Primary tabs
xxxii
சுட்டுகிறார். அந்நூற்பாவிலேயே நகரஈற்றுப்புணர்ச்சி வேறுபாட்டையும் நவில்கிறார்.
தொல்காப்பியனார் போல ஈறுதோறும் மிக்குப் புணரும் புணர்ச்சியைச் கூறாது, நன்னூலார் போலப் பொதுவாக ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்- வல்லெழுத்து மிகும்’ என்று கூறினாராயினும், தொல்காப்பியனார் ஈறுதோறும் விதந்து குறிப்பிட்ட செய்திகளையெல்லாம் எஞ்சாமல் சுட்டியதோடு, பெயர்வினைப் புணர்ச்சி மாத்திரமன்றி இடைஉரிசொற்களின் புணர்ச்சி யினையும் விதி கூறி விரிவாக விளக்குகிறார்.
மரப்பெயர் பற்றித் தொல்காப்பியனார் பலவாகக் கூறும் புணர்ச்சிக் செய்திகளைச் சுருக்கி நான்கு வகைப்புணர்ச்சி வேறுபாட்டின்கண் அடக்கி நூற்பா யாக்கும் இவர், தொல்காப்பியனார் குறிப்பிட்ட பல செய்திகளையும் மறவாது தெரிவிப்பதொடு, பின்னுள்ள இலக்கியங்களை உட்கொண்டு நச்சினார்க்கினியர் வரைந்த பலவற்றையும் எஞ்சாது குறிப்பிட்டுள்ளார்.
பனை என்ற சொல்பற்றிய நூற்பா உரையுள் ஐகார ஈற்று மரப் பெயராகிய ஆவிரை முதலியன பற்றிய புணர்ச்சி விதிகளும் இடம் பெறுகின்றன.
இதுகாறும் பொதுவும் தொகுப்புமாகிய புணர்ச்சி கூறிய ஆசிரியர், இனிப் புணர்ச்சியினை உயிர் ஈறுகள் தோறும் விரித்துக் கூறத் தொடங்கிச் சாவ என்னும் வினையெச்சத்தின் புணர்ச்சியனை விளக்குகிறார். அடுத்துஅகர ஈற்றின் இயல்பு புணர்ச்சியினையும், வாழிய என்ற முற்றின் நிலைமொழியீறு வருமொழி வந்துழிப்படும் நிலையினையும் விளக்குகிறார். பலசில என்பனவற்றின் புணர்ச்சியினை நன்னூலை ஒட்டி நவின்று, தொல்காப்பியக் கருத்துக்களையும் உடன் குறிப்பிடுகிறார். அகர ஈற்று அல்வழிப் புணர்ச்சியில் ஆ, மா, மியா, முற்று, யா என் வினாப் பெயர் இவை இயல்பாதலை அடுத்து விளக்குகிறார்.