தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கரும்பு

35. மருதம்
நாண் இல மன்ற, எம் கண்ணே-நாள் நேர்பு,
சினைப் பசும்பாம்பின் சூல் முதிர்ப்பன்ன
கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ
நுண் உறை அழிதுளி தலைஇய
தண் வரல் வாடையும், பிரிந்திசினோர்க்கு அழலே.
பிரிவிடை மெலிந்த கிழத்தி தோழிக்குச் சொல்லியது. - கழார்க் கீரன் எயிற்றி

85. மருதம்
யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.
வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது. - வடம வண்ணக்கன் தாமோதரன்

149. பாலை
அளிதோ தானே-நாணே நம்மொடு
நனி நீடு உழந்தன்று மன்னே; இனியே,
வான் பூங் கரும்பின் ஓங்கு மணற் சிறு சிறை
தீம் புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு,
தாங்கும் அளவைத் தாங்கி,
காமம் நெரிதரக் கைந் நில்லாதே.
உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்

180. பாலை
பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி
இருங் களிற்று இன நிரை ஏந்தல் வரின், மாய்ந்து,
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து,
எய்தினர் கொல்லோ பொருளே-அல்குல்
அவ் வரி வாடத் துறந்தோர்
வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே?
பிரிவிடை வேறுபட்டாளைத் தோழி வற்புறுத்தியது. - கச்சிப்பேட்டு நன்னாகையார்

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

262. பாலை
ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,
விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

267. பாலை
இருங் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம்
ஒருங்குடன் இயைவதுஆயினும், கரும்பின்
கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க்
கோல் அமை குறுந் தொடிக் குறுமகள் ஒழிய,
ஆள்வினை மருங்கில் பிரியார் - நாளும்
உறல் முறை மரபின் கூற்றத்து
அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே.
'மேல்நின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின், நாமும் பொருட்குப் பிரிதும்' என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறி, செலவு அழுங்கியது.- காலெறி கடிகையார்

384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம-மகிழ்ந!-நின் சூளே.
'நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது. - ஓரம்போகியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:14:32(இந்திய நேரம்)