தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பலா (பலவு)

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!
இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்

83. குறிஞ்சி
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, 'வரும்' என்றோளே!
தலைமகன் வரைந்து எய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழி வாழ்த்தியது. - வெண்பூதன்

90. குறிஞ்சி
எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத்தோழி கூறியது. - மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்

153. குறிஞ்சி
குன்றக் கூகை குழறினும், முன்றிற்
பலவின் இருஞ் சினைக் கலை பாய்ந்து உகளினும்,
அஞ்சும்மன்; அளித்து-என் நெஞ்சம்!-இனியே,
ஆர் இருட் கங்குல் அவர்வயின்
சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே.
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுகுகின்றுழி, 'நாம் அவரை வேறுபடுத்தற்குக் காரணம் என்னை?' என்ற தோழிக்கு, 'அவர் வரவு நமது ஆற்றாமைக்குக் காரணம் ஆம்' எனத் தலைமகள் கூறியது. - கபிலர்

257. குறிஞ்சி
வேரும் முதலும் கோடும் ஒராங்குத்
தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்
ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;
அகலினும் அகலாதாகி
இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.
வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - உறையூர்ச் சிறுகந்தன்

352. பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.
பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

365. குறிஞ்சி
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே-
துன் அரு நெடு வரைத் ததும்பி அருவி
தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும்
மருங்கில் கொண்ட பலவின்
பெருங் கல் நாட! நீ நயந்தோள் கண்ணே.
'யான் வரையுந்துணையும் ஆற்றவல்லளோ?' என வினவிய கிழவற்குத் தோழி சொல்லியது.- மதுரை நல்வெள்ளி

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

385. குறிஞ்சி
பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை,
சிலை விற் கானவன் செந் தொடை வெரீஇ
செரு உறு குதிரையின் பொங்கி, சாரல்
இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும்
பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும்
அன்றை அன்ன நட்பினன்;
புதுவோர்த்து அம்ம, இவ் அழுங்கல் ஊரே.
வேற்று வரைவு மாற்றியது. - கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:12:57(இந்திய நேரம்)