தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


பனை (பெண்ணை, போந்தை)

81. குறிஞ்சி
இவளே, நின் சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது. -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

168. பாலை
மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை
இரும் பனம் பசுங் குடை பலவுடன் பொதிந்து
பெரும் பெயல் விடியல் விரித்து விட்டன்ன
நறுந் தண்ணியளே, நல் மா மேனி;
புனற் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள்
மணத்தலும் தணத்தலும் இலமே;
பிரியின் வாழ்தல் அதனினும் இலமே.
பொருள் வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது - சிறைக்குடி ஆந்தையார்

177. நெய்தல்
கடல் பாடு அவிந்து, கானல் மயங்கி,
துறை நீர் இருங் கழி புல்லென்றன்றே;
மன்றலம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை
அன்றிலும் பையென நரலும்; இன்று அவர்
வருவர்கொல் வாழி-தோழி!-நாம் நகப்
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித்
தணப்பு அருங் காமம் தண்டியோரே?
கிழவன் வரவுணர்ந்து, தோழி கிழத்திக்கு உரைத்தது. - உலோச்சன்

182. குறிஞ்சி
விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல்
மணி அணி பெருந் தார் மரபிற் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி,
தெருவின் இயலவும் தருவதுகொல்லோ-
கலிழ் கவின் அசைநடைப் பேதை
மெலிந்திலள்; நாம் விடற்கு அமைந்த தூதே?
தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைமகன் தன் நெஞ்சிற்கு உரைத்தது.- மடல் பாடிய மாதங்கீரன்

281. பாலை
வெண் மணற் பொதுளிய
பைங் கால் கருக்கின்
கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு,
அத்த வேம்பின் அமலை வான் பூச்
சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடி,
குன்று தலைமணந்த கானம்
சென்றனர்கொல்லோ-சேயிழை!-நமரே?
பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு, தோழி வற்புறுப்பாட்குக் கிழத்தி உரைத்தது.- குடவாயிற் கீரத்தன்

293. மருதம்
கள்ளின் கேளிர் ஆர்த்திய, உள்ளூர்ப்
பாளை தந்த பஞ்சிஅம் குறுங் காய்
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும்
ஆதி அருமன் மூதூர் அன்ன,
அய வெள்ளாம்பல் அம் பகை நெறித் தழை
தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப,
வருமே சேயிழை, அந்தில்
கொழுநற் காணிய; அளியேன் யானே!
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்கு வாயிலாகப் புக்க தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கள்ளில் ஆத்திரையன்

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.
வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

372. குறிஞ்சி
பனைத் தலைக்-கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய,
கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக்
கணம் கொள் சிமைய உணங்கும் கானல்,
ஆழி தலைவீசிய அயிர்ச் சேற்று அருவிக்
கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை
புலர் பதம் கொள்ளா அளவை,
அலர் எழுந்தன்று, இவ் அழுங்கல் ஊரே.
இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகன் கேட்ப, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - விற்றூற்று மூதெயினனார்

374. குறிஞ்சி
எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்,
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப,
நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே-
முடங்கல் இறைய தூங்கணம்குரீஇ,
நீடு இரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மையல் ஊரே.
அறத்தோடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது. - உறையூர்ப் பல்காயனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:13:03(இந்திய நேரம்)