தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


புன்னை

299. நெய்தல்
இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்,
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்,
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன், எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி,
தணப்பின் ஞெகிழ்ப, எம் தட மென் தோளே?
சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - வெண்மணிப் பூதி

303. நெய்தல்
கழி தேர்ந்து அசைஇய கருங் கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங் கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள்மன் என் தோழி-என்னொடும்
இன் இணர்ப் புன்னைஅம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது. - அம்மூவன்

311. நெய்தல்
அலர் யாங்கு ஒழிவ-தோழி!-பெருங் கடல்
புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும்,
நில்லாது கழிந்த கல்லென் கடுந் தேர்
யான் கண்டன்றோஇலனே; பானாள்
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத்
தாது சேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே?
அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது. - சேந்தன்கீரன்

318. நெய்தல்
எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்,
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்,
வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன்
குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று
அறியாற்கு உரைப்பலோ, யானே? எய்த்த இப்
பணை எழில் மென் தோள் அணைஇய அந் நாள்
பிழையா வஞ்சினம் செய்த
களவனும், கடவனும், புணைவனும், தானே.
கிழவன் கேட்கும் அண்மையன் ஆகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - அம்மூவன்

320. நெய்தல்
பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.
அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.- தும்பிசேர் கீரன்

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, 'நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?'என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:19:24(இந்திய நேரம்)