முனைவர் இராமர் இளங்கோ
இயக்குநர்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை - 600 113.
தமிழ் மொழியில் நமக்குக் கிடைத்துள்ள மூத்த இலக்கண
நூலான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் பற்றி
விளக்கம் தருகிறது. பொருளை அகம், புறம் என்ற இரு
கூறாகப் பிரித்துக் கூறுகிறது.
உரைநடை தோன்றாத அன்றைய காலக் கட்டத்தில் கவிஞருடைய
கருத்துகளுக்கு வடிவு அமைத்துத் தந்தது செய்யுளியல்
ஆகும். எனவே செய்யுள் இயலைப் பொருள் அதிகாரத்தில்
அமைத்தார். அதே போன்று கவிஞர் எடுத்துக் கூறும்
கருத்துக்களைக் கற்பவர் உணர்ந்து கொள்வதற்கு ஏதுவாக
அமைவன உவமைகள் ஆகும். எனவே உவமையியலையும்
பொருள் அதிகாரத்தில் சேர்த்தார்.
பின்னர்த் தோன்றிய இலக்கண நூலார் செய்யுள் இயலைத்
தனி இயலாக வளர்த்தெடுத்தனர். அதன் விளைவாக
யாப்பதிகாரம் உருவாயிற்று.
‘செய்யப்படுவது செய்யுள்’ என்ற பொருளில் அமைந்த
செய்யுளியல் பிற்காலத்தில் யாப்பு என்னும் பெயரால்
வழங்கலாயிற்று. செய்யுள் என்பதை ‘ஒரு பொருள் மேல்
பல சொல் கொணர்ந்து ஈட்டல் செய்யுளாம்’ என்று
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை எழுதிய
சேனாவரையர் (சூத். 397) குறிப்பிட்டுள்ளார். மேலும்
‘அறிவிற் சிறந்தவர்கள் பல சொற்களை வைத்து அழகு அமைய
ஒரு பொருளைப் பற்றிப் பாடுவது பாட்டு...
பொருட்களனாக உணர்வினின் வல்லார் அணிபெறச் செய்வன
செய்யுள்’ என்ற நன்னூல் அடியை நினைவிற் கொள்க.
‘பாட்டு, பாடல், செய்யுள் அனைத்திற்கும் பொருள்
ஒன்றே’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
செய்யுள் என்பதனைப்பாட்டு, பாடல் என்ற இரண்டும்
குறித்தன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.