தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


குவளை

13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.
தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்

30. பாலை
கேட்டிசின் வாழி-தோழி!-அல்கல்,
பொய்வலாளன் மெய் உற மரீஇய
வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட, ஏற்று எழுந்து,
அமளி தைவந்தனனே; குவளை
வண்டு படு மலரின் சாஅய்த்'
தமியென்; மன்ற அளியென் யானே!
'அவர் நின்னை வரைந்து கோடல் காரணத்தால் பிரியவும், நீ ஆற்றியிராது,ஆற்றாயாகின்றது என்?' என வினாய தோழிக்குத் தலைமகள்,'யான் ஆற்றியுள்ளேனாகவும், கனவு வந்து என்னை இங்ஙனம் நலி

59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார்

62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

167. முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

270. முல்லை
தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென
வீழ் உறை இனிய சிதறி, ஊழின்
கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்
பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,
செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு
இவளின் மேவினம் ஆகி, குவளைக்
குறுந் தாள் நாள்மலர் நாறும்
நறு மென் கூந்தல் மெல் அணையேமே.
வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.- பாண்டியன் பன்னாடு தந்தான்.

291. குறிஞ்சி
சுடு புன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
இசையின் இசையா இன் பாணித்தே;
கிளி, 'அவள் விளி' என, விழல் ஒல்லாவே;
அது புலந்து அழுத கண்ணே, சாரல்
குண்டு நீர்ப் பைஞ் சுனைப் பூத்த குவளை
வண்டு பயில் பல் இதழ் கலைஇ,
தண துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே.
பாங்கற்கு உரைத்தது. - கபிலர்

300. குறிஞ்சி
குவளை நாறும் குவை இருங் கூந்தல்,
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய்,
குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன
நுண் பல் தித்தி, மாஅயோயே!
நீயே, அஞ்சல்' என்ற என் சொல் அஞ்சலையே;
யானே, குறுங் கால் அன்னம் குவவு மணற் சேக்கும்
கடல் சூழ் மண்டிலம் பெறினும்,
விடல் சூழலன் யான், நின்னுடை நட்பே.
இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சமும் வன்புறையும் கூறியது.- சிறைக்குடி ஆந்தையார்

321. குறிஞ்சி
மலைச் செஞ் சாந்தின் ஆர மார்பினன்,
சுனைப் பூங் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன்,
நடு நாள் வந்து, நம் மனைப் பெயரும்-
மடம் ஆர் அரிவை! நின் மார்பு அமர் இன் துணை;
மன்ற மரையா இரிய, ஏறு அட்டு,
செங் கண் இரும் புலி குழுமும்; அதனால்,
மறைத்தற் காலையோ அன்றே;
திறப்பல் வாழி-வேண்டு, அன்னை!-நம் கதவே.
தோழி கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து அறத்தோடு நிற்பேன் என்றது.

339. குறிஞ்சி
நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை
உறை அறு மையின் போகி, சாரல்
குறவர் பாக்கத்து இழிதரும் நாடன்
மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல்
இனிதுமன் வாழி-தோழி!-மா இதழ்க்
குவளை உண்கண் கலுழப்
பசலை ஆகா ஊங்கலங்கடையே.
வரைவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி கடுஞ் சொல்லி வற்புறீஇயது. - பேயார்

342. குறிஞ்சி
கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்,
கடியுடை மரம்தொறும் படு வலை மாட்டும்
குன்ற நாட! தகுமோ-பைஞ் சுனைக்
குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த,
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே?
செறிப்பு அறிவுறுக்கப்பட்டான் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டின தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லி, வரைவு கடாயது.- காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்

346. குறிஞ்சி
நாகு பிடி நயந்த முளைக்கோட்டு இளங் களிறு,
குன்றம் நண்ணி, குறவர் ஆர்ப்ப,
மன்றம் போழும் நாடன்-தோழி!-
சுனைப் பூங் குவளைத் தொடலை தந்தும்,
தினைப் புன மருங்கில் படுகிளி ஓப்பியும்,
காலை வந்து, மாலைப் பொழுதில்
நல் அகம் நயந்து, தான் உயங்கிச்
சொல்லவும் ஆகாது அஃகியோனே.
தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது. - வாயில் இளங்கண்ணன்

388. குறிஞ்சி
நீர் கால்யாத்த நிரை இதழ்க் குவளை
கோடை ஒற்றினும் வாடாதாகும்;
கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ
உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்தன்ன
முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்,
யானை கைம்மடித்து உயவும்
கானமும் இனிய ஆம், நும்மொடு வரினே.
தலைமகள் உடன்போக்கு நேர்ந்தமை உணர்ந்த தலைமகன், சுரத்து வெம்மையும்,தலைமகள் மென்மையும் குறித்து, செலவு அழுங்கலுறுவானைத் தோழி அழுங்காமற் கூறியது. - ஒளவையார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:17:38(இந்திய நேரம்)