தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


திவான் பகதூர்சரவண பவானந்தம்

பிள்ளையவர்கள்

வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்

 

 
‘‘தோன்றிற் புகழொடு தோன்றுக; அஃதிலார்
 தோன்றலின் தோன்றாமை நன்று.’’

- திருக்குறள்.

என்னும் வள்ளுவர்தம் வாய்மொழியின் முற்பகுதிக்கு ஓர் எடுத்துக் காட்டாக இவ்வுலகில் தோன்றித் தம் புகழ் நிறுவிச் சென்ற பெருமக்களுள் திவான் பகதூர் சரவண பவானந்தம் பிள்ளையவர்களும் ஒருவர். இவர் முத்துசாமி பிள்ளை என்னும் வேளாண் குடிச்செல்வரும் சந்திரமதி என்னும் அவர்தம் மனைவியாரும் செய்த நற்றவப் பயனாய்த் தோன்றினர். ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்.’ என்னும் முதுமொழிக்கு ஏற்ப, இளமைப் பருவத்திலேயே இவரிடம் சீரிய குணங்கள் தோன்றித் தழைத்தன. இவர் இளமையில் கல்வி கேள்விகளில் தேர்ச்சியடைந்து, ஒழுக்கத்திற் சிறந்து, ‘இம் மைந்தரைப் பெற இவர்தம் பெற்றோர் எத்தவம் இழைத்தனரோ!’ என்று கண்டோர் கூற விளங் கினர். இவர் வழக்கறிஞராக விரும்பி இங்கிலாந்து செல்ல முயன்றபோது, வைதிக மதப் பற்றுள்ளவராகிய இவர்தம் அன்னையார் மறுக்க, ‘தாய் சொல் துறந்தால் வாசகம் இல்லை,’ எனும் கட்டுரைக்கு இணங்கி, அக்கருத்தினை ஒழித்தனர்.

அந்நாளில் நகரக் காவற்படையின் திறத்தையும் உரத்தையும் வளர்க்கக் கருதின கர்னல் டி. வெல்டன், ஸி.ஐ.இ. என்னும் புகழ்பெற்ற நகரக் காவற் படை அதிகாரத் தலைவர், 1கல்வியில் தேர்ந்த இளைஞரை நகரக் காவற் படையிற் சேர்க்க விரும்பிப் போட்டிப் பரீட்சை ஒன்றை ஏற்படுத்தினார். அப்பரீட்சை எழுதியவர்களுள் முதல்வராய்த் தேறிய பிள்ளையவர்களைக் கர்னல் வெல்டன் துரைமகனார் தாம் புதிதாக ஏற்படுத்திய குற்ற வர்த்தமான விசாரணை வகுப்பில் 2 தமது நேர்முகக் காரியஸ்தராக 3 நியமித்தனர். இவர் தாம் மேற்கொண்ட தொழில்களைக் கர்னல் வெல்டனும் பிறரும் கண்டு வியக்கும்படி செய்து, இளம்புகழ் ஈட்டினர்.


1 Commissioner of Police. 2 The Criminal Intelligence Department. 3 Personal Officer.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-08-2017 15:06:02(இந்திய நேரம்)