தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aruvaigai Illakkanam


அறுவகை இலக்கணம்

அணிந்துரை
2
‘தொல்காப் பியன்ஆம் தூய்மை யாளனும்
அறைந்த இலக்கணம் ஐவகை தம்முள்
மறைந்தன குறைந்தன மாநிலத்து இந்நாட்கு
இன்றி யமையாது இருக்க வேண்டுந’

என்றும் பலவாறு ஆசிரியரைப் பற்றியும், நூலைப் பற்றியும் விதந்தோதப்படுவது சிறந்த அறிமுகங்களாகும்.

தமிழ்மொழியின் மிக நெடும் பண்டைய வரலாற்றில் இடம்பெறும் அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களைத் தொடர்ந்து காக்கைபாடினியம், யாப்பருங்கலம், காரிகை, பாட்டியல் நூல்கள், அகப்பொருள், அணி நூல்கள் எனப் பல இலக்கண நூல்கள் தோன்றின. அவையனைத்தும் தமிழ் மொழியின் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களின் அமைதிபற்றியே சிந்தித்தன. சுவாமிகளோ இவற்றுடன் புலமையிலக்கணம் என்னும் இலக்கணத்தையும் உடன் இணைத்துத் தமிழிலக்கணம் என்பது அறுவகைப்பட்டது எனத் துணிந்து கூறுகிறார். அவரது துணிவு தமிழிலக்கண இயல்களை மேலும் விரிவுபடுத்தத் தூண்டுகோலாய் அமையும் என்றால் அது மிகையாகாது.

ஆறாவது இலக்கணமாக விளங்கும் ‘புலமை இலக்கணம்’ ஒரு வரலாறு போல் காணப்படும் சிறப்புடையதாம். சுவாமிகளின் புலவர் புராணம் தோன்றியிராவிடின் தமிழ்ப் புலவர் பலரின் வரலாறுகளும் மறைந்தொழிந்த தமிழ்நூல்கள் போலவே மறைந்திருக்கும். புலவர் புராணத்தின் பிழிவை இலக்கணமாக்கி இவ்வியலில் அவர் புகுத்தியிருப்பது தமிழ்மொழிக்கு ஒரு புதுவரவாகும். இவ்வரவு பிறமொழிகளுக்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாய் - எடுத்துக்காட்டாய்த் திகழும் சிறப்புடையதாம்.

ஏற்கெனவே பல நூல்களில் விதந்தோதப்பட்ட ஐவகை இலக்கணங்களும் சுவாமிகளின் கைபட்டுப் பல்வேறு வகையில் தெளிவுபெற்றிருப்பதை இந்நூலுள் காணலாம். எழுத்துகளின் வரிவடிவை இன்றைய அறிவியற்பயிற்சிக்கு ஏற்பச் சொற்சித்திரமாக்கி வடித்துத்தந்துள்ளமை சிறந்த தெளிவுக்கு அடையாளமாகும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-11-2017 16:38:29(இந்திய நேரம்)