தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


செவிலி

15. பாலை
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.
உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார்

44. பாலை
காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.
இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது. - வெள்ளிவீதியார்

84. பாலை
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன்

144. பாலை
கழிய காவி குற்றும், கடல
வெண் தலைப் புணரி ஆடியும், நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர,
இவ் வழிப் படுதலும் ஒல்லாள்-அவ் வழிப்
பரல்பாற் படுப்பச் சென்றனள் மாதோ-
செல் மழை தவழும் சென்னி
விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே!
மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மதுரை ஆசிரியன் கோடங் கொற்றன்

167. முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

242. முல்லை
கானங்கோழிக் கவர் குரற் சேவல்
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்
புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்
சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்
வேந்து விடு தொழிலொடு செலினும்,
சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.
கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.- குழற்றத்தன்

356. பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?
மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமனார.்

378. பாலை
ஞாயிறு காணாத மாண் நிழற் படீஇய,
மலைமுதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்,
தண் மழை தலையவாகுக-நம் நீத்துச்
சுடர் வாய் நெடு வேற் காளையொடு
மட மா அரிவை போகிய சுரனே!
மகள் போக்கிய செவிலி தெய்வத்திற்குப் பராயது. - கயமனார்

396. நெய்தல்
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:29:58(இந்திய நேரம்)