Primary tabs
பாப்பொருத்தம் பாவினம் என்பவற்றை விளம்புவது. இதனுள் பாவினம் சாதகம் முதல் கையறுநிலை இறுதியாக அறுபத்தாறாகக் கூறப்பட்டன. பாவினம் 96 என்பாரும் அதனினும் மிகுத்துக் கூறுவாரும் உண்டு.
இந்நூல் முன்னைச் செந்தமிழ்ப்பத்திராசிரியராயிருந்தவரும் ஸேதுஸம்ஸ்தான மஹாவித்வானும் ஆன பாஷாகவிசேகரர் திரு.ரா. இராகவையங்காரவர்களால் நன்காராய்ந்து 1904-ஆம் ஆண்டு முதன்முறை செந்தமிழ்ப் பிரசுரமாக வெளியிடப்பட்டது. அம்முதற்பதிப்புப் பிரதிகள் முழுதும் செலவாய்விட்டமையால் அப்பதிப்பிலுள்ளபடி இப்பொழுது இரண்டாமுறை பதிக்கப்பட்டுள்ளது. இப்பதிப்பில் இச்சங்கத்துள்ள ஏட்டுச்சுவடிகளில் யான் கண்ட பிரதி பேதம் முதலியனவும் கீழ்க்குறிப்பிற் காட்டப்பட்டுள்ளன.
இவ்விரண்டாம்பதிப்பு முடிந்தபின் இதனைக்கண்ணுற்ற முன்னாட் சென்னைப்பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவரும் என் அருமை நண்பருமான ராவ்ஸாஹிப் திரு. S. வையாபுரிப்பிள்ளையவர்கள் தம்மிடம் உள்ள பன்னிருபாட்டியற் பிரதிகளோடு இவ்விரண்டாம் பதிப்புப் பிரதியினையும் வைத்து ஒப்புநோக்கித் தாம் கண்ட பிரதிபேதம் முதலியவற்றை அன்புடன் குறித்தனுப்பினார்கள். அவை ஏற்றபெற்றி அடுத்தபதிப்பிற் சேர்த்துக்கொள்ளப்படும். தமக்குள்ள பலபணிகளுக்கிடையே இப்பதிப்பினை ஒப்புநோக்கிப் பிரதிபேதம் முதலியவற்றைக் குறித்தனுப்பிய பிள்ளையவர்களுதவி பாராட்டத்தக்கது.
இங்ஙனம்,
திரு. கி. இராமாநுஜையங்கார்,
பதிப்பாசிரியர்.