Primary tabs
xiv
கொள்வோன் தன்மை கோடல் மரபு’ என்ற நான்கனையும் முன்னூல் உரைகளையும் நன்னூல் நூற்பாக்களையும் கொண்டு ஏற்ற பெற்றி விளக்கி, பொதுப் பாயிரத்து இறுதியில் ஆத்திரையன் பேராசிரியன் வரைந்த ‘வலம்புரி முத்தின்’ என்ற பொதுப்பாயிர நூற்பாவினையும் வரைந்துள்ளார்.
சிறப்புப்பாயிரத்தின் இலக்கணத்தை விளக்கி, இந்நூற்கு அமைந்த சிறப்புப்பாயிரத்தை வரைந்து, அதன் உரையையும் எழுதிப் பாயிர இலக்கணம் முழுவதையும் நூன்முகமாக அமைத்துள்ளார்.
பெரும்பாலும் பின்னர் எழுந்த சுருக்க நூலாகிய நன்னூலையொட்டி, அது முன்னூலொடு முரணுமிடத்து அதனை அகற்றி, முன்னூற் பொருளை உட்கொண்டு நூற்பாவும் தக்க உரையும் வரைந்து செல்லும் இவ்வாசிரியர், தம் சமய நிலைக்கு ஏற்ப, மலைமகளை மணந்து உலகு அளிக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செலுத்தி எழுத்திலக்கணம் வரையப்புக்க தம் கருத்தினைத் தற் சிறப்புப்பாயிரத்தில் சுட்டுகிறார்.