Primary tabs
பழந் தமிழ் நூல்களைப் பொதுவாக, 'பத்துப் பாட்டு',
'எட்டுத் தொகை', 'பதினெண் கீழக்கணக்கு'
என்று பாகுபடுத்தி
உரைப்பது உரையாசிரியர்கள் காலந்தொட்டுப்
பயின்றுவரும்
ஒரு மரபாகும். ' தமிழ் விடு தூதின்' ஆசிரியர்.
மூத்தோர்கள்
பாடியருள் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்,
கேடு இல் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்
என்று குறிப்பிடுதலும் இம் மரபைப் புலப்படுத்தும். இம்
முறை
வைப்பில் 'பத்துப் பாட்டு' சங்க காலத் தொகை
நூல்களுள்
முதன்மையாக வைத்து எண்ணப்படுகிறது. இது பத்துப் பெரிய
அகவற் பாடல்களைக் கொண்ட தொகுதி. நீண்ட அகவற்
பாடலுக்கு உதாரணமாக இளம்பூரணர் பத்துப் பாட்டுப்
பாடல்களையும் குறித்துள்ளார். 'பெரிய பாட்டு பத்துப்
"
பாட்டினுள்ளும், சிலப்பதிகாரத்துள்ளும்,
மணிமேகலையுள்ளும்
கண்டு கொள்க' (தொல். செய்யு. 150) என்பது அவரது வாக்கு.
பத்துப் பாட்டின் ஏட்டுப் பிரதிகளில்
குறிக்கப்பெற்றுள்ள
பாடல் ஒன்று இத் தொகுதியில் அடங்கிய பாடல்களை
முறைப்படுத்திக் கூறுகின்றது. அப்பாட்டு வருமாறு:
முருகு, பொருநாறு, பாண் இரண்டு, முல்லை,
பெருகு வள மதுரைக் காஞ்சி, - மருவினிய
கோல நெடுநல்வாடை, கோல் குறிஞ்சி, பட்டினப்
பாலை, கடாத்தொடும், பத்து.
இப் பாடலில் குறித்த வரிசையிலேயே பல பிரதிகளிலும்
பாடல்கள் அமைந்திருந்தன. அன்றியும், முதலாவது,
இரண்டாவது,
என எண்ணுப் பெயராலும் இவை குறிக்கப்பெற்றுள்ளன.
எனினும், 'பத்துப் பாட்டு' எனக் குறிக்கும்
வழக்கம் மிக
முற்பட்டது என்று கொள்ளுவதற்கு இல்லை. இப் பெயரை
இளம் பூரணரும், மயிலைநாதருமே (நன். 387), தத்தம்
உரைகளில் குறித்துள்ளனர். பேராசிரியரோ தமது
தொல்காப்பிய
உரையில் 'பாட்டு' என்றே (செய்யு, 50,80 உரை)
வழங்கியுள்ளனர்.
இளம்பூரணரும் பிற உரையாசிரியர்களும் பத்துப்
பாட்டுப்
பாடல்களை மேற்கோள்களாக எடுத்துக் காட்டும்பொழுது,
அவ்வவற்றின் தனிப் பெயராலேயே குறித்துள்ளார்கள்.
எட்டுத் தொகை நூற்களிற்போல இத் தொகுதியைத்
தொகுத்தார்,
தொகுப்பித்தார் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கப்
பெறவில்லை. கடைச் சங்க வரலாறு கூறுமிடத்து, எட்டுத்
தொகை நூல்களை முறையாக எடுத்து விளக்கும்
இறையனாரகப் பொருள் உரையில் (சூ. 1) பத்துப்
பாட்டைப் பற்றிய செய்தி எதுவும் காணப் பெறவில்லை.
பிற்காலத்தில் எழுந்த பன்னிரு பாட்டியலில்
'பத்துப் பாட்டு' என்னும் நூலின் இயல்பு குறித்து
இரண்டு சூத்திரங்கள் உள்ளன.
நூறு அடிச் சிறுமை, நூறறுப் பத்து அளவே.
ஏறிய அடியின் ஈர் ஐம் பாட்டுத்
தொகுப்பது பத்துப் பாட்டு எனப்படுமே. (384)
அதுவே, அகவலின் வரும் என அறைகுவர் புலவர். (385)
இந்தச் சூத்திரங்கள் 'பத்துப் பாட்டு' என்னும்
வழக்குப்
பெருகிய காலத்தில் இயற்றப் பெற்றவை.
'பத்துப் பாட்டு' இலக்கியத்தை நோக்கி
வகுக்கப்பெற்றதே
இந்த இலக்கணம். வேறு வகையான பத்துப்
பாட்டுகள் தமிழுலகில் இல்லை.
பத்துப் பாட்டு நூல் பத்துப் பாடல்களைக்
கொண்ட ஒரு கோவையாயினும், 'குறுந்தொகை',
'புற நானூறு' போன்ற நூற் கோவை யன்று.
இவை ஒன்றற்கு ஒன்று தொடர்பு இன்றி, வெவ்வேறு
சூழ்நிலையில், வெவ்வேறு காலத்தில், எழுந்த பாட்டுகள்.
இவற்றுள் செம்பாதி ஆற்றுப்படைகள்.
அவையாவன
திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண்
ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம்.
திருமுருகு ஆற்றுப்படைக்குப் 'புலவர் ஆற்றுப்படை'
என்ற
ஒரு பெயரும் உண்டு. மலைபடுகடாம் 'கூத்தர்
ஆற்றுப்படை'
எனவும் வழங்கும். 'முல்லைப் பாட்டு', 'குறிஞ்சிப்
பாட்டு',
'பட்டினப் பாலை', என்னும் மூன்றும் அகத்திணை
யொழுக்கம் பற்றியன. குறிஞ்சிப் பாட்டைப்
'பெருங்குறிஞ்சி'
என்ற பெயராலும் உரையாசிரியர்கள் வழங்கியுள்ளனர்.
நெடுநல் வாடை அகப் பொருட்செய்தி பொதிந்ததாயினும்,
பாண்டியனது அடையாளப் பூவைக் கூறினமையால்,
இதனைப் புறத்திைணைப்பாற் படுத்துவர். வாகைத்
திணையுள் கூறிய கூதிர்ப் பாசறை என்னும் துறையுள்
இதனை நச்சினார்க்கினியர் அடக்குவர். மதுரைக் காஞ்சி
வீடு பேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமைகளைச்
சான்றோர் எடுத்துக் கூறும் பகுதியாகிய 'காஞ்சித்
திணை'
என்னும் புறப்பொருட் பகுதியைச் சார்ந்தது.
பத்துப் பாட்டுள் மிகச் சிறியது முல்லைப்
பாட்டு;
இதில் 103 அடிகள் உள்ளன. மிகப் பெரிய பாடல்
மதுரைக் காஞ்சி; இதில் உள்ள அடிகள் 782.
ஒவ்வொரு பாடலையும் இயற்றிய புலவர் பெயரும்,
அவரால் பாடப் பெற்ற பாட்டுடைத் தலைவர் பெயரும்,
அவ்வப் பாடல்களின் இறுதியில் கொடுக்கப்பெற்றுள்ள
பழைய வாக்கியங்களால் புலனாகின்றன. பட்டினப் பாலை,
மலைபடுகடாம் நூல்களைப் பாடினோர், அவற்றின்
பாட்டுடைத் தலைவர்கள் பற்றிய செய்திகள் பிற்கால
இலக்கியங்களிலிருந்தும் சிலாசாஸனங்களிலிருந்தும்
தெரியவருகின்றன.
பத்துப் பாட்டு முழுமைக்கும்
நச்சினார்க்கினியர்
சிறந்த முறையில் உரை வகுத்துள்ளார்.
சான்றோர் உரைத்த தண் தமிழ்த் தெரியல்
ஒருபது பாட்டும் உணர்வார்க்கு எல்லாம்
உரையற முழுதும் புரைபட உரைத்தும்
என்பது நச்சினார்க்கினியர் உரையைப் பற்றிய
சிறப்புப் பாயிரப் பகுதி.
பத்துப் பாட்டுப் பாடற் பிரதிகளின்
ஈற்றில் சில
தனி வெண்பாக்கள் உள்ளன. அவைகள் 'தனிப்
பாடல்கள்'
என்னும் தலைப்புடன் அந்தந்தப் பாடல்களின் ஈற்றில்
அமைக்கப் பெற்றுள்ளன. செய்யுட்களின் பொருட்போக்கை
விளக்கும் வகையில் பாடல்களின் இடையிடையே தலைப்புகள்
கொடுத்து அமைக்கப் பெற்றுள்ளன. அவ்வப் பாடல்களில்
வரும் சிறப்புப் பெயர் முதலியவை தொகுக்கப்பெற்று,
அகராதி வரிசையில் தரப்பட்டுளன. இங்ஙனமே,
'நற்றிணை',
'குறுந்தொகை', முதலிய தொகை நூல்களிலும்
'சிறப்புப்
பெயர் முதலியவை' இடம் பெற்றுள்ளன. தவிரவும், தொகை
நூல்கள் ஒவ்வொன்றிலும் பாடினோர்
பாடப்பட்டோர்களின்
பெயர்கள் பாடல் எண்களுடன் அகராதி வரிசையில்
அமைக்கப்
பெற்றுள்ளன. 'பத்துப் பாட்டு', 'எட்டுத்
தொகைகளில்' வரும்
அருஞ் சொற்களுக்கு உரிய உரை விளக்கமும், புலவர்
அகராதியும், இவற்றில் பயின்று வந்துள்ள 'பழைய
கதைகள்',
பிற வரலாறுகள், பழமொழிகள், அறிவுரைகள் முதலிய
குறிப்புக்களும் 'பாட்டும் தொகையும்' என்னும்
தனித்
தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இத் தொகுதி சங்க
நூற்கள் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாய் அமையும்.
பாட்டு தொகைகளின் பதிப்புப் பெரு
முயற்சியில்
ஈடுபட்டு உழைத்த தமிழ்ப் பெரியார்களும் அன்பர்களும்
பலராவர். அவர்களுள் முதன்மையாக நன்றியோடு
குறிப்பிடத்தக்கவர் பத்துப் பாட்டையும், எட்டுத்
தொகை
நூல்களில் ஐந்தையும் செம்மையுற நன்கு பரிசோதித்து,
தமிழுலகிற்கு வழங்கிய மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே, சாமிநாதையர் அவர்கள். ஐயர்
அவர்களின் பதிப்புகளை இப் பதிப்பிற்குப் பயன்
படுத்திக்கொள்ள மனம் உவந்து இசைந்த ஐயரவர்களின்
பெயரர் திரு. க. சுப்பிரமணியம் அவர்களுக்கு எமது
நன்றி உரியதாகும். மற்றும், அகநானூறு, கலித்தொகை
முதலிய ஏனைய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்த
ஸேது ஸம்ஸ்தான மகாவித்வான் பாஷா கவிசேகரர்
ரா. ராகவையங்கார், ஸ்ரீ வத்ஸ சக்கரவர்த்தி
ராஜகோபாலையங்கார்,
திரு. சி. வை. தாமோதரம் பிள்ளை, திரு. இ. வை.
அனந்தராமையர்
முதலியவர்களும் நன்றியுடன் பாராட்டத் தக்கவர்கள்.
முற்பதிப்புகள் அனைத்தையும் பற்பல ஏட்டுப்
பிரதிகளையும்
ஒப்பு நோக்கி, எத்தனையோ திருத்தங்கள் கண்டு, புலவர்
வரிசையில் சங்கப் பாடல்களை அச்சிட்டு, 'சங்க
இலக்கியம்'
என்ற பெயரில் உலவச் செய்த
பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களுடைய
உதவியும் மறக்கற்பாலதன்று. இந்தச் சங்க இலக்கிய
மூலபாடம்
முதலியவைகளைப் பயன் படுத்திக்கொள்ள
இசைவு தந்த சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் செயற்
குழுவினருக்கு எமது நன்றி உரித்தாகுக. இன்னும் பல்வேறு
வகைகளில் பாட்டு தொகைகளை வெளியிட்ட
ஏனையோர்களுக்கும் எமது நன்றி உரித்தாகும்.
பதிப்புக் குழுவில் திருவாளர்கள் பெ. நா.
அப்புஸ்வாமி,
பி.ஸ்ரீ., வி.மு. சுப்பிரமணியம், அ.ச. ஞானசம்பந்தன், மு.
சண்முகம்,
ஆகிய ஐவரும் இருந்து, பாட்டு தொகைகளைத் தக்க வண்ணம்
அழகுறப் பதிப்பித்துள்ளார்கள். இவர்களுக்கு எமது உளம்
கனிந்த நன்றி உரியதாகுக.
பண்டைத் தமிழின் அழகையும் பெருமையையும்
பாட்டு
தொகைகளில் கண்டு மகிழ்வோமாக. பழந் தமிழ்க்
கருவூலங்களாகிய
இவற்றைத் தமிழுலகம் விருப்புடன் ஏற்றுப் போற்றுவதாக.
சென்னை - 5.12.57.