தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


காந்தள் (கோடல், தோன்றி)

1. குறிஞ்சி
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
தோழி கையுறை மறுத்தது. - திப்புத்தோளார்

62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார்

84. பாலை
பெயர்த்தனென் முயங்க, 'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.
மகள்போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - மோசிகீரன்

100. குறிஞ்சி
அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது: அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - கபிலர்

107. மருதம்
குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன
தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல்!-
நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும்
பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி,
கடு நவைப் படீஇயரோ, நீயே-நெடு நீர்
யாணர் ஊரனொடு வதிந்த
ஏம இன் துயில் எடுப்பியோயே!
பொருள் முற்றி வந்த தலைமகனை உடைய கிழத்தி காமம் மிக்க கழிபடர் கிளவியால் கூறியது. - மதுரைக் கண்ணனார்.

185. குறிஞ்சி
'நுதல் பசப்பு இவர்ந்து, திதலை வாடி,
நெடு மென் பணைத் தோள் சாஅய், தொடி நெகிழ்ந்து,
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும்' எனச்
சொல்லின், எவன் ஆம்-தோழி!-பல் வரிப்
பாம்பு பை அவிந்தது போலக் கூம்பி,
கொண்டலின் தொலைந்த ஒண் செங் காந்தள்
கல்மிசைக் கவியும் நாடற்கு, என்
நல் மா மேனி அழி படர் நிலையே?
தலைமகன் இரா வந்து ஒழுகா நின்ற காலத்து வேறுபட்ட தலைமகளை,'வேறு பட்டாயால்' என்றாட்குக் கிழத்தி உரைத்தது. - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

239. குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம். - ஆசிரியன் பெருங்கண்ணன்

259. குறிஞ்சி
மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,
அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்
முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,
பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!
ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,
நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்
பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?
நெஞ்சம் நன்றே, நின் வயினானே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, 'யானே பரி கரிப்பல்'என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது. - பரணர்.

265. குறிஞ்சி
காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,
வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்
தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,
இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை
யான் தனக்கு உரைத்தனென் ஆக,
தான் நாணினன், இஃது ஆகாவாறே.
வரையாது பிரிந்த இடத்து, 'அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்' எனத் தோழி தலைமகட்குக் கூறியது. - கருவூர்க் கதப்பிள்ளை

284. குறிஞ்சி
பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ?-
வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
வரைவிடைத் தோழி, கிழத்திக்கு உரைப்பாளாய், உரைத்தது. - மிளைவேள் தித்தன்

361. குறிஞ்சி
அம்ம வாழி, தோழி!-அன்னைக்கு
உயர்நிலை உலகமும் சிறிதால்-அவர் மலை
மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு
காலை வந்த முழுமுதற் காந்தள்
மெல் இலை குழைய முயங்கலும்,
இல் உய்த்து நடுதலும், கடியாதோளே.
வரைவு மலிந்தவழித் தோழி, 'நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி சொல்லியது.- கபிலர்

373. குறிஞ்சி
நிலம் புடைபெயரினும், நீர் திரிந்து பிறழினும்,
இலங்கு திரைப் பெருங் கடற்கு எல்லை தோன்றினும்,
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடு எவன் உடைத்தோ-தோழி!-நீடு மயிர்க்
கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை
புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக்கனி
காந்தள்அம் சிறுகுடிக் கமழும்
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே?
அலர் மிக்கவழி ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.- மதுரைக் கொல்லன் புல்லன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:17:20(இந்திய நேரம்)