தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


ஆம்பல்

46. மருதம்
ஆம்பற் பூவின் சாம்பல் அன்ன
கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி, மன்றத்து
எருவின் நுண் தாது குடைவன ஆடி,
இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும்
புன்கண் மாலையும், புலம்பும்,
இன்றுகொல்-தோழி!-அவர் சென்ற நாட்டே?
பிரிவிடை 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது. - மாமிலாடன்.

80. மருதம்
கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும் புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையளாயின், வெம் போர்
நுகம் பட கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடு காக்க, தன் கொழுநன் மார்பே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது. - ஒளவையார்

84. பாலை
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன்

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.
வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

122. நெய்தல்
பைங் கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
தலைமகள் பொழுது கண்டு அழிந்தது. - ஓரம்போகியார்

178. மருதம்
அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு, இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்;
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர்; நோகோ யானே.
கடிநகர் புக்க தோழி, தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, முன்னர்க் களவுக் காலத்து ஒழுகலாற்றினை நினைந்து, அழிந்து கூறியது. - நெதும்பல்லியத்தை

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:16:36(இந்திய நேரம்)