தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


மா (கொக்கு)

8. மருதம்
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல,
மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.
கிழத்தி தன்னைப் புறனுரைத்தாள் எனக் கேட்ட காதற் பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்.

26. குறிஞ்சி
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ் சினை இருந்த தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான் தீது மொழியினும்,
தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே-
தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத்துவர் வாய்
வரை ஆடு வன் பறழ்த் தந்தைக்
கடுவனும் அறியும், அக் கொடியோனையே.
நற்றாயும் செவிலித் தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, 'இஃது எற்றினான்ஆயிற்று?' என்று கட்டுவிச்சியை வினவிக் கட்டுக் காண்கின்ற காலத்து,'தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெ

73. குறிஞ்சி
மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்றுமொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.
பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது - பரணர்

164. மருதம்
கணைக் கோட்டு வாளைக் கமஞ் சூல் மட நாகு
துணர்த் தேக்கொக்கின் தீம் பழம் கதூஉம்
தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது
தண் பெரும் பௌவம் அணங்குக-தோழி!-
மனையோள் மடமையின் புலக்கும்
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே!
காதல்பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப உரைத்தது. - மாங்குடிமருதன்

192. பாலை
'ஈங்கே வருவர், இனையல், அவர்' என,
அழாஅற்கோ இனியே?-நோய் நொந்து உறைவி!-
மின்னின் தூவி இருங் குயில், பொன்னின்
உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை
நறுந் தாது கொழுதும் பொழுதும்,
வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.
பிரிவிடை வற்புறுத்த வன்புறை எதிர் அழிந்து கிழத்தி உரைத்தது.- கச்சிப்பேட்டு நன்னாகையார்.

201. குறிஞ்சி
அமிழ்தம் உண்க-நம் அயல் இலாட்டி,
பால் கலப்பன்ன தேக் கொக்கு அருந்துபு,
நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை
நெல்லிஅம் புளி மாந்தி, அயலது
முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும்
கழை நிவந்து ஓங்கிய சோலை
மலை கெழு நாடனை வரும் என்றோளே!
கடிநகர் புக்கு, 'வேறுபடாது நன்கு ஆற்றினாய்!' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.
பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன்

306. நெய்தல்
'மெல்லிய, இனிய, மேவரு தகுந,
இவை மொழியாம்' எனச் சொல்லினும், அவை நீ,
மறத்தியோ வாழி-என் நெஞ்சே!-பல உடன்
காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்
வண்டு வீழ்பு அயரும் கானல்-
தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே?
காப்பு மிகுதியான், நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து, கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

331. பாலை
நெடுங் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை,
ஆறு செல் வம்பலர் தொலைய, மாறு நின்று,
கொடுஞ் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்
கடுங்கண் யானைக் கானம் நீந்தி,
இறப்பர்கொல் வாழி-தோழி!-நறுவடிப்
பைங் கால் மாஅத்து அம் தளிர் அன்ன
நல் மா மேனி பசப்ப,
நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே.
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- வாடாப் பிரமந்தன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:13:42(இந்திய நேரம்)