தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thandi-Alangaram

பதிப்புரை

கண்பொலி நெற்றியினான் திகழ் கையிலோர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.
முன்னுரை:
இற்றைக்கு இருக்கும் அணியிலக்கண நூல்களில் பெரிதும் பயிலப்படுவது இத்தண்டியலங்காரமாகும். இதனினும் விரிவாகக் கூறப்படும் அணியிலக்கண நூல்கள் வேறுபல இருப்பினும் சுருக்கமாயும் அளவுபடவும் அமைந்திருப்பது இந்நூலேயாகும்.
உரை:
இந்நூலிற்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை எனக் கூறப்படும் பழையவுரை யொன்றுள்ளது. இவ்வுரை தானும் நூற்பாக்களுக்குப் பொருளும், எடுத்துக்காட்டுச் செய்யுட்களுக்கு முழுதும் இன்றி ஆங்காங்கு விளக்கமும் தர எழுந்ததாகும். ஒரோவழிப் பாடற்கும் அணிக்கும் உள்ள பொருத்தமும் ஆங்காங்குக் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வுரை கொண்டே அனைத்தையும் விளங்கிக்கொள்ள இயலாதிருக்கின்றது. எனினும் இப்பொழுதுள்ள உரைகளில் முதலாவதாக வைத்து எண்ணற்குரியது இவ்வுரையேயாகும்.
பதிப்புக்கள்:
இப்பழைய வுரையுடன் இந்நூலை 1857ல் முதன்முதல் பதிப்பித்துதவியவர் தில்லையம்பூர்த் திரு. சந்திரசேகர கவிராஜ பண்டிதர் அவர்கள் ஆவர்.
இதன்பின்னர் இப்பழைய வுரையைத் திரு. வை. மு. சடகோப இராமாநுஜாசாரியார் அவர்கள் தாம் எழுதிய குறிப்புரையுடன் 1901 -ல் பதிப்பித்தார்கள்.
இதனையடுத்து யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அ. குமாரசாமிப்பிள்ளையவர்கள் இயற்றிய புத்துரையுடன் சுன்னாகம் கு.அம்பலவாண பிள்ளையவர்கள் 1903 -ல் பதிப்பித்தார்கள்.
இதன் பின்னர் 1920-ல் மதுரை மாவட்டம் செம்பூர் வித்துவான் திரு. வீ. ஆறுமுகம் சேர்வை அவர்கள் இந்நூலைப் பழைய வுரையுடன் பதிப்பித்தார்கள்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 00:13:36(இந்திய நேரம்)