Primary tabs
உ
ஆராய்ச்சி முன்னுரை
(பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி, எம்,ஏ,. திருப்பனந்தாள்)
தமிழ் மொழி மிகத் தொன்மையது மட்டுமன்று. காலப்போக்கில் வளர்ந்துவரும் வளர்ச்சியும் உடையது. தமிழில் இலக்கியங்கள் பல்கியிருத்தல் போன்றே இலக்கண நூல்களும் பல்கியுள்ளன. இந்நிலையில் கிளைத்த இலக்கண நூல்கள் பல. அவற்றுட் சில காலப்போக்கில் மறைந்தொழிந்தன. மிகத் தொன்மையவாய நூல்களுள் காலப்போக்கால் அழிந்துபடாது வளர்ச்சிக்கேற்ற கருத்தினை நல்கிப் பொன்றாது நின்றிலங்குவது தொல்காப்பியமொன்றுமேயாகும். இஃது எழுத்துச் சொற்பொருள் ஆகிய முப்பிரிவுகளை உடையது. பொருளதிகாரத்தின் பகுதியாக யாப்பணிகள் அமைந்துள்ளன.
மூன்று ஐந்தாயினமை: நம் மொழியில் இயற்றமிழிலக்கணம் தொடக்கத்தே எழுத்துச் சொற் பொருளென்ற முப்பொருட் பாகுபாட்டளவினதாகவே யமைந்திருந்தது. இறையனார் அகப்பொருட் காலத்துப் பொருளினின்றும் யாப்புப் பிரிந்தது. பின்னர்ப் பொருளதிகாரத்தின் பிரிவாகிய அகப்புறப் பொருள்கள் பற்றிய தனித்த நூல்கள் எழலாயின. அதனையடுத்து யாப்புப் பற்றிய தனி நூல்கள் பலவும் அணியிலக்கணம் பற்றிய தனி நூல்கள் பலவும் தோன்றலாயின.
ஐந்திலக்கண நூல்கள்:
இங்ஙனம் விரிந்த இலக்கண வகை
ஐந்தனையும் ஒருங்கு
கூறும் நூல்களும் காலப்போக்கில் வளரலாயின. இவற்றுள்
முதலாயது வீரசோழியம் என்னும்
நூலாகும். இந்நூல் ஐந்திலக்கணமும்
கூற எழுந்ததெனினும் வடமொழி இலக்கண
அமைப்பையே பெரிதும் தழுவிக் குறியீடுகளைக் கூட அப்பெயரால்
அமைத்திருத்தலின்
பெரிதும் பயிலப் படாததாயிற்று. இதன் காலம் கி.
பி. 11ஆம் நூற்றாண்டாகும்.
இரண்டாவதாகக் குறிக்கத்தக்கது தமிழ்நெறி
விளக்கம் என்னும் நூலாகும். இந்நூலின் அகப்பொருள் பற்றிய 25 நூற்பாக்களே இஞ்ஞான்று
கிடைத்திருப்பினும் இஃது ஐவகை
இலக்கணமும் அமைந்த முழுநூலாக விளங்கியிருத்தல் வேண்டுமென
இதன் முன்னுரையால்
தெரிகின்றது. இதன் காலம்