தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தலைவன்

2. குறிஞ்சி
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ:
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தவழி, தலைமகளை இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடுபட்டு நின்ற தலைமகன், நாணின் நீக்குதற்பொருட்டு, மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவள்மாட்டு நிகழ்த்திக

14. குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
'நல்லோள் கணவன் இவன்' எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
'மடன்மா கூறும் இடனுமார் உண்டே' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். 'மடலேறுவல்' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர்

17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.
தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமாறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார்

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர்

29. குறிஞ்சி
நல் உரை இகந்து, புல் உரை தாஅய்,
பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி,
அரிது அவாவுற்றனை-நெஞ்சே!-நன்றும்
பெரிதால் அம்ம நின் பூசல், உயர் கோட்டு
மகவுடை மந்தி போல
அகன் உறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், 'இவர் எம்மை மறுத்தார்' என்று வரைந்து கொள்ள நினையாது, பின்னும் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது. - ஒளவையார்

32. குறிஞ்சி
காலையும், பகலும், கையறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும், என்று இப்
பொழுது இடை தெரியின், பொய்யே காமம்:
மா என மடலொடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே;
வாழ்தலும் பழியே-பிரிவு தலைவரினே.
பின்நின்றான் கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்

40. குறிஞ்சி
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இயற்கைப் புணரிச்சி புணர்ந்த பின்னர், 'பிரிவர்' எனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு, தலைமகன் கூறியது. - செம்புலப்பெயனீரார்

56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார்

58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!
கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார்

62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

63. பாலை
'ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார்

70. குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே.
புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார்

71. பாலை
மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது -கருவூர் ஓதஞானி

72. குறிஞ்சி
பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென் தோள், மா மலைப்
பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஓப்புவாள், பெரு மழைக் கண்ணே!
தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது - மள்ளனார்

95. குறிஞ்சி
மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். 'எம்மை நினைத்தும் அறிதிரோ?' என்ற தோழிக்குச் சொல்லியது. - ஒளவையார்

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது; (பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம். - பரூஉ மோவாய்ப் பதுமன்

116. குறிஞ்சி
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்,
வளம் கெழு சோழர் உறந்தைப் பெருந் துறை
நுண் மணல் அறல் வார்ந்தன்ன,
நல் நெறியவ்வே; நறுந் தண்ணியவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது - இளங்கீரன்.

119. குறிஞ்சி
சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை
கான யானை அணங்கியா அங்கு-
இளையள், முளை வாள் எயிற்றள்,
வளையுடைக் கையள்-எம் அணங்கியோளே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கற்கு உரைத்தது.- சத்திநாதனார்

120. குறிஞ்சி
இல்லோன் இன்பம் காமுற்றாஅங்கு,
அரிது வேட்டனையால்-நெஞ்சே!-காதலி
நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு
அரியள் ஆகுதல் அறியாதோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது; இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிந்தவழிக் கலங்கியதூஉம் ஆம். - பரணர்

128. நெய்தல்
குண கடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயள் அரியோட் படர்தி;
நோயை-நெஞ்சே!-நோய்ப் பாலோயே.
அல்ல குறிப்பட்டு மீளும் தலைமகன் தன் நெஞ்சினை நெருங்கிச் சொல்லியது; உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் கூறியதூஉம் ஆம். - பரணர்

129. குறிஞ்சி
எலுவ! சிறாஅர் ஏமுறு நண்ப!
புலவர் தோழ! கேளாய் அத்தை;
மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப்
பசு வெண் திங்கள் தோன்றியாங்குக்
கதுப்பு அயல் விளங்கும் சிறுநுதல்
புதுக் கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே,
கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார்

136. குறிஞ்சி
'காமம் காமம்' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.
தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

137. பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுறு தகவே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

142. குறிஞ்சி
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ,
புனக் கிளி கடியும் பூங் கட் பேதை
தான் அறிந்தன்றோ இலளே-பானாள்
பள்ளி யானையின் உயிர்த்து, என்
உள்ளம், பின்னும், தன் உழையதுவே!
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் சொல்லியது; தோழிக்குத் தலைமகன் தன் குறை கூறியதூஉம் ஆம் - கபிலர்

147. பாலை
வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை,
நுண் பூண், மடந்தையைத் தந்தோய் போல,
இன் துயில் எடுப்புதி-கனவே!-
எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.
தலைமகன் பிரிந்த இடத்துக் கனாக் கண்டு சொல்லியது. - கோப்பெருஞ்சோழன்

151. பாலை
வங்காக் கடந்த செங் கால் பேடை
எழால் உற வீழ்ந்தென, கணவற் காணாது,
குழல் இசைக் குரல குறும் பல அகவும்
குன்று உறு சிறு நெறி அரிய என்னாது,
'மறப்பு அருங் காதலி ஒழிய
இறப்பல்' என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.
பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. - தூங்கலோரி

156. குறிஞ்சி
பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம் பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.
கழறிய பாங்கற்குக் கிழவன் அழிந்து கூறியது. - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை-
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன்.

165. குறிஞ்சி
மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு,
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை-
இருங் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீஇந்தாங்கு, இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே.
பின்னின்ற தலைமகன் மறுக்கப்பட்டுப் பெயர்த்தும் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- பரணர்.

168. பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார்

173. குறிஞ்சி
பொன் நேர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பல் நூல் மாலைப் பனைப் படு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப,
'இன்னள் செய்தது இது' என, முன் நின்று,
அவள் பழி நுவலும், இவ் ஊர்;
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளேனே.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் தோழிக்கு உரைத்தது. - மதுரைக் காஞ்சிப் புலவன்

182. குறிஞ்சி
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன்

184. நெய்தல்
அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை;
குறுகல் ஓம்புமின் சிறுகுடிச் செலவே-
இதற்கு இது மாண்டது என்னாது, அதற்பட்டு,
ஆண்டு ஒழிந்தன்றே, மாண் தகை நெஞ்சம்-
மயிற்கண் அன்ன மாண் முடிப் பாவை
நுண் வலைப் பரதவர் மட மகள்
கண் வலைப் படூஉம் கானலானே.
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்

189. பாலை
இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி,
சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
வினை தலைவைக்கப்பட்ட இடத்துத் தலைமகன் பாகற்கு உரைத்தது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்.

199. குறிஞ்சி
பெறுவது இயையாதுஆயினும், உறுவது ஒன்று
உண்டுமன் வாழிய-நெஞ்சே!-திண் தேர்க்
கை வள் ஓரி கானம் தீண்டி
எறிவளி கமழும் நெறிபடு கூந்தல்
மை ஈர் ஓதி மாஅயோள்வயின்,
இன்றை அன்ன நட்பின் இந் நோய்
இறு முறை என ஒன்று இன்றி,
மறுமை உலகத்து மன்னுதல் பெறினே.
தோழி செறிப்பு அறிவுறுப்ப, நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - பரணர்

206. குறிஞ்சி
அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி
அன்ன இனியோள் குணனும், இன்ன
இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,
உடன் உறைவு அரிதே காமம்:
குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஐயூர் முடவன்

209. பாலை
சுரந்தலைப்பட்ட நெல்லிஅம் பசுங் காய்
மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும்
இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே,
குறு நடைப் புள் உள்ளலமே, நெறிமுதல்
கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித்
மை இருங் கூந்தல் மடந்தை நட்பே.
பொருள் முற்றி மறுத்தரும் தலைமகன் தோழிக்கு உரைப்பானாய்க் கிழத்தியைத் தெருட்டியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

222. குறிஞ்சி
தலைப் புணைக் கொளினே, தலைப் புணைக் கொள்ளும்;
கடைப் புணைக் கொளினே, கடைப் புணைக் கொள்ளும்;
புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின்,
ஆண்டும் வருகுவள் போலும்-மாண்ட
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச்
செவ் வெரிந் உறழும் கொழுங் கடை மழைக் கண்
துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே.
பெட்ட வாயில் பெற்று இரவு வலியுறுத்தது. - சிறைக்குடி ஆந்தையார்

233. முல்லை
கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி
கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்
பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன
கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்
வரைகோள் அறியாச் சொன்றி,
நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.
பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - பேயன்

235. பாலை
ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்
தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்
கல் உயர் நண்ணியதுவே-நெல்லி
மரையினம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.
வரையாது பிரிந்து வருவான் வாதைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.- மாயேண்டன்.

237. பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது - அள்ளூர் நன்முல்லை

250. பாலை
பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண்
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.
தலைமகன் பாகற்கு உரைத்தது. - நாமலார் மகன் இளங்கண்ணன்

256. பாலை
'மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது.

267. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார்

270. முல்லை
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான்.

272. குறிஞ்சி
தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட
வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த
நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த
புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்
சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்
குருதியொடு பறித்த செங் கோல் வாளி
மாறு கொண்டன்ன உண்கண்,
நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!
கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது. - ஒரு சிறைப் பெரியன்

274. பாலை
புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்
இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.
பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது. - உருத்திரன்

276. குறிஞ்சி
பணைத் தோட் குறுமகள்
பாவை தையும்,
பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய
தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,
முறையுடை அரசன் செங்கோல் அவையத்து
யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?
பெரிதும் பேதை மன்ற-
அளிதோதானே-இவ் அழுங்கல் ஊரே!
தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது. - கூழிக் கொற்றன்

280. குறிஞ்சி
கேளிர்! வாழியோ, கேளிர்! நாளும் என்
நெஞ்சு பிணிக் கொண்ட அம் சில் ஓதிப்
பெருந் தோட் குறுமகள் சிறு மெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்,
அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே.
கழற்றெதிர்மறை -நக்கீரர்

286. குறிஞ்சி
உள்ளிக் காண்பென் போல்வல்-முள் எயிற்று
அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில்
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல்,
பேர் அமர் மழைக்கண், கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.
இரந்து பின்னின்ற கிழவன் குறைமறாமல் கூறியது; பாங்கற்குச் சொல்லியதூஉம் ஆம்.- எயிற்றியனார்

291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்

312. குறிஞ்சி
இரண்டு அறி கள்வி நம் காதலோளே:
முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற வந்து,
நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்;
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து,
சாந்து உளர் நறுங் கதுப்பு எண்ணெய் நீவி,
அமரா முகத்தள் ஆகித்
தமர் ஓரன்னள், வைகறையானே.
இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன் நெஞ்சிற்கு வரைவிடை வேட்பக் கூறியது. - கபிலர்

323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார்

337. குறிஞ்சி
முலையே முகிழ்முகிழ்த்தனவே, தலையே
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே;
செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின;
சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என
யான் தன் அறிவல்; தான் அறியலளே;
யாங்கு ஆகுவள்கொல் தானே-
பெரு முது செல்வர் ஒரு மட மகளே?
தோழியை இரந்து பின்னின்ற கிழவன் தனது குறை அறியக் கூறியது.- பொதுக் கயத்துக் கீரந்தை

347. பாலை
மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுரமுதல்
குமரி வாகைக் கோலுடை நறு வீ
மட மாத் தோகைக் குடுமியின் தோன்றும்
கான நீள் இடை, தானும் நம்மொடு
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின்,
நன்றே-நெஞ்சம்!-நயந்த நின் துணிவே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- காவிரிப் பூம் பட்டினத்துச் சேந்தன் கண்ணன்

362. குறிஞ்சி
முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல!
சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்;
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு,
சிறு மறி கொன்று, இவள் நறு நுதல் நீவி,
வணங்கினை கொடுத்திஆயின், அணங்கிய
விண் தோய் மா மலைச் சிலம்பன்
ஒண் தார் அகலமும் உண்ணுமோ, பலியே?
வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது. - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்

371. குறிஞ்சி
கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும்,
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி
அருவியின் விளைக்கும் நாடனொடு,
மருவேன்-தோழி-அது காமமோ பெரிதே.
வரைவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகூத்தன்

376. நெய்தல்
மன் உயிர் அறியாத் துன்அரும் பொதியில்
சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப,
வேனிலானே தண்ணியள்; பனியே,
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி, ஐயென,
அலங்கு வெயில் பொதிந்த தாமரை
உள்ளகத்தன்ன சிறு வெம்மையளே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது.- படுமரத்து மோசிக் கொற்றன்

398. பாலை
தேற்றாம் அன்றே-தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை,
அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
பிரிவுணர்த்திய தோழி, 'பிறர் தலைமகன் பிரிந்து வினைமுற்றி வரும் துணையும் ஆற்றியுளராவர்' என்று, உலகியல் மேல் வைத்து உரைத்தாட்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. - பாலை ப

400. முல்லை
'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்!
இன்று தந்தனை தேரோ-
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
வினை முற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது. - பேயனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:29:12(இந்திய நேரம்)