தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU

xvi

நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும்
 

இந்நூல் விருத்தியுரையில், ‘‘இயற்றமிழை அரும்பொருளைந்தெனக் கூறினமையின், இந்நூலுட்கூறிய பொருள் யாப்பு அணிகளென்னும் மூன்றதிகாரங்களும் அக்காலத்துள்ளனபோலும்’ (சிறப்பு. உரை) என எழுதப்பெற்றிருத்தலும், ‘தமிழநன் னூற்றுறைகளஞ்சுக் கிலக்கியம்’’ (பெரிய திருமொழித் தனியன்) என்றதும், அதனுரையாசிரியரான ஸ்ரீபிள்ளைலோகாரியசீயர், ‘தமிழுக்கு எழுத்து முதலான அஞ்சுலக்ஷணத்தையும் அறுதியிடுவதான நன்னூலென்று ஒரு சாஸ்திரம் உண்டு’ என்று அதற்கு ஒருவகையாகப் பொருள் செய்திருத்தலும் வலியுறுத்துகின்றன.

பவணந்தி முனிவர் எழுத்து முதலிய ஐந்திலக்கணங்களையும் தொல்காப்பியத்திற்போல எழுத்துச் சொற்பொருளென்னும் மூன் றதிகாரத்தினுளடக்கினரென்றும் அவற்றின்முதலில் படைப்பு முதலிய முத்தொழிற்குமுரிய நான்முகன் முதலிய மூன்று கடவுளராயுள்ளான் அருகதேவனேயென்னும் தமது சமயக்கொள்கைக்கு இயைய *நான்முகன் முதலிய மூவர்க்கும் முறையே பொருந்துமாறு சமற்காரமாக அருகக்கடவுள் வணக்கங் கூறினரென்றும், பின்னது இறந்துபோகவே முன்னவை இரண்டுமட்டும் வழங்கலாயின வென்றும் சைனரிற் சிலர் கூறுகின்றனர்.

இவ்விருவகைக் கொள்கைகளிலும் அதிகாரத் தொகையில் வேறுபாடுண்டேயன்றி இந்நூல் ஐந்திலக்கணத்தையுமுணர்த்துவ தென்பதில் வேறுபாடில்லை. வழங்கப்பெற்ற பகுதிகளைக்கண்டு இந்நூல் இரண்டதிகாரங் களையேயுடையதென்று பிற்காலத்து ஆசிரியர் வழங்குவாராயினர்; இக்காரணம் பற்றியே இது சிற்றதிகாரமென்றும் கூறப்படுவதாயிற்று.

விருத்தியுரை முதலியவற்றிற் பாயிரமுள்பட சூத்திரங்கள் 462-ஆகக் காணப்படினும் ‘‘முன்னோர் மொழிபொருளே’’ என்னும் வெண்பா மயிலைநாதரால் மேற்கோளாகக் காட்டப்பட்டிருத்தலின், இவ்வுரையின்படி கொள்ளவேண்டுவன 461; அவற்றுள் நூற்பா அகவல் 458; வெண்பா 3.


* அருகதேவனை அம்மூன்று பெயர்களால் அவர்கள் வழங்குதலை, ‘‘முனிமைமுகடாய’’ (சீவக. 1609) என்பது முதலிய மூன்று செய்யுட்களாலும், அவற்றின் இறுதியில் உள்ள ‘அயனும் அரியும் அரனும் இவனே யென்பது கருத்து’ என்னும் விசேடவுரையாலும், ‘‘திருமாலே திசைமுகனே சிவனே’’ (திருப்பருத்திக்குன்றப்பத்து, 9) என்பதனாலுமறிக.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-05-2018 17:38:31(இந்திய நேரம்)