தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


நெய்தல்

9. நெய்தல்
யாய் ஆகியளே மாஅயோளே-
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே.
தலைமகற்குத் தோழி வாயில் நேர்ந்தது. - கயமனார்

227. நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.
சிறைப்புறம். - ஓத ஞானி

296. நெய்தல்
அம்ம வாழி-தோழி!-புன்னை
அலங்குசினை இருந்த அம் சிறை நாரை
உறுகழிச் சிறு மீன் முனையின், செறுவில்
கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும்
தண்ணம் துறைவற் காணின், முன் நின்று,
கடிய கழறல் ஓம்புமதி-'தொடியோள்
இன்னள் ஆகத் துறத்தல்
நும்மின் தகுமோ?' என்றனை துணிந்தே.
காணும் பொழுதிற் காணப் பொழுது பெரிதாகலான், ஆற்றாளாய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - பெரும்பாக்கன்

309. மருதம்
கைவினை மாக்கள் தம் செய் வினை முடிமார்,
சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட,
நீடிய வரம்பின் வாடிய விடினும்,
'கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம்' என்னாது'
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம்-பெரும!-
நீ எமக்கு இன்னாதன பல செய்யினும்,
நின் இன்று அமைதல் வல்லாமாறே.
பரத்தையிற் பிரிந்து வந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.- உறையூர்ச் சல்லியன் குமாரன்

336. குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே,
தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன்

397. நெய்தல்
நனை முதிர் ஞாழற் தினை மருள் திரள் வீ
நெய்தல் மா மலர்ப் பெய்த போல
ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப!
தாய் உடன்று அலைக்கும் காலையும், வாய்விட்டு,
'அன்னாய்!' என்னும் குழவி போல,
இன்னா செயினும் இனிது தலையளிப்பினும்,
நின் வரைப்பினள் என் தோழி;
தன் உறு விழுமம் களைஞரோ இலளே.
வரைவிடை வைத்து நீங்கும் தலைமகற்குத் தோழி உரைத்தது. - அம்மூவன்

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:18:34(இந்திய நேரம்)