தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l2-6.2 அர்த்தபஞ்சகம்

  • 6.2 அர்த்தபஞ்சம்
    வைணவத்தில் மேலும் பல தத்துவக் கோட்பாடுகள்
    சம்பிரதாயமாக வழங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று
    அர்த்தபஞ்சகம் என்பது. வைணவ சமய உண்மைகளை
    ஐவகைப் பொருட்பிரிவில் அடக்கிக் காட்டுவது இது. அவை,
    (1) இறைநிலை (2) உயிர்நிலை (3) நெறிநிலை (4) தடைநிலை
    (5) வாழ்வுநிலை என்று தமிழில் வழங்கப்படும். அவையே
    (1) பரமாத்ம சொரூபம் (2) ஜீவாத்ம சொரூபம் (3) உபாய
    சொரூபம் (4) விரோதி சொரூபம் (5) புருஷார்த்த சொரூபம்
    என்று வடமொழியில் வழங்கப்படும்.

    இதனைப் பராசரபட்டர் என்னும் வைணவக் குரவர்
    (ஆசாரியப் பெருமகனார்) இரத்தினச்சுருக்கமாக,
    மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
    தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்
    ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
    யாழினிசை வேதத்து இயல்

    (திருவாய்மொழித்தனியன்)


    என்று விளக்கிப் பாடியுள்ளார். (தனியன் என்பது வாழ்த்துப்பா.
    வைணவ ஆசாரியர்கள்,     ஆழ்வார்களையும் அவர்தம்
    பிரபந்தங்களையும் போற்றிப் பாடியிருக்கிறார்கள். அப்பாடல்களே
    தனியன்கள் ஆகும். குறிப்பிட்ட ஆழ்வார் பெருமையையும்
    அவரது பாடலின் சிறப்பையும் தனியன் குறிப்பிட்டுப் போற்றும்.)

    இதில் (1) மிக்க இறைநிலை என்பது நாம் முன்னர்க்குறித்த
    பரமாத்ம சொரூபத்தையும் (இறைநிலை) (2) மெய்யாம் உயிர்நிலை
    என்பது ஜீவாத்ம சொரூபத்தையும் (உயிர்நிலை) (3) தக்கநெறி
    என்பது உபாய சொரூபத்தையும் (நெறிநிலை) (4) தடையாகித்
    தொக்கியலும் ஊழ்வினையும் என்பது விரோதி சொரூபத்தையும்
    (தடைநிலை) (5) வாழ்வினையும் என்பது வீடு பேறாகிய
    புருஷார்த்த சொரூபத்தையும் - வாழ்வுநிலை (பேற்றின்
    இயல்பையும்) குறிக்கின்றது. ஆக, இத்தனியன், நம்மாழ்வார்
    அருளிய திருவாய்மொழி, அர்த்தபஞ்சகம் என்பதன் விளக்கம்
    என்பதைச் சுருங்கவுரைக்கின்றது.

    இதனைச்     சற்று     விளக்கமாகப்     பார்க்கலாம்.
    திருமகள் கேள்வனாகிய நாராயணனே அறப்பெரிய முதல்வன்
    முழுமுதல் (இறைநிலை); ஆன்மாவிற்குச் சொரூபம் அடியேன்
    என்பதே (உயிர்நிலை); சரணாகதி, இறைவனைப் பெறுதற்குரிய
    வழி (தக்கநெறி); பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா
    ஒழுக்கும் அழுக்குடம்பும்
    ஆகிய இவையே விரோதிகள்
    (தடை); ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா
    அடிமை செய்வதுவே புருஷார்த்தம் என்னும் பேற்றுநிலை
    (வாழ்வு). இவ்வைந்து பொருள்களுமே திருவாய்மொழியில்
    சொல்லப்பெறுகின்றன.
    அந்த ஐந்து பொருள்களும் இடம்பெறும் திருப்பதிகங்கள்
    எவையெவை     என்பதையும்     ஆசாரியப்பெருமக்கள்
    எடுத்துக்காட்டியுள்ளனர்.
    (அ) இறைவனின் இயல்பு கூறும் திருவாய்மொழிகள்
    1. உயர்வற (1-1)
    2. திண்ணன்வீடு (2-2)
    3. அணைவது (2-8)
    4. ஒன்றும் தேவும் (4-10)

    என்னும் நான்கு திருப்பதிகங்கள்.

    (ஆ) ஆன்மாவின் இயல்பு கூறுவன
    1. பயிலும் சுடரொளி (7-3)
    2. ஏறாளும் இறையோனும் (4-8)
    3. கண்கள் சிவந்து (8-8)
    4. கருமாணிக்கம் (8-9)

    என்னும் நான்கு திருப்பதிகங்கள்.

    (இ) தக்கநெறி (உபாயம்) பற்றிக் கூறுவன
    1. நோற்ற நோன்பும் (5-7)
    2. ஆரா அமுதே (5-8)
    3. மானேய்நோக்கு (5-9)
    4. பிறந்தவாறும் (5-10)

    என்னும் நான்கு திருப்பதிகங்கள்.

    (ஈ) தடைகள் (விரோதி) பற்றிக் கூறுவன
    1. வீடுமின் முற்றவும் (1-2)
    2. சொன்னால் விரோதம் இது (3-9)
    3. ஒரு நாயகமாய் (4-1)
    4. கொண்ட பெண்டிர் (9-1)

    என்னும் நான்கு திருப்பதிகங்கள்.

    (உ) ஆன்மா அடையும் பலன்பற்றிக் கூறுவன
    1. எம்மாவீடு (2-9)
    2. ஒழிவில் காலமெல்லாம் (3-8)
    3. நெடுமாற்கு அடிமை (8-10)
    4. வேய்மரு (10-3)
    என்னும் நான்கு திருப்பதிகங்கள். திருவாய்மொழியில் உள்ளது
    போலத் திருப்பாவையிலும் அர்த்த பஞ்சகம் இருப்பதாக
    முன்னோர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    இதுவரை நாம் பார்த்த அர்த்த பஞ்சகத்தை அஞ்சர்த்தம்
    என்று முமுட்சுப்படி (சூத்திரம் -23) என்னும் நூல் குறிப்பிடும்.
    வைணவ தத்துவ நூல்கள் அர்த்த பஞ்சக ஞானம் என்று
    பேசுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:34:30(இந்திய நேரம்)