டலம் (பாண்டியநாடு)
(2) சயங்கொண்ட சோழ மண்டலம் (பிரிக்கப்படாத     தென்ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கற்பட்டு, சித்தூர் மாவட்டங்கள்)
(3) மும்முடிச் சோழ மண்டலம் (ஈழ நாடு)
(4) முடிகொண்ட சோழ மண்டலம் (மைசூர் நாட்டின்
     தென்பகுதி, சேலம¢ மாவட்டத்தின் வட பகுதி ஆகியவை
     கொண்ட கங்கபாடி நாடு)
(5) நிகரிலி சோழ மண்டலம் (மைசூர் நாட்டின்
     கீழ்ப்பகுதியையும் பல்லாரி மாவட்டத்தையும் கொண்ட
     நுளம்பபாடி நாடு)
(6) அதிராசராச மண்டலம் (சேலம், கோவை மாவட்டங்கள்
     அடங்கிய கொங்கு நாடு)
(7) மலை மண்டலம் (சேர நாட்டின் பெரும்பகுதி)
(8) வேங்கை மண்டலம் (கிருஷ்ணா கோதாவரி ஆகிய இரு
     பேராறுகளுக்கு இடைப்பட்ட கீழைச்சாளுக்கிய நாடு)

  • நாட்டுப்பிரிவுகள்
     ஒவ்வொரு மண்டலமும் பல வளநாடுகளாகவும், வளநாடுகள்
நாடுகளாகவும்,     நாடுகளுள்      சில     கூற்றங்களாகவும்
பிரிக்கப்பட்டிருந்தது. இப்பிரிவுகளின்கீழ் ஊர்கள் திகழ்ந்தன.
அவை     சதுர்வேதிமங்கலம் என்றும் ஊர்கள் என்றும்
பெயர்பெற்றுத் திகழ்ந்தன. ஊர்களின் கீழ், பல சிற்றூர்களும்
இருந்தன. முதல் இராசராசசோழன் சோழமண்டலத்தை ஒன்பது
வளநாடுகளாகப் பிரித்திருந்தான். அவை

(1) இராசேந்திர சிங்கவளநாடு ,
(2) இராசராசாசிரய வளநாடு,
(3) கேரளாந்தக வளநாடு,
(4) பாண்டியகுலாசனி வளநாடு,
(5) நித்தவிநோத வளநாடு,
(6) உய்யக்கொண்டார் வளநாடு,
(7) சத்திரிய சிகாமணி வளநாடு,
(8) அருள்மொழிதேவ வளநாடு,
(9) இராசராச வளநாடு என்பனவாம்.

இவை இரண்டிரண்டு பேராறுகளுக்கு நடுவமைந்த நிலப்பரப்பாகும்.
இராசராசனுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள் இப்பெயர்களில் சிலவற்றை நீக்கிவிட்டுப் புதிய பெயர்களை இட்டனர்.

3.4.2 அரசர்
 
     சோழர் அரச முறை பெரும்பாலும் தந்தை மகன் என்ற
உரிமை அடிப்படையிலேயே இருந்தது. சில காலகட்டங்களில்
உடன் பிறந்த சகோதரர்களும் ஆளும் உரிமை பெற்றனர்.
முதற்குலோத்துங்கன் தாய்     வழியில் அரச உரிமை
பெற்றவனாவான்.


  • பட்டப்பெயர்கள்
     ஒவ்வொரு சோழ அரசரும் பல பட்டப்பெயர்களைத்
தங்கள் சாசனங்களில் பொறித்தனர். பெரும்பாலும் அவை
வெற்றிகளின் அடிப்படையிலேயே அமைந்தன. இராசகேசரி,
பரகேசரி எனும் இரண்டு பட்டங்களை மட்டும் அரசர்கள்
மாறிமாறிப் புனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தங்கள்
இயற்பெயர் ஒன்றாக இருப்பினும் முடிசூடும் போது பெறும்
அபிடேக நாமமே அவர்களுக்கு உரிய நிலைத்த பெயராயிற்று.
அருண்மொழி என்ற இயற்பெயர் பெற்ற சுந்தரசோழனின் மகன்
அபிடேக நாமம் பெற்றதால் முதலாம் இராசராசசோழனானான்.

  • அரசரும் சமய நிலையும்
     சோழப்பேரரசர்கள் அனைவரும்     சைவ     சமயச்
சார்புடையவர்களாகத் திகழ்ந்தபோதும், எல்லாச் சமயத்தவர்க்கும்
ஒத்த உரிமையும், சலுகைகளும் வழங்கினர். சமய நல்லுறவு
சோழப்பேரரசர்கள் காலத்தில் தழைத்தது. கடாரத்து அரசன்
நாகப்பட்டினத்தில் கட்டிய பௌத்தப்பள்ளிக்கு , சிவபாதசேகரன்
எனும் இராஜராஜனும், முதற்குலோத்துங்கனும் அளப்பரிய
நிலக்கொடை கொடுத்து, செப்பேட்டுச்சாசனம் வழங்கியமை
குறிப்பிடத்தக்க சான்றுகளாகும்.

• சோழர் இலச்சினை

     சங்க காலத்துச் சோழர்களும், பிற்காலச்சோழர்களும் புலி
உருவத்தையே தங்கள் இலச்சினையாகக் கொண்டனர். சேர,
பாண்டிய     நாடுகளின் மலோதிக்கத்தைக் கொண்டதால்
சேரர்களுக்குரிய வில்லையும், பாண்டியர்களுக்குரிய இரு மீன்
உருவங்களையும் தங்கள் இலச்சினையிலேயே இடம்பெறுமாறு
செய்தனர். அட்டமங்கலங்கள் எனும் ஸ்வஸ்திகம், கண்ணாடி,
மத்தளம் போன்ற பொருள்களையும் அவ்விலச்சினையிலேயே
இடம்பெறச் செய்தனர். சோழர்களின் கொடி புலிக்கொடியே
ஆகும்.

  • அமைச்சர் குழு
     சோழப்     பேரரசர்களுக்கு ஆட்சியில் உறுதுணையாய்
விளங்க இளவரசனும் அமைச்சர் குழுவினரும் இருந்தனர்.
சோழர் கால இலக்கியங்கள் (கலிங்கத்துப்பரணி போன்றவை),
கல்வெட்டுகள், பிற நாட்டார் பயணக்குறிப்புகளில் சோழ
அமைச்சர்கள் பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன.

  • உயர்நில அலுவலர்கள்
     சோழப்பேரரசர்களுக்கு      அமைச்சர்கள் மட்டுமன்றி,
நால்வகைப்      படைத்தலைவர்களும்,     அவர்களுக்குத்
தலைவராகவுள்ள மாசாமந்தர் (சேனாபதி), திருமந்திர ஓலை,
திருமந்திர ஓலை நாயகம், விடையில் அதிகாரி, கருமம் ஆராயும்
அதிகாரி, நாடுகாவல் அதிகாரி, புரவு வரி திணைக்கணத்தார்
போன்ற பலதரப்பட்ட உயர்நிலை அலுவலர்களும் ஆட்சியில்
துணைபுரிந்தனர்.

3.4.3 கிராம ஆட்சி முறை

     ஒவ்வொரு     ஊரின்     நிர்வாகத்தையும்     மக்களால்
தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் அடங்கிய     சபையே
மேற்கொண்டது. பிரதிநிதிகள் தேர்வுக்கு, குடவோலை முறை
எனும்     தேர்தல் முறையை     மேற்கொண்டனர்.
தகுதியுடையவர்களின்     பெயர்களை ஓலையில் எழுதிக்
குடத்தில் இட்டு சிறு குழந்தை மூலம் ஓலையை எடுக்கச்
செய்து, தேர்வு செய்யப்பெறும் உறுப்பினரை ஒத்த
கருத்தோடு ஏற்றனர். தேர்தலுக்கு நிற்பவர்களின் தகுதிகள்
கடுமையானதாகவும்,     ஒழுக்கமுடையவர்களே இடம்பெறும்
வகையிலும் இருந்தன. அரசனுடைய ஆட்சியாக இருந்தாலும்
மக்களாட்சி முறைக்கு அரசர்களே மிகுந்த ஆக்கம் தந்தனர்.

3.4.4 நீதிமன்றங்கள்

     பெரும்பாலான வழக்குகளை ஊர்ச்சபைகளே விசாரித்து முடிவு
கண்டனர். சில முக்கிய வழக்குகள் மட்டுமே அரசனின்
விசாரணைக்கு உட்பட்டன. சில நேரங்களில் ஊர்ச்சபையில்
முடிவுகள் தவறாகும்போது அரசனே நீதி வழங்கியமை குறித்த
கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன.

  • ஆவணக்களரி
     சோழ அரசர்கள் நில அளவை முறையில் மிகுந்த
கவனம் செலுத்தியதால் நில அளவைப் பதிவுகளும், வரியிடும்
கணக்குகளும் முறையாக உரிய அலுவலர்கள் மூலம் பதிவு
செய்யப்பெற்றன.      ஆங்காங்குள்ள ஆவணக்களரிகளின்
பதிவுகளைத் தலைமை இடத்திலும் பாதுகாத்து வைத்தனர்.
இயற்கையின்     உற்பாதங்களாலும்,      விபத்துக்களாலும்,
போர்களாலும் ஊர் ஆவணங்கள் அழியும்போது, தலைமையிடத்து
ஆவணங்கள் மூலம் மீண்டும் கணக்குகளைப் புதுப்பித்த
செய்திகள் சோழர் கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன.

3.4.5 நில அளவும் வரிவசூலித்தலும்

     பிற்காலச்சோழர் ஆட்சியில் நிலங்களை அளந்து வரையறை
செய்தமையும் அவற்றைத் தரம்பிரித்து வரி வசூலித்தமையும்
குறிப்பிடத்தக்க சிறப்புக் கூறுகளாகும்.

  • நிலஅளவு
     சோழ மண்டலத்தின் நிலப்பரப்பை மிகத்துல்லியமாக
அளந்து நிலங்களின் தன்மைக்கேற்பப் பகுத்து, ஆவணப்படுத்திய
முறை முதன்முதலாக கி.பி.1001இல் முதலாம் இராசராசசோழன்
காலத்தில்தான் நிகழ்ந்தது. அப்பணியை, குரவன் உலகளந்தான்
இராசராசமாராயன் என்பான் நிறைவேற்றினான். மீண்டும்
இப்பணியை முதற்குலோத்துங்கன் கி.பி.1086இல் நிறைவேற்றினான்.
சோழ மண்டலத்தின் நிலப்பரப்பு துல்லியமாக அளவிடப்பட்டு,
தர அடிப்படையில் உறுதி செய்யப்பெற்று, நிலத்தன்மையின்
அடிப்படையிலேயே நிலவரி வசூலித்தனர்.

  • நீர் வளமும் நிலப்பாசனமும்
     சோழமண்டலத்தின் பெரும்பகுதி காவிரியாற்றுப்பாசனத்தாலும்
மற்ற பகுதிகள் ஏரி, மழைக்கால ஆற்று நீர்ப்பாசனங்களாலும்
வளம்பெற்றன.      நாட்டின்     வருவாய்     விவசாயத்தின்
அடிப்படையிலேயே திகழ்ந்ததால் சோழப்பெருமன்னர்கள் நீர்
வளத்தை மேம்படுத்தவும், பாசனமுறைகளைச் சீர் செய்யவும்
பலவகை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீரநாராயணன் ஏரி
( வீராணம் ஏரி) போன்ற பல ஏரிகளை வெட்டி மழைக்கால நீரைச்
சேமிப்புச் செய்து,     விளைநிலங்களுக்குப் பயன்படுமாறு
செய்தனர். பெருவெள்ளம் ஏற்படும்போது காவிரிக்கரையில்
உடைப்பு ஏற்பட்டு      வெள்ளம் ஏற்படாமல் இருக்க,
காவிரிக்கரை விநியோகம் என்னும் வரியின் மூலம் கிடைக்கும்
வருவாய் கொண்டு கரையை ஆண்டுதோறும் பராமரித்தனர்.
ஏரிகள் போன்ற நீர் நிலைகளை, சமண, பௌத்த பள்ளிகள்
அல்லது ஏரி வாரியங்கள் மூலம் பராமரித்திட வகை செய்தனர்.

  • அரசிறையும் பிற வரிகளும்
     சோழ அரசர்களுக்குரிய வருவாய்களுள் முதன்மை பெற்று
விளங்கியது நில வரியேயாகும். இதனைக் கடமை என்றும்,
காணிக்கடன் என்றும், குறிப்பிட்டனர். மற்ற வகை வரிகளெல்லாம்
குடிமை எனவும் சுங்கம் எனவும் வழங்கப்பெற்றன. நிலவரியினை
நெல்லாகவும், காசாகவும் வசூலித்தனர். ஊர்ச்சபையும்,
பஞ்சவாரவாரியர் எனும்     அலுவலர்களும் அப்பணியை
மேற்கொண்டனர். பிற வகை வரிகளாக, தறியிறை, செங்கிறை,
மனை இறை, அங்காடிப்பாட்டம், தட்டாரப்பாட்டம்,
இடைப்பாட்டம்,      ஈழம் பூட்சி, வண்ணாரப்பாறை,
கண்ணாலக்காணம், குசக்கரணம், ஓடக்கூலி, நீர்க்கூலி , நாடுகாவல்,
உங்கு, தரகு, மரவிறை, இலைக்கூலம் என்பன போன்ற வரிகளாகக்
கல்வெட்டுகள் கூறுகின்றன. முதலாம் குலோத்துங்கன் சுங்க
வரிகளை நீக்கியதால் 'சுங்கம் தவிர்த்தசோழன்' எனப் பட்டம்
பெற்றான்.

  • காசுகள்
     சோழப்பெருமன்னர்களால் வெளியிடப்பெற்ற தங்கம், வெள்ளி,
செம்பு ஆகிய உலோகக் காசுகள் மிகுந்த அளவில்
ஆய்வாளர்களுக்குக் கிடைத்துள்ளன. உத்தமசோழன், இராசராசன்,
இராசேந்திரன் ஆகிய மன்னர்களின் பெயர் பொறித்த காசுகளும்
கிடைத்துள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)