தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

12

துயிர்த்தல், உரப்பல், நகைத்தல், இதழதுக்கல், கனலல், தலை துளக்கல்--குறிப்பு (அநுபாவம்). கோபத்தாலுண்டான நடுக்கம், வெயர்வை முதலியன--விறல் (சாத்துவிகபாவம்). முனிவு, மனத்தடுமாற்றம், நடுக்கம் முதலியன--துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). தன் பெருமையைக் கொன்றுரைத்தலால் வந்த வெகுளி--சுவை (இரசம்) ஆகும்.

வீரம்

ஆளை யாவுனக் கமைந்தன மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை யின்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினான் நாகிளங் கமுகின்
வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

இதன்கண், இராமன் போரிலே சேனையிழந்து தனித்து நின்ற இராவணனைக் கொல்லாது நாளைவாவென நல்க எண்ணியது -- ஸ்தாயிபாவம். இராவணன் -- பொருள் (ஆலம்பந விபாவம்). அவன் தனிமை--உத்தீபநவிபாவம். நாளைவாவென்றல் -- குறிப்பு (அநுபாவம்). இரக்கம் -- விறல் (சாத்துவிகபாவம்). தன்வலி மிகுதியும், தனித்தவனைக் கொல்லுதல் முறையன்று என்னு நீதியை ஆராய்ந்த ஆராய்ச்சியும்--துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). உயிர்க் கொடைபற்றி வந்த வீரம்--சுவை (இரசம்) ஆகும்.

உவகை

நல்லியன் மகர வீணைத் தேனுக நகையுந் தோடும்
வில்லிட வாளும் வீச வேல்கிடந் தனைய நாட்டத்
தெல்லியன் மதிய மன்ன முகத்திய ரெழிலி தோன்றச்
சொல்லிய பருவ நோக்குந் தோகையி னாடி னாரே.

இதன்கண், இராமன் வில்வளைத்தமை பற்றி மகளிருக்குண்டான உவகைத்தோற்றம் ஸ்தாயிபாவம். இராமன் வில் வளைத்தமை--பொருள் (ஆலம்பந விபாவம்). அதனால் சீதை கல்யாணம் நிறைவேறுமென்ற கருத்து--உத்தீபநவிபாவம். பாடலும் ஆடலும்--குறிப்பு (அநுபாவம்). உவகையாலுண்டான புளகம் களிப்பு முதலியன--விறல் (சாத்துவிகபாவம்). உள்ளமகிழ்ச்சி--துணைமெய்ப்பாடு (சஞ்சாரிபாவம்). உவகை--சுவை (இரசம்) ஆகும். இச்செய்யுளிலும் முற்செய்யுள்களிலும் வந்த குறிப்புக்கள் வடமொழி நூல்களின் விதிப்படி எழுதப்பட்டன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 16:52:10(இந்திய நேரம்)