Primary tabs
பதிப்புரை
சுவாமிநாதம் என்ற ஐந்திலக்கணத்தின் மூலம் முழுமையும் பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் தாளில் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த மூலமே உரை எழுதி இங்குப் பதிப்பிக்கப்படுகின்றது.
நூலை உரை எழுதி வெளிவிடுவதற்கு வேண்டிய ஊக்கமும் ஆக்கமும் தந்த மொழியியல் துறை பேராசிரியரும் மொழியியல் உயர் ஆய்வுத்துறை நெறியாளருமான டாக்டர் ச. அகத்தியலிங்கம் அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி உரியது.
மூல பாடத்தைப் படித்து பிரதிசெய்தபோதும் உரை எழுதியபோதும் பல்லாற்றானும் உதவிசெய்த தமிழ்த்துறை துணைப்பேராசிரியர் க. வெள்ளைவாரணன் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
மொழியியல் ஆராய்ச்சி மாணவர்களான ஜி. சங்கர நாராயணன், எஸ். ஜெயபால், என். மதியழகன், ஏ. கோபால் ஆகிய நால்வரும் அச்சுப்பிரதி தயாரிப்பதில் உதவிசெய்தார்கள். அவர்களுக்கு என் நன்றி உரியதாகும்.
சூத்திரங்களைச் சீர் பிரிப்பதிலும் அச்சுத்தாள்களைத் திருத்துவதிலும் உதவிபுரிந்த தமிழ்த்துறை விரிவுரையாளர் புலவர். சோம. இளவரசு அவர்களுக்கும் என் நன்றி.
எங்கள் துறை வளர்ச்சியில் என்றும் ஆர்வம் காட்டி ஒல்லும் வாயெல்லாம் உதவி வருபவர் எங்கள் துணைவேந்தர் டாக்டர் S. சந்திரசேகர் அவர்கள். அவர்களுக்கு என் உளங்கனிந்த நன்றி என்றென்றும் உரியது.
இங்கிலாந்தில் ஓராண்டு இருந்து ஆராய்ச்சி செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்த பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர்களுக்கும், ரெடிங் பல்கலைக்கழகத்தில் வேண்டிய உதவி செய்த அப்பல்கலைக்கழகத்தினருக்கும், இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவினருக்கும் என் நன்றி.
நூலை நல்ல முறையில் அச்சிட்ட பாண்டிச்சேரி இளங்கோ அச்சகத்தாருக்கு என் நன்றி.
செ. வை. சண்முகம்.
(1975)