தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கள்ளி

16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?
பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?
பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லை

154. பாலை
யாங்கு அறிந்தனர்கொல்- தோழி! - பாம்பின்
உரி நிமிர்ந்தன்ன உருப்பு அவிர் அமையத்து,
இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளி,
பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை
பொரிகாற் கள்ளி விரிகாய் அம் கவட்டுத்
தயங்க இருந்து, புலம்பக் கூஉம்
அருஞ் சுர வைப்பின் கானம்
பிரிந்து, சேண் உறைதல் வல்லுவோரே?
பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்து, தலைமகள் தோழிக்கு உரைத்தது.- மதுரைச் சீத்தலைச் சாத்தன்

174. பாலை
பெயல் மழை துறந்த புலம்பு உறு கடத்துக்
கவை முடக் கள்ளிக் காய் விடு கடு நொடி
துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார், நத்துறந்து,
பொருள்வயிற் பிரிவார்ஆயின், இவ் உலகத்துப்
பொருளே மன்ற பொருளே;
அருளே மன்ற ஆரும் இல்லதுவே.
பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - வெண்பூதி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:14:38(இந்திய நேரம்)