தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுத்தியல்: எழுத்தியலில் எழுத்துக்களின் வகை, வடிவு, பெயர், பிறப்பு, மொழி முதலிடையிறுதியில் வரும் எழுத்துக்கள், மாத்திரை, போலி ஆகியவை பற்றி ஆராயப்பட்டுள்ளன. சார்பெழுத்து மூன்றென்பர் தொல்காப்பியர். நன்னூலார் பத்தென்பர். இவர் இரண்டென்பர்.
 
 
‘‘சார்பு உயிர்மெய் தனிநிலை இருபாலன’’
 
என்பது அந்நூற்பாவாகும். குற்றியலிகரமும் குற்றியலுகரமும் மெய்யொடு கூடியே வருதலின் அவ்விரண்டையும் உயிர்மெய்யென அடக்கிக் கூறினர் எனலாம். அளபெடையில் இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை, நெடிலளபெடை, குறிலளபெடை, ஒற்றளபெடை, எழுத்துப்பேரளபெடை என எண்வகையாகப் பாகுபாடு செய்து இருப்பது தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் காணப்படாத தொன்றாகும். இங்ஙனமே மெல்லெழுத்துக்கள் தலையினிடமாகப் பிறக்கும் என்றும், ஆய்தம் உந்தியினிடமாகப் பிறக்கும் என்றும், ஓசை வகையில் ‘‘எடுத்தல் படுத்தல் இரண்டே ஓசை’’ எனக் கூறுவதும் அந்நூல்களில் இல்லாப் புதுமைக் கருத்தாகும். மொழி முதலிலும் இடையிலும் வரும் எழுத்துக்களைக் கூறுங்கால் பெரிதும் நன்னூலாரையே தழுவியுள்ளார். இறுதிக்கண் வரும் எழுத்துக்களைக் கூறுங்கால் பெரிதும் தொல்காப்பியரையே தழுவியுள்ளார். இந் நிலையில் தொல்காப்பியர்
 
 
‘உஊகாரம் நவவொடு நவிலா’’
 
எனக் கூறியதை மாற்றி இவர்
 
 
‘‘உஊ நகரமோடு உறாவென மொழிப’’
 
எனக் கூறியிருப்பது உளங்கொள்ளுதற் குரியதாகும். மாத்திரையில் கால், அரை, முக்காலுக்கும் வரையறை கூறியிருப்பது புதிய நெறியாகும்.
 
 
“உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே’’
 
என்பது அந்நூற்பாவாகும். அன்றியும் இவ்வியலில் ஆசிரியர் செய்திருக்கும் வேறொரு புதுமை சிற்சில பெயர்களுக்கு மறுபெயர் கூறியிருப்பதாகும்.
 
 

‘‘இரேகை வரிபொறி யெழுத்தின் பெயரே’’ (3)

‘‘அச்சாவி சுரம்பூத மாமுயி ரென்ப’’ (7)

‘‘குறுமை யிரச்சுவங் குறிலெனப் படுமே’’ (9)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 04:23:57(இந்திய நேரம்)