தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தலைவி

3. குறிஞ்சி
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு,
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
தலைமகன் சிறைப்புறமாக, அவன் வரைந்து கொள்வது வேண்டி, தோழி இயற் பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - தேவகுலத்தார்

4. நெய்தல்
நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - காமஞ்சேர் குளத்தார்

5. நெய்தல்
அதுகொல், தோழி! காம நோயே?-
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நரி வெரூஉத்தலையார்

6. நெய்தல்
நள்ளென்றன்றே, யாமம்; சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள்; முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
வரைவிடை வைத்துப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழியை நெருங்கிச் சொல்லியது. - பதுமனார்

11. பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.
தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார்

12. பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார்

13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!
செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன்

21. முல்லை
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு,
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
கதுப்பின் தோன்றும் புதுப் பூங் கொன்றைக்
கானம், 'கார்' எனக் கூறினும்,
யானோ தேறேன்; அவர் பொய் வழங்கலரே.
பருவம் வருந்துணையும் ஆற்றுவித்த தோழி, 'அவர் வரல் குறித்த பருவ வரவின் கண் இனி ஆற்றுவிக்குமாறு எவ்வாறு?' என்று தன்னுள்ளே கவன்றாட்கு, அவளது குறிப்பு அறிந்த தலைமகள், 'கானம் அவர் வரு

24. முல்லை
கருங் கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவதுகொல்லோ?
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய, கொடியோர் நாவே,
காதலர் அகல, கல்லென்றவ்வே.
பருவங் கண்டு ஆற்றாளாகிய கிழத்தி உரைத்தது. - பரணர்

25. குறிஞ்சி
யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - கபிலர்

27. பாலை
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாது,
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காஅங்கு,
எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,
பசலை உணீஇயர் வேண்டும்-
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெள்ளி வீதியார்

28. பாலை
முட்டுவேன்கொல்? தாக்குவேன்கொல்?
ஓரேன், யானும்: ஓர் பெற்றி மேலிட்டு,
'ஆஅ! ஒல்' எனக் கூவுவேன்கொல்?-
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே.
வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஒளவையார்

30. பாலை
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல்,
பொய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்'
தமியென்; மன்ற அளியென் யானே!
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி

31. மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி

33. மருதம்
அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;
தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?
இரந்தூண் நிரம்பா மேனியொடு
விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.
வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது. - படுமரத்து மோசிகீரன்

35. மருதம்
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு,
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

36. குறிஞ்சி
துறுகல் அயலது மாணை மாக் கொடி
துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன்,
நெஞ்சு களன் ஆக, 'நீயலென் யான்' என,
நற்றோள் மணந்த ஞான்றை, மற்று-அவன்
தாவா வஞ்சினம் உரைத்தது
நோயோ-தோழி!-நின் வயினானே?
'வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாள்' எனக் கவன்று வேறுபட்ட தோழியைத்தலைமகள் ஆற்றுவித்தது. - பரணர்

38. குறிஞ்சி
கான மஞ்ஞை அறை ஈன் முட்டை
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும்
குன்ற நாடன் கேண்மை என்றும்
நன்றுமன் வாழி-தோழி!-உண்கண்
நீரொடு ஓராங்குத் தணப்ப,
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தனது ஆற்றாமை தோன்றத் தோழிக்குக் கூறியது. - கபிலர்

39. பாலை
'வெந் திறல் கடு வளி பொங்கர்ப் போந்தென,
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்
மலையுடை, அருஞ் சுரம்' என்ப-நம்
முலையிடை முனிநர் சென்ற ஆறே.
பிரிவிடை 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்கு, 'யாங்ஙனம் ஆற்றுவேன்?' எனத் தனது ஆற்றாமை மிகுதி தோன்றத் தலைமகள் கூறியது. - ஒளவையார்

41. பாலை
காதலர் உழையர் ஆகப் பெரிது உவந்து,
சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற;
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில்
புலப்பில் போலப் புல்லென்று
அலப்பென்-தோழி!-அவர் அகன்ற ஞான்றே.
பிரிவிடை வேறுபாடு கண்டு கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- அணிலாடு முன்றிலார்

43. பாலை
'செல்வார் அல்லர்' என்று யான் இகழ்ந்தனனே;
'ஒல்வாள் அல்லள்' என்று அவர் இகழ்ந்தனரே:
ஆயிடை, இரு பேர் ஆண்மை செய்த பூசல்,
நல்அராக் கதுவியாங்கு, என்
அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி சொல்லியது. - ஒளவையார்

46. மருதம்
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன்.

49. நெய்தல்
அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்.
நீ ஆகியர் எம் கணவனை;
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.
தலைமகன் பரத்தைமாட்டுப் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் அவனைக் கண்ட வழி அவ்வாற்றாமை நீங்குமன்றே; நீங்கியவழி, பள்ளியிடத்தானாகிய தலைமகற்குச் சொல்லியது. - அம்மூவனார்

50. மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.
கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார்

54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார்

57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருந்ங் கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர்

64. முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே.
பிரிவிடை ஆற்றாமை கண்டு, 'வருவர்' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை

65. முல்லை
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்-
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார்

67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

68. குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.
பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லை

75. மருதம்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?
தலைமகன் வரவுணர்த்திய பாணர்க்குத் தலைமகள் கூறியது. - படுமரத்து மோசிகீரனார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார்

77. பாலை
அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தட மென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்

82. குறிஞ்சி
வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
'அழாஅல்' என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும் பனி அற்சிரம் வாராதோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் 'வருவர்' என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. - கடுவன் மள்ளன்

86. குறிஞ்சி
சிறை பனி உடைந்த சேயரி மழைக் கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - வெண்கொற்றன்

87. குறிஞ்சி
'மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்' என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.
தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது. - கபிலர்

91. மருதம்
அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண் கை,
கடும் பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகுக, நீ துஞ்சும் நாளே!
பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரை த்தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி, தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிர

92. நெய்தல்
ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.
காமம் மிக்க கழிபடர் கிளவியால், பொழுது கண்டு, சொல்லியது. - தாமோதரன்

93. மருதம்
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லையார்

96. குறிஞ்சி
'அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?' என்றி; யான் அது
நகை என உணரேன்ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது- அள்ளூர் நன்முல்லை

97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வெண்பூதி

98. முல்லை
'இன்னள் ஆயினள் நன்னுதல்' என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோக்குளமுற்றன்

102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே; உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி, 'யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?' என்றது.- ஒளவையார்

103 நெய்தல்
கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - வாயிலான் தேவன்

104. பாலை
அம்ம வாழி, தோழி! காதலர்,
நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்ப,
தாளித் தண் பவர் நாள் ஆ மேயும்
பனி படு நாளே, பிரிந்தனர்;
பிரியும் நாளும் பல ஆகுபவே!
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது; 'சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ?' என்ற தோழிக்குக் கிழத்தி கூறியதூஉம் ஆம். - காவன்முல்லைப் பூதனார்.

105. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன் போல் சிறு தினைக்
கடி உண் கடவுட்கு இட்ட செழுங் குரல்
அறியாது உண்ட மஞ்ஞை, ஆடுமகள்
வெறி உறு வனப்பின் வெய்துற்று, நடுங்கும்
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - நக்கீரர்

106. குறிஞ்சி
புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்
வரை இழி அருவியின் தோன்றும் நாடன்
தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம் வயின்
வந்தன்று-வாழி, தோழி!-நாமும்
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு,
'தான் மணந்தனையம்' என விடுகம் தூதே.
தலைமகன் தூது கண்டு, கிழத்தி தோழிக்குக் கூறியது. - கபிலர்

107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார்.

108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன்

110. முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார்

112. குறிஞ்சி
கௌவை அஞ்சின், காமம் எய்க்கும்;
எள் அற விடினே, உள்ளது நாணே;
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே-
கண்டிசின், தோழி!-அவர் உண்ட என் நலனே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஆலத்தூர் கிழார்

118. நெய்தல்
புள்ளும் மாவும் புலம்பொடு வதிய
நள்ளென வந்த நார் இல் மாலை,
பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர்,
'வருவீர் உளீரோ?' எனவும்,
வாரார்-தோழி!-நம் காதலோரே.
வரைவு நீட்டித்தவழி, தலைமகள் பொழுது கண்டு தோழிக்குச் சொல்லியது.- நன்னாகையார்

121. குறிஞ்சி
மெய்யே, வாழி?-தோழி-சாரல்
மைப் பட்டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற
கோட்டொடு போகியாங்கு, நாடன்
தான் குறி வாயாத் தப்பற்குத்
தாம் பசந்தன, என் தட மென் தோளே.
இரவுக்குறி வரும் தலைமகன் செய்யும் குறி பிறிது ஒன்றனால் நிகழ்ந்து, மற்று அவன் குறியை ஒத்தவழி, அவ் ஒப்புமையை மெய்ப்பொருளாக உணர்ந்து சென்று, ஆண்டு அவனைக் காணாது தலைமகள் மயங்கியவ

122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார்

125.நெய்தல்
இலங்கு வளை நெகிழச் சாஅய், யானே,
உளெனே வாழி-தோழி!-சாரல்
தழை அணி அல்குல் மகளிருள்ளும்
விழவு மேம்பட்ட என் நலனே, பழ விறல்
பறை வலம் தப்பிய பைதல் நாரை
திரை தோய் வாங்கு சினை இருக்கும்
தண்ணம் துறைவனொடு, கண்மாறின்றே,
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள், தோழிக்குக் கூறுவாளாய், தலைவன் சிறைப்புறமாகச் சொல்லியது. - அம்மூவன்.

126. முல்லை
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி

133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன்

134. குறிஞ்சி
அம்ம வாழி-தோழி!-நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல-
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.
வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன்

140. பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே?
பொருள்வயிற் பிரிந்த இடத்து, 'நீ ஆற்றுகின்றிலை' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லை.

141. குறிஞ்சி
வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர்
செல்க என்றோளே, அன்னை' என, நீ
சொல்லின் எவனோ?-தோழி!-'கொல்லை
நெடுங் கை வன் மான் கடும் பகை உழந்த
குறுங் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை
பைங் கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆர் இருள் நடு நாள் வருதி;
சாரல் நாட, வாரலோ' எனவே.
இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகும் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சி,பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அதுவும் மறுத்து, சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - மதுரைப் ெ

145. குறிஞ்சி
உறை பதி அன்று, இத் துறை கெழு சிறுகுடி-
கானல்அம் சேர்ப்பன் கொடுமை எற்றி,
ஆனாத் துயரமொடு வருந்தி, பானாள்
துஞ்சாது உறைநரொடு உசாவாத்
துயில் கண் மாக்களொடு நெட்டிரா உடைத்தே.
வரைவிடை ஆற்றாது தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - கொல்லன் அழிசி

148. முல்லை
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக்
காசின் அன்ன போது ஈன் கொன்றை
குருந்தொடு அலம்வரும் பெருந் தண் காலையும்,
'கார் அன்று' என்றிஆயின்,
கனவோ மற்று இது? வினவுவல் யானே.
பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்த, தலைமகள் சொல்லியது. - இளங்கீரந்தையார்.

149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

150. குறிஞ்சி
சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்கு மலைநாடன் சாந்து புலர் அகலம்
உள்ளின், உள் நோய் மல்கும்;
புல்லின், மாய்வது எவன்கொல்?-அன்னாய்!
இரவுக்குறி நேர்ந்த தோழிக்குத் தலைமகள் கூறியது. - மாடலூர் கிழார்

152. குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே,
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார்

153. குறிஞ்சி
குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர்

154. பாலை
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன்

155. முல்லை
முதைப் புனம் கொன்ற ஆர்கலி உழவர்
விதைக் குறு வட்டி போதொடு பொதுளப்
பொழுதோ தான் வந்தன்றே; 'மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப, சுரன் இழிபு,
மாலை நனி விருந்து அயர்மார்
தேர் வரும்' என்னும் உரை வாராதே.
தலைமகள் பருவம் கண்டு அழிந்து சொல்லியது. - உரோடகத்துக் கந்தரத்தன்

157. மருதம்
'குக்கூ' என்றது கோழி; அதன் எதிர்
துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்-
தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.
பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

158. குறிஞ்சி
நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக்
காலொடு வந்த கமஞ் சூல் மா மழை!
ஆர் அளி இலையோ நீயே? பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை;
துணை இலர், அளியர், பெண்டிர்; இஃது எவனே?
தலைமகன் இரவுக்குறி வந்துழி, அவன் கேட்பத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.- ஒளவையார்.

160. குறிஞ்சி
நெருப்பின் அன்ன செந்தலை அன்றில்
இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு,
தடவின் ஓங்கு சினைக் கட்சியில், பிரிந்தோர்
கையற நரலும் நள்ளென் யாமத்துப்
பெருந் தண் வாடையும் வாரார்;
இஃதோ-தோழி!-நம் காதலர் வரவே?
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, தோழி, 'வரைவர்' என ஆற்றுவிப்புழி, தலைமகள் கூறியது. - மதுரை மருதன் இளநாகன்.

161. குறிஞ்சி
பொழுதும் எல்லின்று; பெயலும் ஓவாது,
கழுது கண் பனிப்ப வீசும்; அதன்தலைப்
புலிப்பல் தாலிப் புதல்வன் புல்லி,
'அன்னா!' என்னும், அன்னையும்: அன்னோ!
என் மலைந்தனன்கொல் தானே-தன் மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்து நின்றனனே?
இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்புமிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - நக்கீரர்

163.நெய்தல்
யார் அணங்குற்றனை-கடலே! பூழியர்
சிறு தலை வெள்ளைத் தோடு பரந்தன்ன
மீன் ஆர் குருகின் கானல்அம் பெருந்துறை.
வெள் வீத் தாழை திரை அலை
நள்ளென் கங்குலும் கேட்கும், நின் குரலே?
தன்னுள் கையாறு எய்திடு கிளவி - அம்மூவன்

169. மருதம்
சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ-ஐய! மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே:
பாணர் பசுமீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி,
நும்மும் பெறேஎம், இறீஇயர் எம் உயிரே.
கற்புக் காலத்துத் தெளிவிடை விலங்கியது; இனித் தோழி வரைவு நீட்டித்தவழி வரைவு கடாயதூஉம் ஆம். - வெள்ளிவீதியார்.

170. குறிஞ்சி
பலரும் கூறுக, அஃது அறியாதோரே-
அருவி தந்த நாட் குரல் எருவை
கயம் நாடு யானை கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே,
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கருவூர் கிழார்

171. மருதம்
காண் இனி வாழி-தோழி-யாணர்க்
கடும்புனல் அடைகரை நெடுங் கயத்து இட்ட
மீன் வலை மாப் பட்டாஅங்கு,
இது மற்று-எவனோ, நொதுமலர் தலையே?
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- பூங்கணுத்திரையார்

172. நெய்தல்
தாஅவல் அஞ்சிறை நொப் பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை,
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர்கொல்லோ?
ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும், என் நெஞ்சே.
வரைவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்

174. பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி

175. நெய்தல்
பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி,
உரவுத் திரை பொருத திணிமணல் அடைகரை,
நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம்
மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு
இரங்கேன்-தோழி!-'ஈங்கு என் கொல்?' என்று,
பிறர்பிறர் அறியக் கூறல்
அமைந்தாங்கு அமைக; அம்பல் அஃது எவனே?
பிரிவிடைக் கடுஞ் சொற் சொல்லி வற்புறுத்துவாட்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்.

176. குறிஞ்சி
ஒரு நாள் வாரலன்; இரு நாள் வாரலன்;
பல் நாள் வந்து, பணிமொழி பயிற்றி, என்
நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை,
வரை முதிர் தேனின் போகியோனே-
ஆசு ஆகு எந்தை-யாண்டு உளன்கொல்லோ?
வேறு புலன் நல் நாட்டுப் பெய்த
ஏறுடை மழையின் கலிழும், என் நெஞ்சே.
தோழி கிழத்தியைக் குறை நயப்பக் கூறியது. - வருமுலையாரித்தி

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்

181. குறிஞ்சி
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார்

183. முல்லை
சென்ற நாட்ட கொன்றைஅம் பசு வீ
நம் போல் பசக்கும் காலை, தம் போல்
சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு
இரலை மானையும் காண்பர்கொல், நமரே?-
புல்லென் காயாப் பூக் கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தின் தோன்றும்
புன் புல வைப்பிற் கானத்தானே.
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒளவையார்

185. குறிஞ்சி
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

186. முல்லை
ஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த
கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி
எயிறு என முகையும் நாடற்குத்
துயில் துறந்தனவால்-தோழி!-எம் கண்ணே,
பருவ வரவின், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- ஒக்கூர் மாசாத்தி.

187. குறிஞ்சி
செவ் வரைச் சேக்கை வருடைமான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி,
பெரு வரை நீழல் உகளும் நாடன்
கல்லினும் வலியன்-தோழி!-
வலியன் என்னாது மெலியும், என் நெஞ்சே.
வரைவு நீட்டித்த வழி, ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்க வேண்டித் தலைமகனை இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. - கபிலர்

188. முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

190. முல்லை
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி,
செறிவளை நெகிழ, செய்பொருட்கு அகன்றோர்
அறிவர்கொல் வாழி-தோழி!-பொறி வரி
வெஞ் சின அரவின் பைந் தலை துமிய
நரை உரும் உரறும் அரை இருள் நடுநாள்,
நல் ஏறு இயங்குதொறு இயம்பும்
பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே?
பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பூதம்புல்லன்.

191. முல்லை
உதுக்காண் அதுவே: இது என மொழிகோ?-
நோன் சினை இருந்த இருந் தோட்டுப் புள்ளினம்
தாம் புணர்ந்தமையின், பிரிந்தோர் உள்ளத்
தீம் குரல் அகவக் கேட்டும், நீங்கிய
ஏதிலாளர் இவண் வரின், 'போதின்
பொம்மல் ஓதியும் புனையல்;
எம்மும் தொடாஅல்' என்குவெம்மன்னே.
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

192. பாலை
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

193. முல்லை
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார்

194. முல்லை
என் எனப்படுங்கொல்-தோழி! மின்னு வர
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ? அதன் எதிர்
கான மஞ்ஞை கடிய ஏங்கும்;
ஏதில கலந்த இரண்டற்கு என்
பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே?
பருவ வரவின்கண், 'ஆற்றாளாம்', எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கோவர்த்தனார்.

195. நெய்தல்
சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப்
படர் சுமந்து எழுதரு பையுள் மாலை,
யாண்டு உளர் கொல்லோ வேண்டு வினை முடிநர்?
'இன்னாது, இரங்கும்' என்னார் அன்னோ-
தைவரல் அசைவளி மெய் பாய்ந்து ஊர்தரச்
செய்வுறு பாவை அன்ன என்
மெய் பிறிதாகுதல் அறியாதோரே!
பிரிவிடைப் பருவ வரவின்கண் கிழத்தி மெலிந்து கூறியது. - தேரதரன்.

197. நெய்தல்
யாது செய்வாம்கொல்-தோழி!-நோதக
நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை
ஊதைஅம் குளிரொடு பேதுற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம்
காதலர்ப் பிரிந்த எற் குறித்து வருமே?
பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கச்சிப்பேட்டு நன்னாகையார்.

200. நெய்தல்
பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசும் வளி கலந்து,
இழிதரும் புனலும்; வாரார்-தோழி!-
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே-
கால மாரி மாலை மா மலை
இன் இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
பருவ வரவின்கண் ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி, 'பருவம் அன்று; வம்பு'என்ற வழி, தலைமகள் சொல்லியது. - ஒளவையார்.

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

202. மருதம்
நோம், என் நெஞ்சே! நோம், என் நெஞ்சே!
புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கு இன் புது மலர் முட் பயந்தாஅங்கு,
இனிய செய்த நம் காதலர்
இன்னா செய்தல் நோம், என் நெஞ்சே!
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்தது. - அள்ளூர் நன்முல்லை

203. மருதம்
மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - நெடும்பல்லியத்தன்

205. நெய்தல்
மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்தாங்கு,
பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி,
கலங்கு கடற் துவலை ஆழி நனைப்ப,
இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்;
யாங்கு அறிந்தன்றுகொல்-தோழி!-என்
தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே?
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உலோச்சன்

207. பாலை
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன்.

208. குறிஞ்சி
ஒன்றேன் அல்லேன்; ஒன்றுவென்; குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்,
நின்று கொய மலரும் நாடனொடு
ஒன்றேன்-தோழி!-ஒன்றினானே,
வரை விடை, 'ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

216. பாலை
அவரே, கேடு இல் விழுப்பொருள் தருமார், பாசிலை
வாடா வள்ளிஅம் காடு இறந்தோரே;
யானே, தோடு ஆர் எல் வளை ஞெகிழ, நாளும்
பாடு அமை சேக்கையில், படர் கூர்ந்திசினே;
'அன்னள் அளியள்' என்னாது, மா மழை
இன்னும் பெய்யும்; முழங்கி
மின்னும்-தோழி!-என் இன் உயிர் குறித்தே
பருவ வரவின்கண், 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கச்சிப் பேட்டுக் காஞ்சிக் கொற்றன

218.பாலை
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக்
கடனும் பூணாம்; கைந் நூல் யாவாம்;
புள்ளும் ஓராம்; விரிச்சியும் நில்லாம்;
உள்ளலும் உள்ளாம் அன்றே-தோழி!-
உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின், தம் இன்று
இமைப்பு வரை அமையா நம் வயின்
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்மாட்டே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கொற்றன்

219. நெய்தல்
பயப்பு என் மேனியதுவே; நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே;
செறிவும் சேண் இகந்தன்றே; அறிவே;
'ஆங்கண் செல்கம் எழுக' என, ஈங்கே,
வல்லா கூறியிருக்கும்; அள் இலைத்
தடவு நிலைத் தாழைச் சேர்ப்பற்கு
இடம்மன்-தோழி!-'எந் நீரிரோ?' எனினே.
சிறைப்புறம். - வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார்.

220. முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி

221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன்

223. குறிஞ்சி
'பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்' என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, 'இவை
ஒத்தன நினக்கு' எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது. - மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன்

226. நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்

228. நெய்தல்
வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,
குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,
திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து
நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,
நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.
கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

231. மருதம்
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;
சேரி வரினும் ஆர முயங்கார்;
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,
நல் அறிவு இழந்த காமம்
வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.
வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன்

240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி.

241. குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும், தாம் தம்
கெழுதகைமையின் அழுதன-தோழி!-
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

243. நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன்

244. குறிஞ்சி
பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,
உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்
கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!-
ஓரி முருங்கப் பீலி சாய
நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம்
உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டுஎதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, 'வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அ

245. நெய்தல்
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்
நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-
வாள் போல் வாய கொழு மடல் தாழை
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்
மெல்லம் புலம்பன் கொடுமை
பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மாலை மாறன்

246. நெய்தல்
'பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை
களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,
பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்
தேர் வந்து பெயர்ந்தது' என்ப. அதற்கொண்டு,
ஓரும்அலைக்கும் அன்னை; பிறரும்
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்
இளையரும் மடவரும் உளரே;
அலையாத் தாயரொடு நற்பாலோரே.
சிறைப்புறம். - கபிலர்

249. குறிஞ்சி
இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,
நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,
படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்
குன்றம் நோக்கினென்-தோழி!-
பண்டையற்றோ, கண்டிசின், நுதலே?
வரைவிடை வைப்ப, 'ஆற்றாகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது - கபிலர்

252. குறிஞ்சி
நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்
வருவதோர் காலை, இன் முகம் திரியாது,
கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,
'மடவைமன்ற நீ' எனக் கடவுபு
துனியல் வாழி-தோழி!-சான்றோர்
புகழும் முன்னர் நாணுப;
பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?
தலைமகன் வரவறிந்த தோழி, 'அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.- கிடங்கில் குலபதி நக்கண்ணன்

254. பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
'செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்' என, வரூஉம் தூதே.
பருவங் கண்டு வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - பார்காப்பான்

257. குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன்

261. குறிஞ்சி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

264.குறிஞ்சி
கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.
'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்றது. - கபிலர்

266. பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - நக்கீரர்

269. நெய்தல்
சேயாறு சென்று, துனைபரி அசாவாது,
உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-
வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்
நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்
உப்பை மாறி வெண்ணெல் தரீஇய
உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,
பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,
'இனி வரின் எளியள்' என்னும் தூதே.
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது - கல்லாடனார்

271. மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யர்றுநிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே,
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.- அழிசி நச்சாத்தனார்

273. பாலை
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.
'பிரிவர்' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.- சிறைக்குடி ஆந்தையார்

278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன்

279. முல்லை
திரிமருப்பு எருமை இருள் நிற மை ஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு இசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும் பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை மருதன் இளநாகனார்

281. பாலை
வெண் மணற் பொதுளிய
பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன்

283. பாலை
'உள்ளது சிதைப்போர்' உளர் எனப்படாஅர்;
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு' எனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி-தோழி-என்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்
ஆற்று இருந்து அல்கி, வழங்குநர்ச் செகுத்த
படு முடைப் பருந்து பார்த்திருக்கும்
நெடு மூதிடைய நீர் இல் ஆறே.
தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி. 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'அவர் பிரிய ஆற்றேனாயினேனல்லேன்; அவர் போன கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்'. என்று, கிழத்தி சொல்

284. குறிஞ்சி
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன்

285. பாலை
வைகா வைகல் வைகவும் வாரார்;
எல்லா எல்லை எல்லவும் தோன்றார்;
யாண்டு உளர்கொல்லோ?-தோழி!-ஈண்டு இவர்
சொல்லிய பருவமோ இதுவே; பல் ஊழ்
புன் புறப் பெடையொடு பயிரி, இன் புறவு
இமைக்கண் ஏது ஆகின்றோ!-ஞெமைத் தலை
ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும்
வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட இடத்து, வற்புறுத்தும் தோழிக்கு, வன்புறை எதிரழிந்து,தலைமகள் சொல்லியது. - பூதத் தேவன்

288. குறிஞ்சி
கறி வளர் அடுக்கத்து ஆங்கண், முறி அருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங் கல் நாடன்
இனியன்; ஆகலின், இனத்தின் இயன்ற
இன்னாமையினும், இனிதோ-
இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே?
தலைமகனது வரவுணர்ந்து, 'நம்பெருமான் நமக்கு அன்பிலன்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கபிலர்

289. முல்லை
வளர்பிறை போல வழிவழிப் பெருகி,
இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய்,
உழையர் அன்மையின் உழப்பது அன்றியும்,
மழையும்-தோழி!-மான்றுபட்டன்றே;
பட்ட மாரி படாஅக்கண்ணும்,
அவர் திறத்து இரங்கும் நம்மினும்,
நம் திறத்து இரங்கும், இவ் அழுங்கல் ஊரே.
'காலம் கண்டு வேறுபட்டாள்' எனக் கவன்ற தோழிக்கு, 'காலத்து வந்திலர் என்று வேறுபட்டேனல்லென்; அவரைப் புறத்தார், 'கொடியர்' என்று கூறக்கேட்டு வேறுபட்டேன்'என்று, தலைமகள் சொல்லியது

290. நெய்தல்
'காமம் தாங்குமதி' என்போர்தாம் அஃது
அறியலர்கொல்லோ? அனை மதுகையர் கொல்?
யாம், எம் காதலர்க் காணேம்ஆயின்,
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு, பெருநீர்க்
கல் பொரு சிறு நுரை போல,
மெல்லமெல்ல இல்லாகுதுமே.
வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது. - கல்பொருசிறுநுரையார்.

293. மருதம்
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன்

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

299. நெய்தல்
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

302. குறிஞ்சி
உரைத்திசின்-தோழி!-அது புரைத்தோ அன்றே?
அருந் துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்
பெரும்பிறிதாகல் அதனினும் அஞ்சுதும்;
அன்னோ! இன்னும், நல் மலை நாடன்,
'பிரியா நண்பினர் இருவரும்' என்னும்
அலர்-அதற்கு அஞ்சினன்கொல்லோ? பலர் உடன்
துஞ்சு ஊர் யாமத்தானும், என்
நெஞ்சத்து அல்லது வரவு அறியானே.
வரைவிடைக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - மாங்குடி கிழார்

304. நெய்தல்
கொல்வினைப் பொலிந்த கூர் வாய் எறிஉளி
முகம் பட மடுத்த முளிவெதிர் நோன் காழ்
தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து, வாங்கு விசைக்
கொடுந் திமிற் பரதவர் கோட்டு மீன் எறிய,
நெடுங் கரை இருந்த குறுங் கால் அன்னத்து
வெண் தோடு இரியும் வீ ததை கானல்,
கைதைஅம் தண் புனற் சேர்ப்பனொடு
செய்தனெம்மன்ற, ஓர் பகை தரு நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கணக்காயன் தத்தன்

305. மருதம்
கண் தர வந்த காம ஒள் எரி
என்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று, நாம் முயங்கற்கு அருங் காட்சியமே
வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே;
உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார்
குப்பைக் கோழித் தனிப் போர் போல,
விளிவாங்கு விளியின் அல்லது,
களைவோர் இலை-யான் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தோடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது. - குப்பைக் கோழியார்.

306. நெய்தல்
'மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன்

310. நெய்தல்
புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை கழியப் புல்லென்றன்றே;
இன்னும் உளெனே-தோழி!-இந் நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.
வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது. - பெருங்கண்ணன்

31. மருதம்
மள்ளர் குழீஇய விழவினானும்,
மகளிர் தழீஇய துணங்கையானும்,
யாண்டும் காணேன், மாண் தக்கோனை;
யானும் ஓர் ஆடுகள மகளே; என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசிலும், ஓர் ஆடுகள மகனே.
நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தோடு நின்றது. - ஆதிமந்தி

313. நெய்தல்
பெருங் கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்து நீர் இருங் கழி இரை தேர்ந்து உண்டு,
பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவனொடு
யாத்தேம்; யாத்தன்று நட்பே;
அவிழ்த்தற்கு அரிது; அது முடிந்து அமைந்தன்றே.
இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவு உணர்ந்து, 'பண்பிலர்' என்று இயற்பழித்த தோழிக்கு, 'அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோ!' என்று,சிறைப்புறமாகத் தலைமகள் இயற்பட

314. முல்லை
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

உரை

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன்

315. குறிஞ்சி
எழுதரு மதியம் கடல் கண்டாஅங்கு
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலைநாடன்
ஞாயிறு அனையன்-தோழி!-
நெருஞ்சி அனைய என் பெரும் பணைத்தோளே.
வரைவிடை, 'வேறுபடுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- மதுரை வேளாதத்தன்

316. நெய்தல்
ஆய் வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும்,
நோய் மலி வருத்தம் அன்னை அறியின்,
உளெனோ வாழி-தோழி!-விளியாது,
உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட,
ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரி
ஓங்கு வரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிற ஆயினவே?
வரைவிடை 'வேறு படுகின்றாய்' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- தும்பி சேர் கீரன்

318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

319. முல்லை
மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை;
பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார்ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே
பருவ வரவின்கண் வேறுபட்ட கிழத்தி வன்புறை எதிர் அழிந்து சொற்றது.- தாயங் கண்ணன்

320. நெய்தல்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன்

322. குறிஞ்சி
அமர்க்கண் ஆமான் அம் செவிக் குழவி
கானவர் எடுப்ப வெரீஇ, இனம் தீர்ந்து,
கானம் நண்ணிய சிறுகுடி பட்டென,
இளையர் ஓம்ப மரீஇ, அவண் நயந்து,
மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு,
மருவின் இனியவும் உளவோ?
செல்வாம்-தோழி!-ஒல்வாங்கு நடந்தே.
தலைமகன் வரவு உணர்ந்து தலைமகள் இயற்பட மொழிந்தது. - ஐயூர் முடவன்

325. நெய்தல்
'சேறும் சேறும்' என்றலின், பண்டைத் தம்
மாயச் செலவாச் செத்து, 'மருங்கு அற்று
மன்னிக் கழிக' என்றேனே; அன்னோ!
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
கருங் கால் வெண் குருகு மேயும்
பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலை நிறைந்தே.
பிரிவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி மெலிந்து உரைத்தது.- நன்னாகையார்

326. நெய்தல்
துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே-தோழி!-
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே,
சிறைப்புறம்.

327. குறிஞ்சி
'நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்வயின்
நயன் இலர் ஆகுதல் நன்று' என உணர்ந்த
குன்ற நாடன்தன்னினும், நன்றும்
நின் நிலை கொடிதால்-தீம் கலுழ் உந்தி!
நம் மனை மட மகள், 'இன்ன மென்மைச்
சாயலள்; அளியள்' என்னாய்,
வாழை தந்தனையால், சிலம்பு புல்லெனவே.
கிழவன் கேட்கும் அண்மையனாக, அவன் மலையினின்றும் வரும் யாற்றொடு உரைப்பாளாய்க் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

329. பாலை
கான இருப்பை வேனில் வெண் பூ
வளி பொரு நெடுஞ் சினை உஞற்றலின், ஆர் கழல்பு,
களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம்
பிறங்குமலை அருஞ் சுரம் இறந்தவர்ப் படர்ந்து,
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி,
தெள் நீர் நிகர்மலர் புரையும்
நல் மலர் மழைக்கணிற்கு எளியவால், பனியே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு, 'யான்' ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது. - ஓதலாந்தையார்

330. மருதம்
நலத்தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத்
தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட
நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும்
பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ
இன் கடுங் கள்ளின் மணம் இல கமழும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றியன்

334. நெய்தல்
சிறு வெண் காக்கைச் செவ் வாய்ப் பெருந்தோடு
எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்ப,
பனி புலந்து உறையும் பல் பூங் கானல்
இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பின், ஒரு நம்
இன் உயிர் அல்லது, பிறிது ஒன்று
எவனோ-தோழி!-நாம் இழப்பதுவே?
'வரைவிடை ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது. - இளம் பூதனார்

340. நெய்தல்
காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழி பெயர் மருங்கின் ஒல்கி, ஓதம்
பெயர்தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும்-தோழி!-அவர் இருந்த என் நெஞ்சே.
இரவுக்குறி உணர்த்திய தோழிக்குக் கிழத்தி மறுத்தது. - அம்மூவன்

341. நெய்தல்
பல் வீ படரிய பசு நனை குரவம்
பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச்
சினை இனிது ஆகிய காலையும், காதலர்
பேணார் ஆயினும், 'பெரியோர் நெஞ்சத்துக்
கண்ணிய ஆண்மை கடவது அன்று' என,
வலியா நெஞ்சம் வலிப்ப,
வாழ்வேன்-தோழி!-என் வன்கணானே.
'பருவ வரவின்கண் வேறுபடும்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது- மிளைகிழான் நல் வேட்டன்

344. முல்லை
நோற்றோர் மன்ற-தோழி!-தண்ணெனத்
தூற்றும் துவலைப் பனிக் கடுந் திங்கள்
புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல்
பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து,
ஊர்வயின் பெயரும் புன்கண் மாலை,
அரும் பெறல் பொருட் பிணிப் போகிப்
பிரிந்து உறை காதலர் வர, காண்போரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் கூறியது. - குறுங்குடி மருதன்

349. நெய்தல்
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன்.

352. பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

360. குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்

361. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர்

368. மருதம்
மெல்லியலோயே! மெல்லியலோயே!
நல் நாண் நீத்த பழி தீர் மாமை
வன்பின் ஆற்றுதல் அல்லது, செப்பின்,
சொல்ல கிற்றா மெல்லியலோயே!
சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே,
நாள் இடைப் படாஅ நளி நீர் நீத்தத்து
இடிகரைப் பெரு மரம் போல,
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே.
வரைவு மலிந்த தோழிக்குக் கிழத்தி கூறியது. - நக்கீரர்

377. குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன்

385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர்

386. நெய்தல்
வெண் மணல் விரிந்த வீ ததை கானல்
தண்ணந் துறைவன் தணவா ஊங்கே,
வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும்
மாலையோ அறிவேன்மன்னே; மாலை
நிலம் பரந்தன்ன புன்கணொடு
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- வெள்ளிவீதியார்

387. முல்லை
எல்லை கழிய, முல்லை மலர,
கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறை எதிர் அழிந்து கூறியது.- கங்குல் வெள்ளத்தார்

391. முல்லை
உவரி ஒருத்தல் உழாஅது மடியப்
புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்,
கடிது இடி உருமின் பாம்பு பை அவிய,
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே;
வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலை,
பூஞ் சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉம்-தோழி!-பெரும் பேதையவே!
பிரிவிடை, 'பருவ வரவின்கண் ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து சொல்லியது. - பொன்மணியார்

395. பாலை
நெஞ்சே நிரை ஒல்லாதே; அவரே,
அன்பு இன்மையின், அருள் பொருள் என்னார்;
வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே;
அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக்
களையார் ஆயினும், கண் இனிது படீஇயர்;
அஞ்சல் என்மரும் இல்லை; அந்தில்
அளிதோதானே நாணே-
ஆங்கு அவர் வதிவயின் நீங்கப்படினே!
வரைவிடை வைத்துப் பிரிய, ஆற்றாளாகிய கிழத்தி, 'நாம் ஆண்டுச் சேறும்' எனத் தோழிக்கு உரைத்தது.

399. மருதம்
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.
வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - பரணர்

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:29:35(இந்திய நேரம்)