கவிஞர் தாம் சொல்லக் கருதியதைக் கூற்றினால்
 (சொற்களால்), வெளிப்படையாகக் கூறுவதும் உண்டு.
 குறிப்பினால் (மறைமுகமாகக்) கூறுவதும் உண்டு.
 குறிப்பினால் உணர்த்தும் அணிகளுள் நுட்பஅணி  ஒன்று.
 
 செயல்பாட்டாலும், செய்யும் தொழிலாலும் கருத்தைக்
 
 குறிப்பாகப் புலப்படுத்தும் முறையில் அமைத்துப்
 
 பாடப்படுவது ஆகும்.
  
 
 
 3.5.1	நுட்ப அணியின் இலக்கணம்
 
 
 
     பிறர்கருத்தைத் தெரிந்து கொண்டு அதற்கான பதிலை
வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பினாலோ, செயலினாலோ
அரிதாக நோக்கி உணரும் படி வெளிப்படுத்துவது நுட்பம்
என்னும் அணியாம். அதாவது கருத்தை நுட்பமாக
உணர்த்துவது ஆகும். இதனை
  
 
 
 
 
 
 		 தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்
	 
அரிது உணர் வினைத்திறன் நுட்பம் ஆகும்
 
(தண்டி, 64)
	 
	 
	  
  
	
	
 
 என்ற நூற்பாவால் அறியலாம்.
 
  (தெரிபு = தெரிந்துகொண்டு;
வேறுகிளவாது = வெளிப்படையாகச் சொல்லாமல்)
     நூற்பாவில் 'குறிப்பினும் தொழிலினும்' என்றமையால்
 நுட்ப அணி 
குறிப்பு நுட்பம், தொழில் நுட்பம்  என
இரு வகைப்படும் என்பது பெறப்படும்.
 
 
 
     பிறருடைய கருத்தை அறிந்துகொண்டு, அதற்குத் தமது
கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனை,
அரிதாக நோக்கி உணர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பால்
தெரிவிப்பது குறிப்பு நுட்பம் எனப்படும். குறிப்பு என்பது,
மனத்தில் கருதியதைக் கண், முகம் போன்ற உடல்
உறுப்புகளின் செயல்பாட்டால் தெரிவிப்பது ஆகும்.
எடுத்துக்காட்டு
	 
	  
 	 
 	 
 		 
 
 
		 காதலன் மெல் உயிர்க்குக் காவல் புரிந்ததால்,
 
	 பேதையர் ஆயம் பிரியாத - மாதர்
	 
படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக்
	 
குடதிசையை நோக்கும் குறிப்பு
 
 
	  
	  
	 
  
 (பேதையர் = மகளிர்; ஆயம் = தோழியர் கூட்டம்;
மாதர் = தலைவி; சீக்கும் = போக்கும்;
குடதிசை = மேற்குத் திசை; குறிப்பு = உள்ளக் கருத்து.)
 .	பாடலின் பொருள்
 
     தோழியர் கூட்டத்தின் நடுவே இருக்கும் தலைவி,
உலகத்தில்   படர்ந்த இருளை அடியோடு போக்கும்
கதிரவனைப் பார்த்துவிட்டுப் பின்பு மேற்குத்   திசையைப்
 பார்க்கின்றாள். இந்தக் குறிப்பு, தலைவனுடைய
மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது.
 .	அணிப்பொருத்தம்
      தலைவன் பகல் பொழுதில் தலைவியைச் சந்திக்க
 
 வேண்டி வருகிறான். அப்பொழுது தலைவி தன்னை விட்டு
எப்பொழுதும் பிரியாது இருக்கின்ற தோழியர் கூட்டத்தின்
 
 நடுவில் இருக்கிறாள். எனவே இரவில் வந்து தன்னைச்
சந்திக்குமாறு அவனிடம் கூற விரும்பினாள். ஆனால்
தோழியர்கள் தன்னைப் புடை சூழ்ந்திருப்பதால் அதனை
அவனிடம் சொற்களால் கூற முடியவில்லை. எனவே
குறிப்பாக அதனை உணர்த்த விரும்புகிறாள். கதிரவனைப்
 
 பார்த்துவிட்டு உடனே மேற்குத் திசையை நோக்கித்
 
 திரும்பிப் பார்க்கின்றாள். இக்குறிப்பினால் கதிரவன் மறைந்த
 
 பின்பு இரவில் வந்து தன்னைச் சந்திக்குமாறு தலைவனுக்கு
உணர்த்துகிறாள். தலைவனும் அக்குறிப்பின் உள்பொருளை
அறிந்து கொள்கிறான். இவ்வாறு தலைவி தனது கருத்தைத்
தலைவனுக்குக் குறிப்பால் நுட்பமாக உணர்த்தியமையால்
 
 இப்பாடல் குறிப்பு நுட்பமாயிற்று.
 3.5.3	தொழில் நுட்பம்
 
 
     தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத
 நிலையில் அதனைத் தான் செய்து கொண்டிருக்கும்
செயலின் மூலம் குறிப்பாக உணர்த்தல்  தொழில் நுட்பம்
எனப்படும்.
 
 
எடுத்துக்காட்டு
 
	  
 	 
 	 
 		 
 
 
		 பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்
	 கூடல் அவாவால் குறிப்பு உணர்த்தும் - ஆடவற்கு 
	 மென்தீம் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்
 இன்தீம் குறிஞ்சி இசை.
 
 
	 
	 
	  
	  
	 
  
 
 (பணிமொழி - பணிவான சொற்கள், குளிர்ந்த சொற்கள்;
பணை - பருத்த; கூடல் - புணர்ச்சி; அவா - விருப்பம்;
தொடை - நரம்பு; தீம் - இனிய;
தைவந்தாள் - நரம்பை வருடிப் பாடினாள்.)
 
 .	பாடலின் பொருள்
 
     பாடும் தொழிலைப் பயின்று கொண்டிருக்கும் தலைவி,
 தன்னுடைய பருத்த தோள்களினால் தலைவனைத் தழுவ
 வேண்டும் என்னும் விருப்பத்தாலே, அவனுக்குத் தன்னுடைய
 உள்ளக் கருத்தைக் குறிப்பாக உணர்த்த வேண்டி, தான்
இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய இனிய நரம்பை உடைய
 யாழில் இனிய குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடினாள்.
 
.	அணிப்பொருத்தம்
 
     யாழ் மீட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள் தலைவி,
அந்நேரத்தில் தலைவன் வருகின்றான். தலைவி தலைவனிடம்
தனக்குள்ள புணர்தல் விருப்பத்தையும் அதன்பொருட்டு
யாமத்தில் (நள்ளிரவில்) அவன் வரவேண்டும் என்பதையம்
ஒருசேரத் தெரிவிக்க எண்ணுகிறாள். ஆனால் அதனைப்
பிறர் முன்பாக அவனிடம் நேரிடையாகத் தெரிவிக்க
அவளால் முடியவில்லை. எனவே அவள் அதனைக்
குறிப்பாக அவனுக்கு     உணர்த்த வேண்டி, யாழில்
 குறிஞ்சிப் பண்ணை மீட்டிப்    பாடத் தொடங்கினாள்.
குறிஞ்சிக்கு    உரிய    சிறுபொழுது     யாமம் (நள்ளிரவு).
இப்பாடலில் தலைவி, குறிஞ்சிப் பண்ணைப் பாடுதலாகிய
தொழிலால் அக்குறிஞ்சிக்கு உரிய இடை யாமத்தில் தலைவன்
தன்னை வந்து தழுவ வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை
நுட்பமாகத் தெரிவிக்கிறாள். எனவே இப்பாடல் 
 தொழில்
நுட்பமாயிற்று.