Primary tabs
மெய்யீற்றுப் புணரியல்
இவ்வியல்பற்றிய பலசெய்திகளைத் தொல்காப்பியர் தம் மரபினை யொட்டிப் புணர்ச்சியின் எடுத்துக்கோடற்கண் கூறியுள்ளார். ஆதலின் இவ்வியலில் சிலசெய்திகளையே குறிப்பிடும் நிலையில் உள்ள இவ்வாசிரியர், தொடக்கத்தில் ணகர ஈறுபற்றிப் புணர்ச்சிவிதி கூறத் தொடங்கி, ஒப்பின் முடித்தலான் னகரஈற்றினையும் நன்னூலார்போல உடன்கொண்டு, ணகர னகர ஈற்றுப் பொதுப்புணர்ச்சி கூறுகிறார். பின், ணகர ஈற்றுள்வரும் திரிபுகளையும், இயல்பும் திரிபும்பற்றிய சொற்றொகுப் பின் புணர்ச்சிகளையும், நன்னூலை ஒட்டி நூற்பா வாயிலாகக் கூறி, அவற்றின் உரைகளில் அவ்வப்பொருண்மைகள் பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களில் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள செய்திகள் எல்லாவற்றையும் பெரும்பான்மையும் குறிப்பிடுகிறார்.
பின், னகர ஈற்றுக் கிளைப்பெயர் பற்றிய புணர்ச்சி, மீன் என்ற சொற்புணர்ச்சி, தேன் என்ற சொற் புணர்ச்சி, எகின், குயின், மின், பன், கன். அழன் என்ற சொற்களின் புணர்ச்சி யாவும் பெரும்பான்மை நன்னூலை யொட்டியும் சிறுபான்மை தொல்காப்பியத்தை ஒட்டியும் நூற்பா வாயிலாக விளக்கும் இவர், தம் உரையுள் நச்சினார்க்கினியர் உரைத்த பலவற்றோடு, இடையிடையே தம் கருத்தினை ஒட்டிச் சிலவற்றையும் விளக்கியுள்ளார்.
மகரஈற்று நூற்பாவினை நன்னூலையொட்டி யமைத்து, உரையுள் தொல்காப்பியத்தை ஒட்டி நச்சினார்க்கினியர் உரைத்த பலவற்றையும் நவில்கிறார். பின், மகரஈற்று உறழ்வும், இயல்பும், அகம் என்ற சொல்