தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


முல்லை

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர்

62. குறிஞ்சி
'கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

108. முல்லை
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குக் கூறியது. - வாயிலான் தேவன்

126. முல்லை
'இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே-தோழி!-நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தி

162. முல்லை
கார் புறந்தந்த நீருடை வியன் புலத்துப்
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை-
முல்லை! வாழியோ, முல்லை!-நீ நின்
சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை;
நகுவை போலக் காட்டல்
தகுமோ, மற்று-இது தமியோர்மாட்டே?
வினை முற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.- கருவூர்ப் பவுத்திரன்.

188. முல்லை
முகை முற்றினவே முல்லை; முல்லையொடு
தகை முற்றினவே, தண் கார் வியன் புனம்-
வால் இழை நெகிழ்த்தோர் வாரார்-
மாலை வந்தன்று, என் மாண் நலம் குறித்தே.
பருவங் கண்டு அழிந்த கிழத்தி தோழிக்கு உரைத்தது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

193. முல்லை
மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே;
இன்றும், முல்லை முகை நாறும்மே.
தோழி கடிநகர் புக்கு, 'நலம் தொலையாமே நன்கு ஆற்றினாய்!' என்றாட்குக் கிழத்தி உரைத்தது - அரிசில் கிழார்

220. முல்லை
பழ மழைக் கலித்த புதுப் புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை,
வெருகு சிரித்தன்ன, பசு வீ மென் பிணிக்
குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின்
வண்டு சூழ் மாலையும், வாரார்;
கண்டிசின்-தோழி!-பொருட் பிரிந்தோரே.
பருவ வரவின்கண் கிழத்தி தோழிக்கு உரைத்தது. - ஒக்கூர் மாசாத்தி

221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன்

234. முல்லை
சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,
எல்லுறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார், மயங்கியோரே:
குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்
பெரும் புலர் விடியலும் மாலை;
பகலும் மாலை-துணை இலோர்க்கே.
பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

240. முல்லை
பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக்
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர்
வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி,
வாடை வந்ததன் தலையும், நோய் பொர,
கண்டிசின் வாழி-தோழி!-தெண் திரைக்
கடல் ஆழ் கலத்தின் தோன்றி,
மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தல் கொல்லன் அழிசி.

323. முல்லை
எல்லாம் எவனோ? பதடி வைகல்-
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ,
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசு முகைத் தாது நாறும் நறு நுதல்
அரிவை தோள்-அணைத் துஞ்சிக்
கழிந்த நாள் இவண் வாழும் நாளே,
வினைமுற்றினான் பாகற்கு உரைத்தது. - பதடி வைகலார்

348. பாலை
தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும்
காணார்கொல்லோ-மாணிழை!-நமரே?
செலவுக் குறிப்பு அறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது. - மாவளத்தன்

358. மருதம்
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; 'ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன்

382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்
கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:19:48(இந்திய நேரம்)