தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஓமை

79. பாலை
கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- குடவாயிற் கீரனக்கன்

124. பாலை
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன் தலை,
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங் காடு
இன்னா என்றிர்ஆயின்,
இனியவோ-பெரும!-தமியோர்க்கு மனையே?
புணர்ந்து உடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

207. பாலை
'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி,
நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
செலவுக் குறிப்பு அறிந்து. 'அவர் செல்வார்' என்று தோழி சொல்ல, கிழ்த்தி உரைத்தது.- உறையன்.

260. பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- கல்லாடனார்.

396. நெய்தல்
பாலும் உண்ணாள், பந்துடன் மேவாள்,
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே,
எளிது என உணர்ந்தனள்கொல்லோ-முளி சினை
ஓமைக் குத்திய உயர் கோட்டு ஒருத்தல்
வேனிற் குன்றத்து வெவ் அறைக் கவாஅன்
மழை முழங்கு கடுங் குரல் ஓர்க்கும்
கழை திரங்கு ஆர் இடை, அவனொடு செலவே?
மகட் போக்கிய தாய் உரைத்தது, - கயமனார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:11:55(இந்திய நேரம்)